சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்காக விராட் கோலி உள்ளிட்ட ஆர்சிபி வீர்ர்கள் இன்று காலையில் சென்னைக்கு வந்தனர். சென்னை விமான நிலையத்துக்கு வந்த விராட் கோலிக்கும், மற்ற ஆர்சிபி வீர்ர்களுக்கும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று பெங்களூருவில் நடந்த ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்ச்சியின்போது ஆர்சிபி அணியின் பெயர், லோகோ ஆகியவை மாற்றப்பட்டன. இதன்படி நேற்றுவரை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் என அழைக்கப்பட்ட ஆர்சிபி அணி, இனி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு என அழைக்கப்படும். ஆர்சிபி அணிக்கான புதிய ஜெர்சியும் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விராட் கோலி, “என்னை கிங் கோலி என்று சிலர் அழைக்கும்போது எனக்கு கூச்சமாக இருக்கிறது. இதைப்பற்றி பஃப் டுபிளஸியிடம் நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். எனவே என்னை கிங் என்று அழைப்பதை ரசிகர்கள் நிறுத்த வேண்டும். விராட் என்று மட்டும் அழைக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பந்துவீச தயார் – அறிவித்தார் ஹர்திக் பாண்டியா
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக கருதப்படுபவர் ஹர்த்திக் பாண்டியா. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலையை கருத்தில் கொண்டு பல போட்டிகளில் அவர் பந்துவீசவில்லை. உலகக் கோப்பை போட்டியின்போது பந்துவீசிய அவர், அப்போது ஒரு பந்தை தடுத்ததால் காயம் அடைந்தார். அதனால் சில மாதங்களாக அவரால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியவில்லை.
இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்த்திக் பாண்டியா, இந்த ஐபிஎல் தொடரில் தான் பந்துவீசப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, “கடந்த கால காயங்கள் விஷயத்திலும், என் உடல் தகுதி விஷயத்திலும் நான் செய்வதற்கு ஏதும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் நான் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன். இந்த ஐபிஎல் தொடரில் நான் பந்து வீசுவேன்” என்று கூறியுள்ளார்.
ஹர்திக் பந்து வீசுவதாக அறிவித்தது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உற்சாகம் அளித்தாலும், காயத்தால் முதல் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவால் ஆட முடியுமா என்ற சந்தேகம் அந்த அணிக்கு கவலையைக் கொடுத்துள்ளது.
ஐபிஎல் துபாய்க்கு போகாது – ஜெய் ஷா
இந்தியால் நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாக ஆட்டங்கள் துபாயில் நடக்கும் என்று சில தகவல்கள் வெளியாகின. ஆனால் ஐபிஎல்லில் இரண்டாவது பாகம் துபாயில் நடக்காது. இந்தியாவிலேயே முழு தொடரும் நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு ஏப்ரல் 7-ம் தேதி வரையிலான ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகி இருக்கிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ற விதத்தில் அடுத்தகட்ட போட்டிகள் நட்த்தப்பட உள்ளன. இதற்கு ஏற்ற வகையில் புதிய பட்டியலை வெளியிடும் முயற்சிகளில் ஐபிஎல் நிர்வாக கமிட்டி இறங்கியுள்ளது.