இந்த ஐபிஎல்லில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார் யஸ்வேந்திர சாஹல். ஆனால் சாஹலின் லக்கி ஸ்டார், அவரது மனைவி தனுஸ்ரீ வர்மா. ஐபிஎல்லில் கணவர் ஆடும் போட்டிகளைக் காண தவறாமல் மைதானத்தில் ஆஜராகி விடுகிறார் தனுஸ்ரீ.
பார்வையாளர் வரிசையில் மனைவி இருப்பதைப் பார்த்ததும் சாஹலும் உற்சாகமாகி விடுகிறார். இந்த உற்சாகத்தில்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் சாஹல்.
இதுபற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் சாஹல் வெளியிட்ட பதிவில், “என் மனைவி என்னுடன் இருக்கும்போது எனக்கு கூடுதல் தன்னம்பிக்கை பிறக்கிறது. அவர் எனக்கு நேர்மறை எண்ணங்களையும் கூடுதல் பலத்தையும் தருகிறார். ஐபிஎல் போட்டிகளில் ஆடும்போது பார்வையாளர் வரிசையில் தனுஸ்ரீயைக் காணும்போது எனக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. அவள் என் பக்கம் இருப்பது எனக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தருகிறது” என்று கூறியுள்ளார்.
அதிக வரி கட்டும் தோனி
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், தோனியின் காட்டில் பணமழை பெய்வது இன்னும் நிற்கவில்லை. கடந்த நிதியாண்டில் ஜார்கண்ட் மாநிலத்திலேயே அதிக அளவில் வருமான வரி கட்டியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தோனி. கடந்த நிதியாண்டில் மட்டும் வருமான வரியாக தோனி கட்டிய தொகை 38 கோடி ரூபாய்.
விளம்பரங்கள், நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள், விளையாடுவதற்காக வாங்கும் பணம் என்று கடந்த ஆண்டில் மட்டும் தோனி 130 கோடி ரூபாயைச் சம்பாதித்திருப்பதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஹர்த்திக்கை கவர்ந்த தமிழக வீரர்
இந்த ஐபிஎல்லி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் தமிழக வீரர் சாய் சுதர்சன். குஜராத் டைட்டன்ஸ் அணியின் impact player-ஆக 2 போட்டிகளில் ஆடிய சாய் சுதர்சன் அதில் மொத்தம் அந்த 2 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்த போட்டிகளில் அவர் மொத்தம் 84 ரன்களைக் குவித்துள்ளார்.
அவரது ஆட்டத்தை புகழ்ந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “21 வயதான சாய் சுதர்சன் குஜராத் அணியின் மிக முக்கிய வீரராக மாறியுள்ளார். இப்படியே போனால் இன்னும் 2 ஆண்டுகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக மாறிவிடுவார்” என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் தோனிக்கு அடுத்து மிகப்பெரிய கேப்டனாக ஹர்த்திக் பாண்டியா உருவாகி வருகிறார். தோனியைப் போலவே தன்னைக் கவர்ந்த வீரர்களை இந்திய அணியில் ஆடவைத்து வருகிறார். அதனால் ஹர்த்திக்கின் பாராட்டு, எதிர்காலத்தில் சுதர்சனுக்கு இந்திய அணியின் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.