‘State of the Global Workplace 2025 Report’ என்ற தலைப்பில் சமீபத்தில் கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் தற்போதைய வேலைகளை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகக் காட்டுகிறது. இதற்கு பணியிடத்தில் அவர்களுக்கு ஏற்படும் அதிக மன அழுத்தம், வளர்ந்து வரும் அதிருப்தி மற்றும் வேலையில் ஆதரவு இல்லாமை போன்றவை முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகின்றது.
பணியிடம் மற்றும் பொது கருத்து ஆராய்ச்சிக்கு பெயர் பெற்ற இந்த உலகளாவிய பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்காசியாவில், உலகின் மிகக் குறைந்த சதவீத ஊழியர்கள் மட்டுமே தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் உணர்வதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவில், 30% தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்தை உணர்கிறார்கள் என்றும், 34% பேர் தொடர்ந்து வேலையில் கோபத்தை அனுபவிக்கிறார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது. அத்துடன் அதிக பணிச்சுமை, மோசமான மேலாண்மை மற்றும் ஊக்கமளிக்காத பணிச்சூழல் போன்றவை ஊழியர்களின் மன அழுத்தத்திற்கு காரணம் என்று குறிப்பிடுகிறது.
அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் ஊழியர் ஈடுபாடும் 33% இலிருந்து 30% ஆகக் குறைந்து வருகிறது, இது வேலையில் உந்துதல் மற்றும் ஆர்வத்தில் வீழ்ச்சியைக் குறிக்கிறது. இதன் விளைவாக பெரிய உற்பத்தி இழப்புகள் ஏற்பட்டுள்ளன, நிறுவனங்களுக்கு 438 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், கிட்டத்தட்ட இரண்டு இந்திய ஊழியர்களில் ஒருவர் அதாவது, சுமார் 50% பேர் புதிய வேலைகளைத் தீவிரமாகத் தேடுகிறார்கள். சோர்வு, மோசமான தலைமைத்துவம் மற்றும் பாராட்டப்படாத உணர்வு ஆகியவை பலரை வேலையை விட்டு வெளியேறுவதைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகின்றன என்று கேலப் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது