No menu items!

India To USA கொடுமை – 80 லட்சம் ரூபாய், காடு, மலை, கழுதை, விமானம்…!

India To USA கொடுமை – 80 லட்சம் ரூபாய், காடு, மலை, கழுதை, விமானம்…!

அமெரிக்க வெளியுறவுத் துறை சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, உலக அளவில் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பத்து பேரில் ஒருவர் இந்தியர். இது சட்டப்பூர்வமாக விண்ணப்பிப்பவர்கள் கணக்கு. சட்ட விரோதமாக குடியேறுபவர்களிலும் இந்தியர்கள் எண்ணிக்கை மிக அதிகம். ஏன் இந்தியர்கள் அமெரிக்கா செல்ல விரும்புகிறார்கள்?

திருப்பி அனுப்பப்பட்ட இந்திய விமானம்!

சென்ற வருடம் கடைசியில் நிகழ்ந்த சம்பவம் இது. துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று எரிபொருள் நிரப்ப பிரான்ஸின் வத்ரி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் ஆள் கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்த நிலையில், திடீரென பிரான்ஸ் அதிகாரிகள் அந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தினர். அதில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்களிடம் 4 நாட்கள் வரை விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அது சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயற்சிப்பவர்களை ஏற்றிச் செல்லும் விமானம் என்பது தெரிய வந்தது.

நான்கு நாட்கள் விசாரணைக்குப் பிறகு அந்த விமானம் கிளம்ப அனுமதி தரப்பட்டது. ஆனால், நிகரகுவா நோக்கி அல்ல, இந்தியாவை நோக்கி. 276 இந்தியப் பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் மும்பைக்கு வந்து இறங்கியது. அதில் 60க்கும் மேற்பட்டோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்களாக இருந்தனர். துபாய் வழியாக நிகரகுவாவுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதே அவர்கள் திட்டமாக இருந்தது.

அவர்கள் இம்மிகிரேஷன் ஏஜெண்டுகளுக்கு ரூ. 60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த இம்மிகிரேஷன் ஏஜெண்டுகள் தான் லத்தீன் அமெரிக்க நாடான நிகரகுவாவில் இருந்து இவர்களைச் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல இருந்தனர். தங்கள் ஆட்கள் நிகரகுவாவில் இருந்து அமெரிக்க எல்லைக்கு அழைத்துச் செல்வதாகவும், பின்னர் எல்லையைக் கடக்க உதவுவதாகவும் ஏஜெண்டுகள் உறுதி அளித்துள்ளனர்.

ஏஜெண்டுகள் திட்டப்படி இந்த 66 பயணிகளும் டிசம்பர் 10 முதல் 20 வரை அகமதாபாத், மும்பை, டெல்லியில் இருந்து துபாய் சென்றுள்ளனர். பிறகு, ஏஜெண்டுகள் சொன்னபடி புஜைரா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நிகரகுவா செல்லும் விமானத்தில் ஏறினர். அந்த ஏஜெண்டுகள் அவர்களுக்கு துபாயிலிருந்து நிகரகுவாவின் விசாவை எப்படிப் பெற்றனர்; தனியார் விமானத்தை எப்படி முன்பதிவு செய்தனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

பொதுவாக இதுபோல் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை அழைத்துச் செல்லும் விமானத்தை கழுதை விமானம் என்கிறார்கள்.  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ‘டங்கி’ திரைப்படத்தின் கதை இதுபோல் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறுவதை அடிப்படையாகக் கொண்டது. ‘டங்கி’ என்பது ‘ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது’ என்ற பொருளில் பஞ்சாபி மொழியில் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க கனவும் கடினமான பயணமும்

இந்த டங்கி என்கின்ற ஆபத்தான இடம்பெயர்வு பாதைகள் வழியாகவே இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளுக்கு செல்கின்றனர். இந்த மனித கடத்தலுக்கு பின்னால் சர்வதேச நெட்வொர்க் உள்ளது. இந்த நெட்வொர்க் ஆட்கள் எல்லா நாடுகளில் இருக்கிறார்கள், இவர்கள் திட்டங்கள் கச்சிதமாக உள்ளன. என்றாலும், பல நாடுகள், காடு, மலை, ஆறுகள், கழுதை விமானம் என இந்த பயணம் மிக ஆபத்தானது. அமெரிக்கா செல்லும் பயணத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இதுபோல் தோல்வியடையும் பயணங்களும் அனேகம்.

பஞ்சாபை சேர்ந்த குல்தீப் சிங் போபராய் என்பவர் இதுபோல் ‘டங்கி’ முறையில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். ஆனால், அமெரிக்காவில் பிடிபட்டு, இந்தியா திருப்பி அனுப்பப்பட்டார். இவர் தனது அனுபவத்தை சொல்லும்போது, “அமெரிக்காவுக்குச் செல்லும் எனது கனவை நிறைவேற்ற நான் எனது வாழ்க்கையின் முக்கியமான நான்கு ஆண்டுகளை வீணடித்தேன். 33 லட்சம் ரூபாயை இழந்தேன், நிலத்தையும் இழந்தேன்’ என்கிறார்.

தொடர்ந்து, “ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. இதற்காக, கடந்த 2010ஆம் ஆண்டு முதலில் சிங்கப்பூர் சென்றேன். அங்கிருந்து ஈராக்கிற்கு டிரைவராக சென்றேன். அதற்கு மேல் நகர முடியாமல் 2012இல் இந்தியா திரும்பினேன்.

பின்னர் அமெரிக்காவில் வசிக்கும் எனது நண்பர் ஜக்ஜித் சிங்கைத் தொடர்பு கொண்டேன். அவர் மூலம் ஒரு முகவரை தொடர்புகொண்டேன். இந்த முறை ஒரு குழுவுடன் நான் சேர்க்கப்பட்டேன். முதலில் நாங்கள் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவுக்குச் சென்றோம். அங்கே அதிக நாட்கள் தங்க வேண்டியிருந்தது. ஆனால், அங்குள்ள உணவு எனக்கு பிடிக்கவில்லை. அதனால், இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு ஏஜெண்டிடம் கேட்டேன். இதையடுத்து பிரேசில் ஏஜெண்ட் ஒருவர் பிரேசிலில் வேலைக்கு சேர்த்து விட்டார். பிரேசிலில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்ப 30,000 டாலர் கேட்டார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லாததால், விமானத்தில் செல்வதற்கு பதிலாக, 15,000 அமெரிக்க டாலர் செலவில், தரைவழியாக செல்ல வேண்டும் எனக் கூறினார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

பின்னர் என்னையும் எனது நண்பரையும் பேருந்து, டாக்சி என மாற்றி மாற்றி அழைத்து சென்றனர்.  ஈக்வடாரில் நுழைந்தோம். அங்கிருந்து பேருந்தில் கொலம்பியாவை அடைந்தோம். அங்கு ஒருவரின் வீட்டில் எங்களை தங்க வைத்தனர்.

பின்னர் நாங்கள் கொலம்பியாவில் இருந்து கடல் வழியாக குவாத்தமாலாவிற்குள் நுழைந்தோம். இது என் வாழ்க்கையின் மிக மோசமான பயணம். நாங்கள் கிட்டத்தட்ட ஆறு நாட்களை குவாத்தமாலா வெப்பத்தில் விசிறிகூட இல்லாமல் கழித்தோம்.

அங்கிருந்து பனாமாவை அடைய காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடக்க வேண்டியிருந்தது. ​​ கழுத்து வரை தண்ணீர் இருந்த ஒரு ஆற்றையும் கடந்தோம். முதலில் 8 கிலோ தண்ணீர் மற்றும் பிற பானங்கள் கொடுத்திருந்தார்கள். அது தீர்ந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலையில் உடன் வந்தவரிடம் கொஞ்சம் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னார்கள். ஆனால், அவர் ஒரு சில துளிகள் தண்ணீரை மட்டுமே தந்தார். என் வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த தருணம் இருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாங்கள் பனாமாவிற்குள் நுழைந்தோம். ‘பனாமாவில் உங்கள் உண்மையான நாடான இந்தியாவின் பெயரைக் குறிப்பிட வேண்டாம். இல்லையெனில், அவர்கள் உங்களை நாடு கடத்துவார்கள்’ என்று ஏஜெண்ட் எங்களிடம் கூறினார். எனவே, அங்கு நாங்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அமெரிக்காவிற்குச் செல்கிறோம் என்றும் அதிகாரிகளிடம் சொன்னோம்.

பிறகு சால்வடார், அதன் பிறகு மெக்சிகோவிற்குள் நுழைய முடிந்தது. நாங்கள் மெக்சிகோவிற்குள் நுழைந்ததும், எங்கள் ஏஜெண்ட் ஒருவர் எங்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு பின்னால் படுக்கச் சொன்னார். அவர் மீண்டும் ஒரு இடத்தில் எங்களை இறக்கிவிட்டார். அங்கிருந்து இரண்டு மலைகளை நடந்தே கடக்கச் சொன்னார்கள். மெக்ஸிகோவில் நாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டுக்காரர், உள்ளூர் மாஃபியாவின் அச்சுறுத்தல் காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரித்தார்.

இறுதியாக ஒரு நதியைக் கடந்து எனது கனவு நாடான அமெரிக்காவை அடைந்தேன். ஆனால், அந்த மகிழ்ச்சி சிறிது நேரம்கூட நிலைக்கவில்லை. அமெரிக்க எல்லையிலேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டேன்.

போலீசாரும் நிர்வாகமும் என்னை விசாரித்தார்கள். பின்னர் சிறையில் உறைபனியில் வைக்கப்பட்டேன். என்னை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப் போகிறார்கள் என்று சொன்னதும் என் தலையில் இடி விழுந்ததைப்போல இருந்தது. நிலம், 30 லட்சம் ரூபாய் பணம், இத்தனை வருடங்கள் அலைச்சல் எல்லாம் அர்த்தமில்லாமல் ஆனது.

நீதிமன்றத்தில் முறையீடு செய்தேன். ஆனால், நீதிமன்றம் அதை நிராகரித்தது. மீண்டும் இரண்டாவது முறை முறையிட்டேன். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் 22 மாதங்கள் தடுப்பு மையத்தில் இருந்தேன்.  பின்னர் தான் விடுவிக்கப்பட்டு குடியேற்ற அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டேன். ​அவர்கள் இந்தியத் தூதரகத்தில் இருந்து எனது பாஸ்போர்ட்டைக் கண்டுபிடித்ததாகவும், அதைக் காவலில் எடுத்துக்கொண்டதாகவும், அது தான் அமெரிக்காவில் எனது கடைசி நாள் என்றும் சொன்னார்கள்.

2016இல் இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பப்பட்டேன். அமெரிக்காவில் கடினமாக உழைத்து, எனது பெற்றோருக்கும் எனது குடும்பத்திற்கும் ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்க திட்டமிட்டிருந்தேன். அனைத்தும் சிதைந்து போனது” என்கிறார் குல்தீப்.

பாதியில் முறிந்த பயணம்

அமெரிக்க எல்லைக்கு மிக அருகில் இருக்கிறது மெக்சிகோவின் டிஜுவானா நகரம். அமெரிக்காவுக்குள் நுழையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாள்தோறும் இந்நகரத்தில் குவிந்து வருகின்றனர். டிஜுவானாவில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் தங்குமிடங்கள், பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. ஆனால், அதிகமானோர் ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் தான்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து அமெரிக்காவில் நுழைவதற்காக டிஜுவானாவில் காத்திருக்கும்  சோபியா, சுக்ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவர் கதையும் குல்தீப் கதையைவிட கொடுமையானது.

‘ஆப்கானிஸ்தானில் எங்களுக்கு எதிர்காலம் இல்லை. எனவே, அமெரிக்காவில் குடியேற விரும்பினோம். முதலில் இரான் சென்றோம். பின்னர் பாகிஸ்தான் சென்று அங்கு பல மாதங்கள் காத்திருந்தோம். பிறகு, அங்கிருந்து எகிப்து வழியாக பிரேசில் சென்றோம். பிறகு நடை, பேருந்து, படகுகள், டாக்ஸி என மாறி மாறி அமெரிக்காவிற்கு எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.

பனாமாவின் டேரியன் இடைவெளியை கால்நடையாகக் கடந்தோம். அடர்ந்த காடுகளின் வழியாகவே அழைத்து செல்லப்பட்டோம். அப்போது அங்கிருந்து கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பலர் பொருட்களை இழந்தோம். அத்துடன் நிற்காமல், முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினர், எங்கள் குழுவில் உள்ள ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாக்கி, பணம் எதுவும் மறைத்து வைத்திருக்கிறார்களா என சோதனையிட்டார்கள். மேலும், நாங்கள் மறைத்து வைத்துள்ள பணத்தையும் கொடுக்கும்படி எங்கள் குழந்தைகளை அடித்துக்கொண்டே இருந்தனர். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.

இந்த பயணம் இவ்வளவு கடுமையானது என முதலிலேயே தெரிந்திருந்தால், ஒருபோதும் இந்த வழியாகப் பயணித்திருக்க மாட்டோம். இரவில் காட்டுயிர்களின் சத்தம் கேட்கும். பகலில் மழை பெய்யும். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பெரும்பாலும் குழந்தைகளையும் சொந்தமான பொருட்களையும் சுமந்துகொண்டே மலைகளில் நடக்க வேண்டியிருந்தது.

வழியில் பல சடலங்களையும் கண்டோம். வெள்ளம் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம், அல்லது காட்டுயிர்கள் அவர்களைத் தாக்கியிருக்கலாம், அல்லது துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கலாம்.

எங்கள் குழுவிலேயே எங்களுடன் பயணித்த ஒருவர் ஆற்றைக் கடக்க முயன்றுபோது நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இன்னொரு முறை இரண்டு துண்டாக்கப்பட்ட கைகள் ஆற்றில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதை பார்த்தேன். நாங்கள் அழுதோம்.

இப்போது நாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து அமெரிக்காவை பார்க்க முடிகிறது. சில நூறு அடிகள் நடந்தால் எல்லைச் சுவரைத் தொடலாம். இவ்வளவு தூரம் வந்தும் சில நூறு அடிகளைக் கடப்பதற்காகக் காத்திருப்பது பெரும் சித்திரவதையாக உள்ளது. ஆனாலும், எங்களுக்கு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் திரும்பி செல்வதும் ஆபத்தானது. அமெரிக்கா நட்பு நாடு என்று தாலிபன்களுக்கு தெரியும். அதனால், நான் மீண்டும் ஆப்கனுக்கும் செல்ல முடியாது,” என்கிறார் சோஃபியா.

இந்தியர்கள் ஏன் அமெரிக்கா செல்கிறார்கள்?

எழுத்தாளரும் அரபு நாடுகளில் பணி செய்பவருமான கார்ல் மார்க்ஸ் கணபதி இது தொடர்பாக, “அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாகக் குடியேற விரும்புகிறவர்களை ஒரு வட இந்திய ஏடு நேர்காணல் எடுத்து வெளியிட்டிருந்தது. அதில் குஜராத்திகள் – அவர்கள்தான் சட்ட விரோதக் குடியேற்ற முயற்சியில் உயிரைப் பணயம் வைப்பவர்கள். அவர்கள், இங்கு காலமெல்லாம் உழைத்தாலும் ஒன்றும் தேறுவதில்லை, அதற்கு அமெரிக்கா போன்ற நாட்டிற்குப் போய் கூலிவேலை செய்தாலும் சரி என்று சொல்லியிருக்கிறார்கள்.

இது உடல் உழைப்புத் தரப்பு. ஆனால், நன்கு படித்த ஓரளவு வசதியானவர்களும் கூட இந்தியாவை விட்டு வெளியேறுகிறார்கள். மால்கள், முன்பை விட சிறப்பான போக்குவரத்து வசதிகள், தொழில் நுட்ப ரீதியாக சிறப்பான மருத்துவம் போன்ற வசதிகள் இந்தியாவில் வந்துவிட்ட பிறகும் கூட, இந்த அதிருப்தி ஏன் வளர்ந்துகொண்டே இருக்கிறது?

இந்தியாவின் பொருளியல் தன்னிறைவு கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் சிறப்பாகவே இருக்கிறது. ஆனாலும், இந்தியாவில் பொருளியல் தன்னிறைவு என்பது பாரதூரமான வேறுபாடு கொண்டதாக இருக்கிறது. அதாவது பணம் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான வேறுபாடு அதீதமாகக் கூடியிருக்கிறது.

நாங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம்; அவர்களை மத்திய தர வகுப்பாக மாற்றியிருக்கிறோம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். சிதம்பரமும் ஜெய்ராம் ரமேஷும், மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்கள் மோடியின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள். யாராவது நிபுணர்கள்தான் இதில் தரவுகளுடன் வந்து விளக்க வேண்டும்.

பாஜகவும் காங்கிரஸும் சொல்வது ஒருபக்கம் இருக்க, நாம் அன்றாடம் புழங்கும் வாழ்க்கையை வைத்துச் சொன்னால், மத்திய தர வர்க்கம் மற்றும் அதற்குக் கீழே உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றே நினைக்கிறேன். விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. பல எளிய விஷயங்கள், எட்டாக்கனியாக மாறியிருக்கின்றன. பெரு நகரங்களில் ஒரு தோசையின் விலை 160 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை இருக்கிறது. ஒரு சினிமா + இரவு உணவு + பயணம் என்பது ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் செலவு வைக்கும் காரியமாக மாறியிருக்கிறது. இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை ஒப்பிட்டால் இந்த விலையேற்றம் பத்து மடங்கு ஏறியிருக்கிறது. ஆனால், ஒரு நாள் சம்பளம் 500 ரூபாய் என்பது இப்போதும் கனவாகவே இருக்கிறது. பிளம்பர், கார்பெண்டர் உள்ளிட்ட வகைமைக்குள் வருபவர்களின் சம்பளம் 750 முதல் 1000 ரூபாய் வரை இருக்கிறது. அந்த 1000 ரூபாயில் என்ன செய்துவிட முடியும் என்று யோசித்தால், நிராசையாக இருக்கிறது.

ஆழமாக யோசித்தால், வீடு வாங்குவது, நல்ல உடை, உணவு, பொழுதுபோக்கு உட்பட நுகர்வில் பொது மக்களின் பங்கேற்பு சுருங்கிக் கொண்டே வருவதை கவனிக்க முடியும். இன்றைய வாழ்க்கைச் சூழல், அதீத உழைப்பைக் கோருகிறது. ஆனால், அதற்கு நிகரான பாதுகாப்புணர்வையைத் தருவதில்லை. இதுவே பலரை நாட்டை விட்டுத் துரத்துகிறது” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...