ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதால், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்றது.
இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த பயணத்தின்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடுகிறது. முதல் 3 போட்டிகளுக்குப் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1-1 என சமநிலையில் இருந்தன. இந்த நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி மெல்பர்ன் நகரில் நடந்தது.
இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களையும் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை வெற்றிகொள்ள வேண்டுமென்றால் கடைசி நாளில் 340 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இன்று காலையில் பேட்டிங்கைத் தொடங்கியது.
சொதப்பிய சீனியர்கள்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வாலும், ரோஹித் சர்மாவும் வெற்றி பெறுவதைவிட ஆட்டத்தை டிரா செய்வதிலேயே அதிக கவனத்தைச் செலுத்தினர். மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா, 40 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் கம்மின்ஸின் பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் (0) விராட் கோலி (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்னரே 3 விக்கெட்களை இழந்தது.
இந்திய பேட்டிங் வரிசையில் அனுபவம் மிக்க பேட்ஸ்மேன்களான ரோஹித், கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகிய மூவரும் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவைக் கொடுத்தது. அதிலிருந்து அணியை மீட்கும் முயற்சியில் ஜெய்ஸ்வாலும், ரிஷப் பந்த்தும் ஈடுபட்டனர். தேனீர் இடைவேளை வரை விக்கெட் எதையும் இழக்காமல் அவர்கள் தொடர்ந்து ஆடினர்.
34 ரன்களில் 7 விக்கெட்
ஜெய்ஸ்வால் – ரிஷப் பந்த் ஜோடியின் ஆட்டத்தால் இந்திய அணி ஆட்டத்தை டிரா செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் ஆனால் அந்த நேரத்தில் ரிஷப் பந்த் ஒரு பந்தை அவசரப்பட்டு தூக்கி அடித்து ஆட்டம் இழந்தார். அவர் அவுட் ஆனதும் அடுத்தடுத்து இந்திய விக்கெட்கள் சரிந்தன. இதனால் இந்திய அணி கடைசி செஷனில் வெறும் 34 ரன்களில் கடைசி 7 விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
ரோஹித் சர்மா ஓய்வு?
ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் ஓய்வு பெறவேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகினறன. குறிப்பாக இந்த தொடரில் 3 போட்டிகளில் ஆடி ரன்களை பெரிய அளவில் குவிக்காத ரோஹித் சர்மா, ஓய்வு பெற வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஆடவில்லை. அப்போட்டியில் இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார். இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஜெயித்தது. இப்படி ரோஹித் இல்லாமலை பும்ராவின் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றி, ரோஹித் சர்மாவின் வருகைக்கு பிறகு காணாமல் போனதால், அவர் ஓய்வுபெறுவதற்கான நெருக்குதலை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் இந்திய அணியின் தேர்வாலரான அஜித் அகர்கர், தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் ஓய்வுபெறுவது குறித்து ரோஹித் சர்மாவிடம் பேசுவார் என்றும், இது ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.