இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் புரொமோட்டர் பங்குகளை வாங்குவதாக, ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் (UltraTech Cement) அறிவித்துள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று இந்தியா சிமெண்ட்ஸ். 1946-ம் ஆண்டு எஸ்.என்.என்.சங்கரலிங்க அய்யர் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் சிமெண்ட் தொழிற்சாலை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து என்னும் சிறிய கிராமத்தில் 1949-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட் மற்றும் ராசி கோல்டு என 3 முக்கிய பிராண்டுகளை வைத்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கம் வரை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான என்.சீனிவாசன் வைத்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தால், ஐபிஎல்லில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உருவாக்கியது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக தோனி இருக்கிறார். ராகுல் திராவிட், அஸ்வின் உள்ளிட்ட பலரும் இந்நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார்கள்.
இந்த சூழலில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், கடந்த ஜூன் மாதம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 7,05,64,656 பங்குகளைப் ரூ.268 என்ற விலையில் முதல் பங்கு கைப்பற்றல் ஒப்பந்தம் மூலம் வாங்கியது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.77% பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றியது.
இதை தொடர்ந்து 2வது முறையாக அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர்கள் மற்றும் இணை நிறுவனங்களிடம் இருந்து 10,13,91,231 பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது. இந்த 10.13 கோடி பங்குகளை ஒரு பங்கிற்கு ரூ.390 என மொத்தம் ரூ.3954 கோடி மதிப்பீட்டில் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சுமார் 55 சதவீத பங்குகளை அல்ட்ராடெக் சிமெண்ட் கைப்பற்றுகிறது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை அல்ட்ராடெக் நிறுவனம் வாங்கியதால், அதிலிருந்து என்.சீனிவாசன் வெளியேறுகிறார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாதிப்பு வருமா என்ற சந்தேகம் அதன் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது,