பவதாரிணியின் மறைவு தொடர்பாக மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சு.செந்தில்குமரன் எழுதியுள்ள பதிவு…
பலப்பல ஆண்டுகளுக்கு பிறகு , மீண்டும் இசைஞானி இளையராஜா வீட்டில் நிற்கிறேன், அந்த குயில் குரலின் உடலுக்கு கடைசி அஞ்சலி செலுத்த .
அப்போதுதான் கிட்டத்தட்ட நானே மறந்து போன இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது .
சென்னை வந்த புதிதில் விகடன் நிருபராக இருந்த போது, பிடிச்ச பாட்டு என்ற தலைப்பில் ஒரு பேட்டித் தொடர் எடுத்தேன்
பிரபல இசை அமைப்பாளர்கள் , கவிஞர்கள் பாடகர்களின் வாரிசுகளை சந்தித்து உங்கள் அப்பா (அல்லது அம்மா)வின் பாடல்களில் பிடித்த பாடல் எது என்பதுதான் கேள்வி
இளையராஜாவின் வீட்டுக்கு போன் செய்து அனுமதி பெற்று,, ஒரு மாலை வேளையில் சென்னை முருகேசன் தெருவுக்குள் இருக்கும் அந்த இசை வீட்டுக்குள் முதல் முதலாக நுழைகிறேன் . இளையராஜா வீட்டில் இல்லை .
ஒரு பெண்மணி வந்து ஹாலில் உட்கார வைத்து இதோ வந்துடுவாங்க என்றார்
சில நொடிகளின் முதலில் வந்தார் பவதாரிணி .
அப்போதைய அனுபவக் குறைவு காரணமாக நேரடியாகக் கேட்டேன் . ” சொல்லுங்க .. உங்க அப்பா பாடல்களிலேயே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு எது?”
புன்னகையும் குழந்தைமையும் கலந்த முகம் மற்றும் குரலோடு உடனே திருப்பிக் கேட்டார் . “உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?”
நான் சொன்னேன் . “ஒரு பாட்டு மட்டும்னா என்னால சொல்ல முடியல . “
முடிப்பதற்குள் கேட்டார் . ” உங்களாலேயே சொல்ல முடியல. அவரு எங்க அப்பா . நான் எப்படி சொல்ல முடியும்? ”
அசடு வழிந்தபடி வேறு ஏதோ பேசிக் கொண்டு இருந்து விட்டு சட்டென்று கேட்டேன், ” இப்போ உடனே தோணும் பாட்டு எது? யோசிக்காம சொல்லுங்க ” என்றேன்
யோசிக்காமல் சொன்னார் ” ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா .. மைனா…. ” ஆனந்தக்கும்மி படப் பாட்டு
அப்புறம் கார்த்திக்கும் யுவனும் வந்து அமர்ந்து தங்களுக்குப் பிடித்த பாடல்களையும் சொன்னார்கள் (“மெல்ல மெல்ல என்னைத் தொட்டு – கார்த்திக் ராஜா . “காதலின் தீபம் ஒன்று ”- யுவன் )
அன்று எந்த ஹாலின் வலது புறத்தில் நாங்கள் உட்கார்ந்து பேசினோமோ (உட்புறம் வடிவம் மாறி இருப்பது போலவும் எனக்கு இப்போது தோன்றுகிறது. தவறாகவும் இருக்கலாம்) அதற்கு இடது புறம் அதே ஹாலின் இடது புறத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் பவதாரிணியின் உடல் கண்டபோது கலங்கி உடைந்தேன்