சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள விவகாரம் கல்வித் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெகநாதன் கைது ஏன்?
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து கடந்த மாதம் 23ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த பூட்டர் பவுண்டேஷன் விவகாரமும் தற்போது துணைவேந்தர் ஜெகநாதன் கைதாகக் காரணம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
கொளத்தூர் மணி தனது அறிக்கையில், “சேலத்தில் பெரியார் பல்கலைத் தொடங்கிய நோக்கமே சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பட்டியலின, பழங்குடி ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை வளர்க்கவே ஆகும். அதைச் சிதைக்கும் வகையில் அண்மையில் பூட்டர் பவுண்டேஷன் என்ற தனியார் கம்பெனி கல்வி நிறுவனத்தை பெரியார் பல்கலையில் துவக்க கடந்த 6ம் தேதி நடைபெற்ற ஆட்சிக்குழுவில் டேபிள் அஜெண்டா வைத்து உள்ளதாக தெரிய வருகிறது . இதன் இயக்குநர்கள் யார் எனில் துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் பொறுப்பு தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், இவர்களோடு திருச்சி பாரதிதாசன் பல்கலைப் பேராசிரியர் ஒருவர்.
பொதுவாக அரசு ஊழியர் ஒருவர் தனியார் நிறுவனமோ வணிகமோ துவங்க வேண்டுமானால் அரசின் முன் அனுமதி பெற வேண்டும். அரசுப் பணியினில் இருந்து பணித்துறப்பு செய்த பிறகு தான் தனியார் கம்பெனியினைத் தொடங்க முடியும். மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் பங்குகளை வாங்கவோ முதலீடு செய்யவோ வேண்டும் என்றால் பல நடைமுறைகளைப் பின்பற்றியும் ஆட்சிக்குழுவில் ஒப்புதல் பெறவும் வேண்டும். ஆட்சிக் குழுவின் ஒப்புதலை அரசுக்கு அனுப்பி அரசின் அனுமதி பெற வேண்டும். அப்படி பெற்றால் தான் அரசு ஊழியரின் பணிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆனால், இந்த நடைமுறை எதையும் கடை பிடிக்காமல் தன்னிச்சையாக அரசுக்கு தெரிவிக்காமலேயே துணை வேந்தர் தன்னையும் ஒரு இயக்குநராக வைத்து பெரியார் பல்கலையில் தனியார் கம்பெனியை சட்டத்திற்கு விரோதமாக பூட்டர் என்ற தனியார் கம்பெனியை கம்பெனி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார். இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு விரோதமானது; அரசுக்கும் எதிரானது; மேலும் பெரியார் பல்கலையை தனியார் வியாபார நிறுவனம் ஆக்கும் செயலுமாகும்.
இது நடைமுறைக்கு வந்தால் புதிய பாடங்களை அவர்களே துவங்கலாம். அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் பாடங்களை நடத்த அனுமதி கொடுக்கலாம் பாடங்களை விற்கலாம்.பாட கட்டணம் தேர்வுக் கட்டணம் எல்லாம் அவர்களே நிர்ணயம் செய்யலாம். பல்கலை உபகரணங்கள், பல்கலையின் இடம், ஆய்வகம் ஆகியவற்றைத் தனியார்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். அதற்கு பல்கலைக்கு எதுவும் தர வேண்டாம். இவர்களிடம் பல கம்பெனிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் கல்வி நிறுவனம் துவங்கலாம். அரசுக்கோ பல்கலைக்கோ இவர்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்க வேண்டியது இல்லை. தனியார் கம்பெனியினை பல்கலையில், அதுவும் பல்கலை அதிகாரிகளே துவங்குவதை அரசு அனுமதிக்கக் கூடாது. இனியும் அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க கூடாது. தனியார் கல்வி துவங்கினால் மாணவர்களிடம் இருந்து கொள்ளை கட்டணம் வசூல் செய்வார்கள். சமூக நீதி, இட ஒதுக்கீடு காற்றில் பறக்கும் நிலைக்கு தள்ளப்படும்” என குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை செய்தது. துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்பட வைத்ததும், அதன் மூலம் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீஸார் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சேலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன் ஜெகநாதன் இன்று (டிச.27) காலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 7 நாட்கள் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த 7 நாட்களும் அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒரு துணை வேந்தரே கல்விக் கொள்ளையில் ஈடுபட்டது கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.