தமிழ் எழுத்துலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜெயமோகன். அவரது தனித்திறமையை திரைப்பட உலகம் பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. இதனை இயக்குனர் பாலா நான கடவுள் படத்தின் மூலம் வெளிப்படுத்தினார். இன்னும் பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதினார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசியிருந்த ஒரு கருத்து இணையத்திலும், திரையுலகிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
திரைப்படப்பாடல் எழுதும் கவிஞர்களுக்கு இசையமைப்பாளர்கள் மரியாதை கொடுப்பதில்லை. குறிப்பாக இளையராஜா முன்பு கவிஞர்கள் கை கட்டி நிற்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். முதலில் இளையராஜாவுக்கும், ஜெயமோகனுக்கும் இருக்கும் தொடர்பை பார்க்கலாம்.
இளையராஜாவுக்கும் ஜெயமோகனுக்கும் நட்பு என்று பார்த்தால் 2005ம ஆண்டில் வெளியான கஸ்தூரி மான் என்ற திரைப்படத்தில்தான் தொடங்கியது. . அதுவும் இயக்குனர் லோகிததாஸ் இளையராஜாவிடம் ஜெயமோகனை பற்றி சொல்லியதன் பேரில் இளையராஜா அவரை சந்திக்க சம்மதித்தார். . இப்படித்தான் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இதன் பிறகு பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் இன்னும் நெருக்கம் அதிகமானது.
ஆனால் ஜெயமோகனுக்கு முன்பு இளையாராஜா இசையில் பாடல் எழுத ஆரம்பித்த பல கவிஞர்களையும், பாடலாசிரியர்களையும் இளையராஜா மதிப்பதில்லை என்று ஜெயமோகன் பொத்தாம் பொதுவாக பேசியிருப்பது உள்நோக்கம் கொண்ட பேச்சாகத்தான் பார்க்க முடிகிறது. ஒரு படத்தின் சூழலுக்கு யாரை வைத்துப் பாடல் எழுதலாம் என்று முடிவு செய்வதே சுவாரஸ்யமானது. கவிஞர்களின் ஆற்றல், அவர்கள் பயன்படுத்தும் சொல்லடுக்குகள் எப்படி வெளிப்படும் என்பதையும், அவர்களின் மொழியாளுமை எப்படிப்பட்டது என்பதையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர் இளையராஜா. அதன்படிதான் அந்த சூழலுக்கான பாடலை எழுத அவர்களை அழைப்பார்.
குறிப்பாக பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் கவியுள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை உணர்த்தும் ஒரு சூழலில் பாடல் வருகிறது. அதற்கு புதுக்கவிதையில் நுட்பமாக எழுதக்கூடிய கவிஞர் மு.மேத்தாவை வரவழைத்து எழுத வைத்தார். அவரும் மயில் போல பொண்ணு ஒண்ணு குயில் போல பாட்டு ஒண்ணு என்ற பாடலை எழுத அது பெரிய வெற்றிப் பாடலாக மாறியது. . அதே படத்தில் பாரதியார் காசிக்கு சென்ற பிறகு அவருக்குள் புரட்சிகர சிந்தனையை வெளிப்படுத்த புலவர் புலமைப்பித்தன் அவர்களை எழுத வைக்கிறார். அவரும் எதிலும் இங்கு இருப்பவன் அவன் யாரோ என்று எழுதி அசரவைத்தார்.
இப்படி கண்ணதாசன், வாலி, கங்கை அமரன் உட்பட பலருக்கும் இருக்கும் தனி கவியாற்றலை பயன்படுத்தும் விதமாகத்தான் பாடல்களை உருவாக்கி வருகிறார் இளையராஜா. அவர்களை படக்குழுவினர் மரியாதைக் குறைவாக நடத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து தானே நேரடியாக அவர்களுடன் அமர்ந்து பாடலை எழுதி வாங்கி மரியாதையுடன் நடத்துவதே இளையராஜாவின் வழக்கம்.
ஜெயமோகன் சொல்வது போல கவிஞர்கள் கைகட்டி நிற்கும் சூழலை இளையராஜா ஒரு போதும் உருவாக்கியதில்லை. இதை ஜெயமோகனின் பார்வைக் கோளாறு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக எனக்கு தெரிந்து வாலியும், புலமைப்பித்தன் கம்பீரமாக பாடல் எழுதிய காட்சிகளை ஜெயமோகன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
சமீபத்தில் வெளியான மஞ்சுமோல பாய்ஸ் திரைப்படத்தை பலரும் மொழி பேதமின்றி பாராட்டிக்கொண்டிருக்கும் போது ஜெயமோகன் மட்டும் குடிகாரர்களின் கூத்து என்று வேறு ஒரு கருத்தை வெளியிட்டு எல்லோரையும் தன் பக்கம் பார்க்க வைத்தார்,
இதுதான் அவரது இலக்கிய உத்தி. சூழலுக்கு தொடர்பில்லாத வேறு ஒரு கருத்தை முன் வைப்பதன் மூலம் வெளிச்சத்தில் நிற்க விரும்புவார்.
இது ஜெயமோகனின் சுபாவம். திரைப்படலாசிரியர்கள் மீது கரிசனம் காட்டுவது போல் பேசியதற்கு ஒரு காரணமிருக்கிறது.
திரைப்பாடல் எழுதுவதில் தோல்வியடைந்தவர் ஜெயமோகன். அதனால் திரைப்படலாசிரியர்கள் குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது இந்த துறையில் வெற்றி பெற முடியாத விரக்தியின் வெளிப்பாடாக இந்த கருத்து இருக்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாலுமகேந்திராவின் மாணவர் சுகா இயக்கத்தில் தயாரான படித்துறை படத்திற்காக இளையராஜா இசையில் டியூனை வாங்கி வைத்து இரவெல்லாம் டியூனுக்கு எழுத முயன்று முடியாமல் போனது. காலையில் வெறும் தாளையும், டியூன் கேசட்டையும் இளையராஜாவிடம் கொடுத்து விட்டு, வீட்டுப்பாடம் எழுதாத பள்ளி மாணவன் போல் கைக்கட்டி நின்றதை அவர் மறந்திருக்கலாம். கோடம்பாக்கம் மறந்து விடாது.