இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிப்பது நம்பிக்கையளித்தாலும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சரியான தேர்வு இல்லை என்று இளையராஜா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் பயோபிக் உருவாகிறது. இதில் தனுஷ் நடிக்க உள்ளார். நேற்று இந்த படத்தின் பூஜை போடப்பட்டது. முக்கிய பிரபலங்களான கமல், வெற்றிமாறன் உட்பட பலர் பூஜையில் கலந்து கொண்டனர். தொடர்ந்து இளையராஜா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இளையராஜாவின் பயோபிக் உருவாவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த பயோபிக்கை இயக்க இருப்பது அருண் மாதேஸ்வரன் என்பதை பெரும்பாலான இளையராஜா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதனிடையே, நேற்று வெளியிடப்பட்ட போஸ்டரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. அடிப்படை ஆராய்ச்சி கூட இல்லாமல் போஸ்டரை வெளியிட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
சென்னை சென்ட்ரலில் தனுஷ் கையில் ஆர்மோனிய பெட்டியுடன் நிற்பது போல் இளையராஜா பட போஸ்டர் வெளியாகி இருந்தது. அதோடு அவர் நிற்கும் இடத்தில் சேறும் சகதியுமாக இருந்தது. ‘70களில் இளையராஜா சென்னை வந்தபோது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சேறு கிடையாது. அப்போது தார் சாலை போடப்பட்டிருந்தது’ என்று பத்திரிகையாளர் தமிழ் மகன் தெரிவித்துள்ளார்.
‘இதையெல்லாம்கூட ஆராய்ச்சி செய்யாமல் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். மேலும் அருண் மாதேஸ்வரனும் தனுஷும் இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறார்களோ’ என்று ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் முன்னதாக செல்வராகவனின் ‘சாணி காகிதம்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. மேலும், பயங்கர வன்முறை களம் கொண்ட கதைகள்.
இது தொடர்பாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கும் பத்திரிகையாளர் பாரதி தம்பி, “இளையராஜா பயோபிக்-ஐ அருண் மாதேஸ்வரன் இயக்குவதெல்லாம், தமிழ் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை; ராஜாவை சிறுமைப்படுத்தும் செயல்.
தனுஷ் பிரமாதமாக நடித்துவிடுவார்; அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அருண் மாதேஸ்வரன் இயக்கிய முந்தைய படங்களில் இருந்து, இவர் ராஜாவின் வாழ்க்கைக் கதையை படமாக்கும் நுண்ணுணர்வு கொண்டவர் என்ற அனுமானத்துக்கு வர முடியவில்லை.
ராஜாவின் திரையுலக பங்களிப்பு என்ன, மூன்று தலைமுறை தமிழர்களிடம் அவர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன, தமிழ் பண்பாட்டு அரசியலில் அவர் உருவாக்கியிருக்கும் மாற்றங்கள் என்ன… இதையெல்லாம் வரலாற்றோடு சேர்த்து புரிந்துகொள்ளும் சென்ஸிபிலிட்டி உள்ள ஒருவர்தான் அவரின் வாழ்க்கை கதையை படமாக்க முடியும். மேலும், ராஜாவின் இசை, தமிழ் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் காட்சி படிமங்களுக்கு… திரையில் நியாயம் செய்யும் காட்சிமொழி இவரிடம் இருக்கிறது என்ற நம்பகத்தன்மையும் இவரது முந்தைய படங்களில் இருந்து கிடைக்கவில்லை.
01. கமல்ஹாஸன், 02. மிஸ்கின், 03. வெற்றிமாறன், 04. பா. ரஞ்சித், 05. பாலா. 06. மணிரத்னம், 07. கௌதம் வாசுதேவ், 8. அமீர், 09. தியாகராஜா குமாராஜா, 10. மாரி செல்வராஜ், 11. பிரேம் குமார் – இன்னும் தகுதிவாய்ந்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால், எதற்கு இவரை தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. ராஜாவும் எதுக்கு ஒத்துக்கிறார்னு புரியல” என்று பாரதி தம்பி பதிவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் திரைப்பட இசை விமர்சகர் கானா பிரபா, “இளையராஜா கதையை இயக்க பால்கி அல்லது அருண் மாதேஸ்வரன் என்ற தெரிவில் இரண்டாமவர் தெரிவாகியிருக்கிறார். அருண் மாதேஸ்வரனின் பட வீர வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் கிடு கிடுங்குது. ஆனால், இளையராஜா மற்றும் தனுஷ் இருவர் எண்ணவோட்டத்துக்கு ஒரு இணை இயக்குநராக அருண் பொருந்துவார் என்று நினைத்திருக்கக் கூடும்” என்று கூறியுள்ளார்.
இந்த விமர்சனங்களை எல்லாம் பொய்யாக்கும் விதமாக ஒரு நல்ல பயோபிக்கை தருவாரா, அருண் மாதேஸ்வரன்.