நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்தில் வெளியாகியுள்ள ‘ஐசி 814 – தி காந்தகார் ஹைஜாக்’ வெப் தொடர் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளத்தின் காட்மாண்டு நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் கடத்தப்பட்டது. இந்த விமானத்தில் 178 பயணிகள், 2 விமானிகள், 13 இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் உட்பட மொத்தம் 193 பேர் பயணித்தனர். பாகிஸ்தனைச் சேர்ந்த ஹர்கத் – உல்- முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்த விமானக் கடத்தலில் ஈடுபட்டனர். தாங்கள் கடத்திய விமானத்தை ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்கு கொண்டுசென்ற அவர்கள், அங்கு சுமார் ஒரு வார காலத்துக்கு விமானத்தை பிடித்து வைத்திருந்தனர்.
தாங்கள் கட்த்தி வைத்துள்ள ஐசி 814 விமானத்தை விடுவிக்க வேண்டுமென்றால் இந்திய சிறைகளில் இருந்த மசூத் அசார் உள்ளிட்ட முக்கியமான 3 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தனர். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசும், வேறு வழியில்லாமல் மசூத் அசார் உள்ளிட்ட தீவிரவாதிகளை விடுவித்து விமானத்தை மீட்டது.
இந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்’ என்ற வெப் தொடர், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த 29-ம் தேதி வெளியானது. அனுபவ் சின்ஹா இயக்கியுள்ள இந்த தொடரில் நடிகர்கள் விஜய் வர்மா, நசிருதீன் ஷா, பங்கஜ் கபூர், மனோஜ் பஹ்வா, அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்சா, பத்ரலேகா, அம்ரிதா புரி, திபியேந்து பட்டாச்சார்யா மற்றும் குமுத் மிஸ்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த வெப் தொடரில் விமானத்தை கடத்தியவர்களுக்கு இந்து பெயர்கள் வைக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. உண்மையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஹர்கத் – உல்- முஜாஹிதீனைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டிருந்தது. அப்படி இருக்கும்போது ‘ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்’ வெப் தொடரில் பயங்கரவாதிகளுக்கு ’போலா’ மற்றும் ‘சங்கர்’ என்று எப்படி பெயர் சூட்டலாம் என்று சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. நெட்பிளிஸைப் புறக்கணிக்க சொல்லும், ‘பாய்காட் நெட்பிளிக்ஸ்’ என்ற ஹாஷ்டேக்குகளும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளன.