மின் நுகர்வோர் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது. உங்களுக்கும் வந்திருக்கலாம். மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை ஏன் இணைக்க வேண்டும்? இணைப்பது எப்படி? இணைக்காவிட்டால் என்ன நடக்கும்?
மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் அட்டையை மின் நுகர்வோர் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், “சொந்த வீடு வைத்திருக்கும் சிலர் வாடகைக்கு வீடு விடும் போது அவர்களிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து மானிய விலையில் மட்டும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். சிலர் ஒரே வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு பெற்று குறைவான மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். இதனால் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைத்தால்தான் அரசு வழங்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் இனி வழங்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
யார், யார் இணைக்க வேண்டும்?
தமிழ்நாடு அரசில் அறிவிப்பில், “ஆதார் எண் இணைப்பில் 2.36 கோடி வீட்டு பயனாளர்கள், 21 லட்ச விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்களும் கட்டாயமாக உள்ளடக்கப்படுவர்” என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி, “100 யுனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யுனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யுனிட் இலவச மின்சாரம் பெறும் கைத்தறி நுகர்வோர் என அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
தொற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாதவர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை” என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவை அரசிடமிருந்து எந்தவிதமான மானியமும் பெறுவதில்லை. அதனால் அவர்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய தேவையில்லை.
ஆன்லைனில் இணைப்பது எப்படி?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளத்தில் (https://www.tnebnet.org/awp/login) மின் நுகர்வு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான இணைப்பு வழக்கப்பட்டுள்ளது. அதை க்ளிக் செய்தால் மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பக்கத்துக்கு செல்லும்.
அங்கே மின் நுகர்வு எண்ணை உள்ளிட வேண்டும்.
அதன்பின் நமது மின் நுகர்வு எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை உறுதிபடுத்தும்படி கேட்கும்.
உறுதி செய்து எண்டரை க்ளிக் செய்ய வேண்டும்.
அதன்பின் நமது கைபேசிக்கு ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் அனுப்பப்படும். அதை உள்ளிட்டு உறுதி செய்ததும்,
- Owner
- Tenant
- Owner but service connection name not transferred
இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்து, பின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
பின்னர் நமது ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து JPEG வடிவத்தில் அப் செய்ய வேண்டும். ஃபைல் சைஸ் 300 KBக்கு மேல் இருக்கக்கூடாது.
அப் செய்ததும் ’Submit’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். உடனே, ‘ஆதார் எண் புதுப்பிப்பு கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது. இது சரிபார்ப்பு மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டது. சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும் எஸ்.எம்.எஸ். தனித்தனியாகத் தெரிவிக்கப்படும்’ என்னும் தகவல் ஆங்கிலத்தில் வரும்.
ஆஃப் லைனில் இணைப்பது எப்படி?
மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த செல்லும் போது ஆதார் அட்டையை கையுடன் கொண்டு செல்லவும். அங்கே மின் துறை ஊழியர்கள் மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க உதவுவார்கள்.
காலக்கெடு உள்ளதா?
தமிழ்நாடு அரசு, மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தாலும் அதற்காக இதுவரை எந்த காலக்கெடுவும் அறிவிக்கவில்லை.
ஆதார் எண் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் ஆதார் பதிவு மையம் அல்லது நிரந்தர பதிவு மையத்தில் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பின்னர் ஆதார் பதிவு அடையாளச் சீட்டு அல்லது ஆதார் பதிவுக்காக செய்த கோரிக்கையின் நகல் உடன் வங்கி கணக்கு புத்தகம் / வாக்காளர் அடையாள அட்டை / ரேஷன் கார்டு / பான் கார்டு / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகுமா?
‘ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு கொண்டவர்களுக்கான இலவச மற்றும் மானிய மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் ஒரே வளாகத்தில் அதிக இணைப்பு வைத்திருப்பவர்கள், வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்படும்’ என்ற அச்சம் மின்நுகர்வோரிடையே உள்ளது. இதனாலேயே பலர் மின் நுகர்வு எண் உடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின்இணைப்புடன் இணைத்தால் அவருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல்.
மின்இணைப்பு வைத்துள்ள நுகர்வோர்கள் உயிரிழந்திருக்கும் பட்சத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காகவும் எத்தனை மின்இணைப்புகள் உள்ளன, யார் யார் பெயரில் உள்ளது, எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது உள்ளிட்ட தரவுகளை பெறுவதற்காகத்தான் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
திமுக அரசு பதவி ஏற்றபோது 1.15 கோடி மின்நுகர்வோர் குறித்த தரவுகள்தான் இருந்தது. இப்போது 3 கோடி தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எவ்வளவு மின்னுற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது, எவ்வளவு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது, எவ்வளவு மின் இழப்பு ஏற்படுகிறது போன்ற தகவல்கள் தெரியவந்துள்ளன. இதனால் கடந்த ஆண்டு ஒரு சதவீதத்துக்கும் சற்று குறைவாக மின்இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மின்வாரியத்துக்கு ரூ. 560 கோடி மிச்சமாகியுள்ளது. இதுபோன்று எந்த இடங்களில் செலவு அதிகமாக உள்ளது, எங்கு விரயம் ஏற்படுகிறது ஆகியவற்றை எல்லாம் கணக்கிடவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.