மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் 2024-25 நிதியாண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது இது ஏழாவது முறையாகும்.
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வருமான வரி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். வருமான வரி செலுத்துவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் புதிய வரி முறையை தேர்வு செய்திருப்பதாக கூறிய அவர், வருமான வரி முறையை மேலும் எளிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
அதன்படி, புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அதாவது, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் அல்லது சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி இல்லை. ரூ.3,00,001 முதல் ரூ.7,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.7,00,001 முதல் ரூ.10,00,000 வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ,10,00,001 முதல் ரூ.12,00,000 வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.12,00,001 முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருமானத்திற்கு 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
முன்பு புதிய வரி முறையில், ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. அதே நேரத்தில் ரூ.3,00,001 முதல் ரூ.6,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரியும், 6,00,001 முதல் ரூ.9,00,000 வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ,9,00,001 முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. ரூ.12,00,001 முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.
தற்போது புதிய வரி முறையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தால் ரூ.12 லட்சத்திற்குள் வருமானம் ஈட்டுவோர் ரூ.12,500 வரை வருமான வரியில் சேமிக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அத்துடன், தனிநபர்களுக்கான வருமான வரிச் சலுகையாக நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி குற்றமாக கருதப்படாது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய வருமான வரி திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு, நிலையான கழிவு (standard deduction) ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.