உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து இதுவரை சுமார் 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாசி மாவட்டம், இமயமலைப் பகுதியில் நேற்று முன்தினம் மேகவெடிப்பால் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது.
சார்தாம் யாத்திரை தலங்களில் ஒன்றான கங்கோத்ரி அருகில் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டதில் இக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரளி என்ற கிராமம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த கிராமத்தில் பல ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தன. மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வந்தனர். இந்நிலையில் பெருவெள்ளத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஏராளமானோரை காணவில்லை. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இதுகுறித்து போலீஸ் டிஐஜி மொசென் ஷாஹேதி நேற்று கூறியதாவது: தரளி பகுதியில் ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதுவரை சுமார் 150 பேரை மீட்டுள்ளனர்.
ரிஷிகேஷ் – உத்தரகாசி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் தரளி கிராமத்துக்கு கூடுதல் மீட்புக்குழுக்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தரளி கிராமத்துக்கு அருகில் உள்ள ஹர்சில் பகுதியில் 11 ராணுவ வீரர்களை காணவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மிக அருகில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் உள்ளன. பாதை சீரானவுடன் அவர்கள் அவர்கள் அங்கு செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
உத்தராகண்டில் கின்னார் – கைலாஷ் யாத்திரை பாதையில் 413 பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லை காவல் படை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் உத்தராகண்ட் பெருவெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவுக்கு பிறகு கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 28 பேரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். இந்த 28 பேரில் 20 பேர் மகாராஷ்டிராவில் குடியேறியவர்கள். மற்றவர்கள் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கொச்சியில் உறவினர் ஒருவர் கூறுகையில், “இவர்கள் 28 பேரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரிக்கு புறப்பட்டனர். அவர்கள் செல்லும் வழியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. 10 நாள் உத்தராகண்ட் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஹரித்வார் பயண நிறுவனத்தாலும் இவர்களின் இருப்பிடம் குறித்து எந்த தகவலும் அளிக்க முடியவில்லை’’ என்று கூறினார்.
இமாச்சலில் நிலச்சரிவு: இமாச்சலில் சிம்லா, மண்டி, குல்லு, தரம்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 4 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 617 சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மண்டி மாவட்டத்தில் 377 சாலைகள், குல்லு மாவட்டத்தில் 90 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கனமழை நிலச்சரிவு காரணமாக கின்னார் – கைலாஷ் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் புஷ்கர் சிங் தாமி: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அரசு சார்பில் இயன்ற அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார். மேலும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் இயன்ற அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் முதல்வர் தாமியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தரளி பகுதியில் நடைபெறும் தீவிர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் தாமி எடுத்துரைத்தார்.