No menu items!

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு  – திட்ட ஆணையம் எச்சரிக்கை

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு  – திட்ட ஆணையம் எச்சரிக்கை

தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, வெப்ப அலையால், பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு பொருளாதாரத்தில் ஏற்படப் போகும் இழப்புகளை பட்டியலிட்டு எச்சரிக்கை செய்துள்ளது. இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராவதன் மூலமே, இழப்புகளை தடுக்கவோ சமாளிக்கவோ முடியும் என்றும் அரசுகள் அந்த நோக்கில் செயல்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. ஏன் இந்த திடீர் அறிக்கை? வெப்ப அலையால் என்னன்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது? அதற்கு தீர்வு என்ன?

வெப்ப அலை என்றால் என்ன?

வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது. 1969 முதல் 2021 வரையிலான 52 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கான தரவுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது 591 மோசமான வெப்ப அலை நாட்கள் பதிவாகியுள்ளது. அதிலும், 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகளில், சராசரியாக ஓராண்டுக்கு எட்டு வெப்ப அலை நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக, இந்த ஆண்டுகளில் மார்ச் – ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் கூடுதலான வெப்பம் பதிவாகியுள்ளது.

மனிதர்கள் சராசரியாக 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், 60% ஈரப்பதம் இருக்கும் சூழலிலும் இருப்பது உகந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 74%க்கும் மேலான மக்கள் தொகை 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் கூடுதலான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மிக வலுவான வெப்ப அழுத்தத்தை சந்திக்கும் ஆபத்துள்ள பகுதிகளில் தமிழ்நாட்டின் 50% மக்கள் வசிக்கின்றனர். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், மாநிலத்தின் 68% மக்கள் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

வெப்ப அலையால் உடல் உபாதைகள், பருவநிலைப் பிரச்சினைகள் ஏற்படுவது போல் பல்வேறு துறைகளிலும் பொருளாதார பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு என்னன்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மாநில திட்ட ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெப்ப அலையால் பொருளாதார பாதிப்பு

இது தொடர்பாக மாநிலத் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார். அதில், ‘ஒவ்வொரு காலநிலை பேரிடர் காரணமாகவும் 300 முதல் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார இழப்பை தமிழ்நாடு சந்திக்கிறது. வெப்பமண்டல பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு, வெப்ப அலை காரணமாகவும் அதிகமாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவு நேர வெப்பம் அதிகரிப்பு, தீவிர வெப்ப அலை நெடு நேரம் நீடிப்பது, குளிர்ந்த பருவகாலங்களிலும் வெப்பமான நாட்களின் அதிகரிப்பு ஆகிய மாற்றங்கள் ஏழை எளிய மக்கள், முறைசாரா தொழிலாளர்கள், உடல் பலவீனமானவர்களையே அதிகமாக பாதிக்கும். உற்பத்தியிலும் நேரடியான பாதிப்பு இருக்கும்.

2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது ஒட்டுமொத்த வேலை நேரத்தில், 3.4 கோடி வேலைகளுக்கு இணையான, 5.8% வேலை நேரத்தை இழக்கக் கூடும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம் செலுத்தக் கூடும். வெப்ப அலையின் காரணமாக நிலத்தின் ஈரப்பதம் குறைகிறது. இதனால் பயிரிடும் பரப்பு குறைகிறது. இதுபோன்ற தாக்கங்களால், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை இழக்கக் கூடும்.

ஸ்விக்கி, ஜோமேடோ போன்ற உணவு விநியோகம்; ஊபர், ஓலா போன்ற டாக்ஸி சேவை தளங்களில் பணிபுரிபவர்கள் கிக் பணியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இத்தகையக வெப்பமான பணிச்சூழலில் இருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று திட்ட ஆணைய அறிக்கை கூறுகிறது. வெப்பம் காரணமாக ஏற்படும் அழுத்தம் (stress) பணியாளர்களின் வேலைத்திறனையும் உற்பத்தியையும் குறைக்கும். பொருட்களின் விநியோகச் சங்கிலியில் இதன் தாக்கத்தை உணரலாம். தொடர்ந்து அதிக வெப்பம் நீடித்தால் பொருட்களை உரிய நேரத்தில் உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பது சவாலாகும். இதன் மூலம் கிக் பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது, ஊதிய இழப்பு ஏற்படலாம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனை கருத்தில்கொண்டு, வெப்பத்தின் தீவிரத்தைப் பொருத்து வேலை நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்றும் நிழல் இருக்கும் ஓய்விடங்கள் அமைத்துக் கொடுக்கலாம், குடிநீர் கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்துக் கொடுக்கலாம் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.

வெப்ப அலையால் விவசாயம் பாதிக்கப்படும்

வெப்ப அலையால் 2030-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் வேளாண் மகசூல் 4-5% குறையும் என்று ரிசர்வ் வங்கியின் தரவு கூறுகிறது.

வெப்பம் அதிகரித்தால் தண்ணீர் தேவையும் சக்திக்கான தேவையும் அதிகமாகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, வனம் சார்ந்த உற்பத்தி ஆகியவற்றை வெப்ப அலை பாதிக்கும். நிலத்தடி நீரை நம்பியிருக்கும் கோடைகாலச் சாகுபடி கடுமையான பாதிப்பை சந்திக்கும். தற்போது ஒவ்வொரு ஆண்டிலும் அதன் முந்தைய ஆண்டை விட அதிக பாதிப்பு நேரிடுகிறது. இந்த ஆண்டு 10 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய வேண்டும் என்று நினைத்தவர்கள் 5 ஏக்கர் அளவில் கூடபயிர் செய்ய முடியாத நிலை.

இந்த சூழலை கணக்கில் கொண்டு தமிழ்நாடு விவசாயத்தில், அதிக வெப்பத்தை தாங்கும் பயிர்களை அறிமுகப்படுத்தலாம் என்றும், அந்த பயிர்கள் விவசாயிகளுக்கு லாபகரமானதாக இருக்க தேவையான சந்தை, கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும் என திட்ட ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைக்கிறது.

இது மட்டுமல்லாமல், கால்நடை, மீன்வளம், வனத்துறை என பிற துறைகளில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அறிக்கை பேசுகிறது. வெப்ப அலையை முன்னிட்டு தெலங்கானா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள குளிர்ந்த மேற்கூரை திட்டம் 2028-ஆம் ஆண்டுக்குள் 300 சதுர கி.மீ குளிர்ந்த கூரைகள் உருவாக்க வேண்டும் என்று இலக்கு கொண்டுள்ளது. இதனை குறிப்பிடும் தமிழ்நாடு மாநில திட்ட ஆணைய அறிக்கை, நமது பணியிடங்களில், வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க, குளிர்ந்த மேல் கூரைகள் மற்றும் பசுமையான மேற்கூரைகள் அமைப்பது, இயற்கையான காற்று மற்றும் வெளிச்சம் கொண்ட கட்டிடங்களை திட்டமிட்டு வடிவமைப்பது அவசியம் என்று பரிந்துரைக்கிறது.

தீர்வு என்ன?

காலநிலை மாற்றம் மிகவும் சிக்கலான விவகாரம். உலக அளவில் பொதுவாக அரசுகள், பாதிப்பு ஏற்பட்ட பிறகே அது குறித்து யோசித்து, பாதிப்புகளை குறைப்பது எப்படி என்று திட்டமிடுகின்றன. இதற்கு மாறாக, பாதிப்புகளை தவிர்ப்பதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது பாதிப்பு இல்லையே, எதற்கு செலவு நினைத்தால், விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, மாநில திட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு கவனத்தில் கொள்ளும் என நினைப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...