சமூக வலைதளங்களில் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் லலித் மோடி போட்ட பதிவுதான். சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்த லலித் மோடி, ‘என்னில் பாதி. வாழ்க்கையில் புதிய தொடக்கம். காதலில் இருக்கிறோம். ஆனால் திருமணத்தைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். உடனே ட்விட்டர் தீப்பற்றிக்கொண்டது. லலித் – சுஷ்மிதா காதல் விவாதப் பொருளாக மாறியது.
மோடி இப்போது தனது காதலை பகிரங்கப்படுத்தினாலும், கடந்த 2010-ம் ஆண்டிலேயே இவர்கள் குறித்த கிசுகிசுக்கள் வரத் தொடங்கிவிட்டன. 2013ல் சுஷ்மிதா குறித்து லலித் மோடி ட்விட் போட்டிருக்கிறார். அப்போதைய ட்விட்டர் பதிவுகளை இணையத் துப்பறிவாளர்கள் தோண்டி எடுத்து இப்போது வெளியிடுகிறார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் முக்கிய மூளையான லலித் மோடி, பிறகாலத்தில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் கைதாமல் இருப்பதற்காக லண்டனில் குடியேறினார். கடந்த 2018-ம் ஆண்டில் இவரது மனைவி இறந்த பிறகு தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
அதே நேரத்தில் 1984-ம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மிதா சென், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் அவர், ஏற்கெனவே ரோமன் ஷால், விக்ரம் பட், ரன்தீப் ஹூடா, ரிதிக் பாஷின் என பலரை காதலித்துப் பிரிந்துள்ளார். மற்ற காதல்களைப் போல் இந்த காதலும் பிரியாமல் இருக்க வேண்டும்.
சிரிக்காவிட்டால் சம்பளம் கட்
வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்க வேண்டுமென்றால் எப்போதும் புன்னகையுடன் இருக்க வேண்டும் என்பது மூத்தோர் மொழி. வீடோ, அலுவலகமோ… எந்த இடமாக இருந்தாலும் நாம் சிரித்த முகத்துடன் மற்றவர்களிடம் பழக வேண்டும் என்பதே இந்த மூத்தோர் மொழியின் விளக்கம்.
ஆனால் சிலர் இந்த விதிக்கு மாறாக அலுவலகம் வந்ததும் கடுகடுப்பான முகத்துடன் இருப்பார்கள். அரசு அலுவலகங்களில் இப்படி கடுகடுத்த முகத்துடன் பலரைக் காணலாம்.
யாராவது மனு கொண்டுவந்து கொடுத்தாலோ அல்லது தாங்கள் சம்பந்தப்பட்ட பைல்களைப் பற்றி கேட்டாலோ எரிந்து விழுவார்கள். இதனால் அரசு அலுவலகங்களில் ஒரு வேலையை முடிப்பது என்றாலே மக்களுக்கு அலர்ஜியாகி விட்டது.
இதற்கு தீர்வுகாணும் வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள முலானே நகரின் மேயர் அரிஸ்டாட்டில் ஆகுரி (Mayor Aristotle Aguri) புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார். இதன்படி மேயர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருக்க வேண்டும். அவர்கள் சிரிக்காமல் இருப்பது தெரியவந்தால் 6 மாதம் வரை சம்பளப் பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6 மாத சம்பளம் கட் ஆகுமே என்ற பயத்தில் இங்குள்ள ஊழியர்கள் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருக்கிறார்களாம். இங்கே ரொம்ப சிரித்தால் கீழ்ப்பாக்கம் என்று சொல்லிவிடுவார்கள்.
சிறையிலும் மோதிய சித்து
பாஜக, காங்கிரஸ் என தான் இருக்கும் கட்சிகளில் எல்லாம் யாருடனாவது மோதிக்கொண்டு இருப்பது சித்துவின் வழக்கம். இப்போது கொலை வழக்கு ஒன்றில் கைதாகி பாட்டியாலா மத்திய சிறையில் இருக்கும் சூழலிலும், அங்குள்ள மற்றொரு கைதியுடன் மோதியிருக்கிறார்.
பாட்டியாலா சிறையில் உள்ள கைதிகள் மாதந்தோரும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டோக்கன்களை சிறை நிர்வாகத்திடம் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதி இருக்கிறது. சிறையில் உள்ள கேண்டீனில் உணவுப் பொருட்களை வாங்க கைதிகள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் தன்னிடம் உள்ள டோக்கன்களை பயன்படுத்தி சக கைதி உணவுப் பொருட்களை வாங்குவதாக புகார் கூறியுள்ளார் சித்து. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, அவர் இப்போது வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.