டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார் செரீனா வில்லியம்ஸ். ஆனால் இந்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு மாதத்திலேயே மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் ஆடினால் என்ன என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசிய செரீனா வில்லியம்ஸ், “டென்னிஸ் போட்டிகளில் ஆடாததால் என் வாழ்க்கையே வெறுமையாகி விட்டதைப்போல் உணர்கிறேன். காலையில் எழுந்ததும் டென்னிஸ் கோர்ட்டுக்கு போய் அடுத்தடுத்த போட்டிகளுக்காக பயிற்சி பெறுவது என் வழக்கம். ஆனால் இப்போது நான் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்ற நினைப்பே எனக்கு ஒரு வெறுமையைத் தருகிறது. அதனால் எனது ஓய்வு முடிவை நான் வாபஸ் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
அதுதானே எங்களுக்கும் வேண்டும் என்கிறார்கள் டென்னிஸ் ரசிகர்கள்
சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் நம் கிரிக்கெட் வீரர்கள். ஆனால் இந்த பெருமைக்கு ஏற்ற வகையில் அவர்கள் அங்கே சந்தோஷமாக இல்லை. பல விஷயங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் அவமானப்படுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
முதலாவதாக சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட, இந்திய வீரர்கள் 4 நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அது சரிசெய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த சூழலில் இப்போது இந்திய வீரர்களின் உணவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்னியில் நேற்று இந்திய வீரர்கள் பயிற்சிக்கு சென்றபோது அவர்களுக்கு ஏற்ற உணவு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 மணிநேர பயிற்சிக்கு பிறகு குளிர்ந்த நிலையில் உள்ள சாண்ட்விச்களையே ஐசிசி சார்பில் உணவாக வழங்கியுள்ளனர். அது சாப்பிடும் நிலையில் இல்லாததால், அவர்கள் வெளியில் இருந்து உணவு ஆன்லைன் முறையில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
ஐசிசியின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
யார் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள்?
ஒருகாலத்தில் செய்திகளை மக்கள் தெரிந்துகொள்ள முக்கிய சாதனமாக செய்தித்தாள்களே இருந்துள்ளன. பின்பு வானொலி, தொலைக்காட்சிகள் போன்றவை அந்த இடத்தைப் பிடித்தன. இப்போது செய்தித்தாள்களுடன் வானொலி, தொலைக்காட்சி, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சமூக ஊடகங்கள் மக்களுக்கு செய்திகளைத் தர போட்டி போடுகின்றன. இத்தனை ஊடகங்கள் செய்திகளைத் தரும் நிலையில், மக்கள் அதில் எதை நம்புகிறார்கள் என்பதைப் பற்றிய ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது.
‘தி இந்து டேடா டீம்’ நடத்திய இந்த ஆய்வில் அரசின் தூர்தர்ஷன் சேனல் வெளியிடும் செய்தியை அதிகம் நம்புவதக 34 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாளிதழ்களில் வரும் செய்திகள் அதிக நம்பகத்தன்மையுடன் இருப்பதாக 31 சதவீதம் பேரும், தனியார் தொலைக்காட்சிகள் தரும் செய்திகள் நம்பகத்தன்மையுடன் இருப்பதாக 13 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். வானொலி செய்திகளை 15 சதவீதம் பேரும் ஆன்லைன் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை 11 சதவீதம் பேரும் நம்புவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை ட்விட்டர் தலத்தையே பெரும்பாலானவர்கள் (17 சதவீதம்) நம்புகிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் வாட்ஸ்அப் (16 சதவீதம்), யுடியூப், ஃபேஸ்புக் (14 சதவீதம்) ஆகியவை உள்ளன.