ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்பானவர்கள் என்பது எல்லோருக்கும் ஏற்கெனவே தெரிந்த விஷயம். அங்குள்ள 4 வயதுக்கு உட்பட்ட சில குழந்தைகள்கூட வேலை பார்க்கிறார்கள் என்பது நாம் இதுவரை கேள்விப்படாத விஷயம்.
குழந்தைகளால் என்ன வேலை செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா? அவர்களுக்கும் ஒரு வேலையை கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது தெற்கு ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனை.
இந்த மருத்துவமனையில் குழந்தைகள் செய்யவேண்டிய வேலை, வயது முதிர்ந்த நோயாளிகளை தங்கள் குறும்புத்தனத்தால் மகிழ்விப்பதும், தங்களை தூங்கவைக்க அந்த நோயாளிகளை அனுமதிப்பதும்தான்.
குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிக்கும்போதும், அவர்களை தூங்க வைப்பது உள்ளிட்ட பணிகளை செய்யும்போதும் வயதான நோயாளிகளின் மனம் ரிலாக்ஸ் ஆவதாக அந்த மருத்துவமனை கண்டறிந்துள்ளது. என்வே தங்களிடம் உள்ள வயது முதிர்ந்த நோயாளிகளை உற்சாகப்படுத்த 30 குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளது. இந்த 30 வேலைக்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் போட்டி போட்டது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம்.
இந்த குழந்தைகளுக்கு சம்பளம் என்ன தெரியுமா?… பாலும், நாப்கினும்தான்!
கல்வியறிவில் சிறந்த 10 நாடுகள்
உலகிலேயே அதிக கல்வியறிவுள்ள மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலை World of Statistics என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி உலகிலேயே கல்வி அறிவுள்ளவர்கள் அதிகம் வாழும் நாடாக கனடா உள்ளது. அந்நாட்டில் உள்ள மக்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உயர்நிலை வகுப்புவரை சென்று படித்தவர்களாக உள்ளனர்.
இந்த பட்டியலில் கனடாவுக்கு அடுத்த இடங்களில் ரஷ்யா, ஜப்பான், லக்ஸம்பர்க், தென் கொரியா, அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
முதல் 10 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவுக்கு இடம் இல்லை. இந்த பட்டியலை சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, “இந்தியாவின் பெயர் விடுபட்டிருக்கக் கூடாத பட்டியல் இது. எதிர்காலத்தில் இந்த பட்டியலில் இந்தியா இடம்பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மட்டுமின்றி பொதுமக்களாகிய நாமும் எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் கல்வி வளர்ச்சிக்காக இந்திய அரசு தனது மொத்த ஜிடிபியில் இருந்து 3.1 சதவீத நிதியை ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரிலும் சாதித்த விராட் கோலி
கிரிக்கெட் மைதானத்தில் அடிக்கடி சாதனைகளைப் படைப்பது விராட் கோலியின் வழக்கம், ஆனால் இப்போது கிரிக்கெட்டைத் தாண்டி சமூக வலைதலங்களிலும் அவர் சாதனை படைத்துள்ளார்.
ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் 5 கோடி பேரால் பின்பற்றப்படும் விளையாட்டு நட்சத்திரமாக உருவெடுத்துள்ளதே அவரது புதிய சாதனை.
இதன்மூலம் ட்விட்டர் தளத்தில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலிக்கு முன்னதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 10.3 கோடி ரசிகர்களும், பிரபல கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸை 5.2 கோடி ரசிகர்களும் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
ட்விட்டர் தளத்தில் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதள பக்கங்களிலும் அதிகம் பேர் விராட் கோலியை பின் தொடர்கிறார்கள். இதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 கோடி பேர் விராட் கோலியை பின்தொடர்கிறார்கள். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகம் பேரால் பின்பற்றப்படுபவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.