பிரதமர் மோடி என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஒன்று அவரது வெளிநாட்டு பயணங்கள். இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களை தனிப்பட்ட கூட்டங்களில் சந்திப்பது, இசைக்கருவிகளை வாசிப்பது என பல்வேறு விஷயங்களைச் செய்துள்ளார். இப்படி பிரதமர் சென்ற வெளிநாடு பயணங்களுக்காக இதுவரை எத்தனை ரூபாய் செலவு செய்யப்பட்டது என்ற கேள்வி சமீபத்தில் மாநிலங்களவையில் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக 239 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி 36 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாகவும் இதில் 31 முறை பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பிரதமருடன் பயணம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வெளிநாட்டு பயணங்களில் மிக அதிகமான தொகை கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு பிரதமர் சென்றபோது செலவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 முதல் 28 வரையான இந்த பயணத்துக்கு மட்டும் ரூ. 23,27,09,000 செலவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஆண்டு ஜப்பானுக்கு அவர் மேற்கொண்ட பயணத்துக்கு மிகக் குறைவாக 23,86,536 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
காலியாக கடக்கும் சுஷாந்த் ராஜ்புத் வீடு
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் ராஜ்புத் இறந்து சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. சுஷாந்த் இறந்து இத்தனை நாளாகியும் அவர் வசித்த பிளாட்டில் வாடகைக்கு குடியிருக்க யாரும் வரவில்லை. 5 லட்ச ரூபாய்க்கு இந்த பிளாட் வாடகைக்கு விடப்படும் என்று புரோக்கர்கள் விளம்பரம் செய்த பிறகும் யாரும் இன்னும் இந்த கடல் பார்த்த பிளாட்டுக்கு குடிவராமல் இருக்கிறார்கள்.
“பிளாட் வாடகைக்கு விடப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து பலரும் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் அந்த வீட்டில்தான் சுஷாந்த் ராஜ்புத் இறந்தார் என்ற செய்தியைக் கேட்டதும் பிளாட்டை பார்க்கக்கூட வர மறுக்கிறார்கள். அதனால் வாடகைக்கு ஆட்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது” என்கிறார் இந்த பிளாட்டின் புரோக்கரான ரஃபிக் மெர்சண்ட்.
இறப்புக்கு முன்னதாக மாதம் 4.5 லட்சம் ரூபாய் கொடுத்து சுஷாந்த் ராஜ்புத் தங்கியிருந்த இந்த பிளாட் 3,600 சதுரடிகள் கொண்டது. இந்த பிளாட்டில் 4 படுக்கை அறைகள் உள்ளன. கடல் பார்த்த நிலையில் இந்த பிளாட்டின் ஜன்னல்கள் இருப்பது இந்த பிளாட்டின் சிறப்பம்சம்.
அரை இறுதிப் போட்டிக்கான பந்து தயார்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள அல் ஹில்ம் (Al Hilm) என்ற பந்தை அறிமுகப்படுத்தியுள்ளது அடிடாஸ் நிறுவனம்.
இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவரை பயன்படுத்தப்பட்ட ‘அல் ரிஹ்லா’ என்ற பந்துக்கு பதிலாக ‘அல் ஹில்ம்’ பந்து பயன்படுத்தப்பட உள்ளது. ‘அல் ஹில்ம்’ என்ற வார்த்தைக்கு அரபு மொழியில் ‘கனவு’ என்று அர்த்தம். அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த பந்து, ஆட்டத்தின்போது சில முடிவுகளை துல்லியமாக எடுக்க உதவும் என்று அடிடாஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் நிக் கிராக்ஸ் தெரிவித்துள்ளார்.