மாமன்னன் ராஜராஜசோழன் நேற்று நடமாடியதாலும் குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியின் அழகிய இளம் பெண்கள் இன்று நடமாடுவதாலும் சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்ட தஞ்சாவூர்.
காலை நான்கு மணிக்கே எழுந்து தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியை முடித்த 80 வயது சிரஞ்சீவி, பின்னர் சுப்ர வஜ்ராசனம், ஹஸ்த பாதருஸ்தாசனம்… போன்ற மகா சிக்கலான யோகாசனங்களை எல்லாம் செய்துவிட்டு, சுக்கு, திப்பிலி, இஞ்சி மற்றும் மிளகு கலந்த நோய் எதிர்ப்பு கஷாயத்தைக் குடித்துவிட்டு, நீண்ட ஆயுளுக்கு கூடுதல் உத்தரவாதமளிக்கும் மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை முணுமுணுத்தபடி தனது நண்பர் வெங்கடேசனுடன் வாக்கிங்கை ஆரம்பித்தபோது மணி ஆறாகியிருந்தது.
கொடிமரத்து மூலையை அவர்கள் தாண்டியபோது, சிரஞ்சீவியின் தம்பி முருகானந்தம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மொபைலில் அழைத்தார். சிரஞ்சீவி மொபைலை ஆன் செய்து, “சொல்லு முருகா… என்ன காலைலயே ஃபோனு?” என்றார்.
“ஒரு முக்கியமான விஷயம். அதான் கேள்விப்பட்டவுடனே கூப்டுட்டேன். நம்ம சேகர் இருக்கான்ல?”
சேகர், அவர்களுடைய தங்கச்சி மகன். திருவையாறில் இருக்கிறான்.
“அவனுக்கென்ன?”
“பொதுவா நம்ம சொந்தக்காரங்கள்லாம், அவங்க பிறந்த நாளன்னைக்கி என்ன பண்ணுவாங்க?”
“நம்ப சொந்தக்காரங்கள்ல, ரொம்ப வயசானவங்களுக்கு புது ட்ரெஸ் வாங்கிக் கொடுத்து, அவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்குவாங்க. அதுக்கென்ன இப்ப?”
“நாளன்னைக்கி நம்ம சேகரோட நாப்பதாவது பிறந்த நாள் வருது. இப்ப இருக்கிறவங்கள்ல உனக்குதான் வயசு அதிகம். அதனால இந்த பிறந்த நாளுக்கு உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்க வர்றான்.”
“வரட்டும். அமோகமா ஆசிர்வதிச்சிடலாம்.”
“அதுலதாண்ணன் ஒரு சிக்கல். இப்பதான் என் பொண்டாட்டி சொன்னா. லாஸ்ட் மூணு வருஷமா, சேகர் தன் பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் வாங்குன பெருசுங்க அத்தனை பேரும், அவன ஆசிர்வாதம் பண்ண ஒரே மாசத்துக்குள்ள செத்துப் போயிட்டாங்களாம்…” என்றவுடன் அதிர்ந்துபோன சிரஞ்சீவி, “நிஜமாவாச் சொல்ற?” என்றார்.
“ஆமாம்ண்ணன். மூணு வருஷத்துக்கு முன்னாடி, சேகர் நம்ம சுவாமிமலை மாமாகிட்ட ஆசிர்வாதம் வாங்கினான். 90 வயசு வரைக்கும் ஒரு நோய் நொடியில்லாம வாழ்ந்த மனுஷன். சேகர் ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போன ரெண்டே நாள்ல, தூக்கத்துலயே, என்ன ஏது வியாதின்னு தெரியாமலே இறந்துபோயிட்டாரு. அடுத்த வருஷம் நம்ம பேராவூரணி மாமாகிட்ட வாங்கினான். அவரும் ஒரே மாசத்துல அவுட்டு. போன வருஷம் நம்ம தலைஞாயிறு சித்தப்பாகிட்ட வாங்கினான். அவுரு பத்து நாள் கூட தாங்கல. இந்த வருஷம் உன்கிட்ட வர்றான்…” என்றவுடன் சிரஞ்சீவிக்கு வியர்த்து விறுவிறுத்துவிட்டது.
தொடர்ந்து முருகானந்தம், “ஆக்ச்சுவலா சேகர் முதல்ல நம்ம கண்டியூர் கண்ணம்மாகிட்டதான் ஆசிர்வாதம் வாங்குறதா சொல்லிட்டிருந்தான். அவங்க ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திடீர்னு செத்துப்போயிட்டதால உன்கிட்ட வரான். பாத்துண்ணன்… சேகர் ஆசிர்வாதம் வாங்கலாம்ன்னு நினைச்சதுக்கே கண்ணம்மா அவுட்டு. அதனால நீ எப்படியாச்சும் சேகர ஆசிர்வாதம் பண்ணாம அவாய்ட் பண்ணு” என்று கூறிவிட்டு மொபைலை வைத்தவுடன், சிரஞ்சீவிக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்துவிட்டது.
பொதுவாகவே அனைத்து மனிதர்களுக்கும் மரண பயம் உண்டுதான். இருப்பினும் வயதான பிறகுதான் மிகவும் பயப்படுவார்கள். ஆனால், சிரஞ்சீவிக்கு இருபது வயதிலிருந்தே மிகுந்த மரண பயம். அதனால்
வாக்கிங் என்றால் என்ன என்று கூட தஞ்சாவூரில் யாருக்கும் தெரியாத காலத்திலிருந்தே வாக்கிங், யோகா, தியானம், கஷாயம்… என்று தூள் கிளப்பி வருவதால் சிரஞ்சீவிக்கு இன்று வரையிலும் பிபி, சுகர்… என்று எதுவும் கிடையாது. 30 வருடம் பார்த்த அரசு நூலகர் வேலைக்காக, 35 ஆண்டுகளாக பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளாக அவருடைய சமவயதினர் பலர் இறந்துபோனதால், சிரஞ்சீவியின் மரண பயம் மேலும் அதிகரித்து, சமீபகாலமாக ஆயுளுக்கு பலம் கூட்ட கூடுதலாக மந்திரமெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ‘சனிப் பிணம் தனியா போகாது’ என்று, கடந்த ஒரு வருடமாக, சனிக்கிழமை எவ்வளவு நெருங்கிய உறவினர்கள் இறந்தாலும், அவர்கள் எழவுக்குச் செல்லாமல் இருக்கிறார்.
இவ்வளவு எச்சரிக்கையாக பாதுகாத்து வந்த உயிரை, இந்த சேகர் பயல் ஆசிர்வாதம் வாங்கி காலி பண்ணி விடுவானோ என்று நினைத்தபோது பயத்தில் மீண்டும் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. தனக்கு ஒரு தங்கையை பெற்றுத் தந்தமைக்காக, இறந்து போன தந்தை மீது இத்தனை வருடம் கழித்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதுவும் சிரஞ்சீவியின் தம்பி முருகானந்தம் பிறந்து 18 ஆண்டுகளுக்கு பிறகுதான் தங்கை பிறந்தாள்.
அப்போது சர்ஃபோஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சிரஞ்சீவியும், முருகானந்தமும் செகண்ட் ஷோ ‘பாக்கியலட்சுமி’ படத்துக்குச் சென்று, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாட்டில் ஆழ்ந்திருந்தபோது, வீட்டில் சிரஞ்சீவியின் தந்தை திருவேங்கடம் தனது மனைவியுடன், ‘இரவுப் பொழுதின் மயக்கத்தில்’ தீவிரமாக ஆழ்ந்தார்.
அதன் விளைவாக மறு வருடம் பிறந்த பெண் குழந்தைக்கு ‘பாக்கியலட்சுமி’ என்று பெயர் வைத்து தனது நன்றிக்கடனை தீர்த்துக்கொண்டார். தன் அம்மா கர்ப்பமான காலம் முதல், ‘இது எப்படி நிகழ்ந்தது?’ என்று யோசித்துக்கொண்டிருந்த சிரஞ்சீவிக்கு, புதிய தங்கைக்கு ‘பாக்கியலட்சுமி’ என்று திருவேங்கடம் பெயர் வைத்தவுடன்தான் விஷயம் புரிந்தது. அந்த பாக்கியலட்சுமியின் மகன் சேகர்தான் இப்போது சிரஞ்சீவிக்கு எமனாக வந்திருக்கிறான்.
சிரஞ்சீவி, “சை… அன்னைக்கி நாங்க பாக்கியலட்சுமி படம் போயிருக்கக்கூடாது…” என்று முணுமுணுத்தபோது, “ஃபோன்ல யாரு?” என்றார் அருகில் நடந்து வந்துகொண்டிருந்த சிரஞ்சீவியின் அறுபதாண்டு கால நெருங்கிய நண்பர் வெங்கடேசன்.
“முருகானந்தம்” என்ற சிரஞ்சீவி சேகரின் ஆசிர்வாத விஷயத்தை சொல்லி முடிக்க… வெங்கடேசன், “அவ்ளோதான… இதுக்கு ஏன் இவ்வளவு பயப்படுற? சேகருக்கு என்னைக்கி பிறந்தநாளு?”
“நாளன்னைக்கி.”
“அன்னைக்கி அவனுக்கு ஆசிர்வாதம் பண்ணமுடியாதுன்னு சொல்லிடு”
“அது எப்படிரா? பாசக்கார பயடா… மாமா மாமான்னு சின்ன வயசுலருந்து உயிரா இருப்பான். இப்பவும் வாரத்துக்கு ஒரு தடவை, திருவையாறு ஆண்டவர் கடைலருந்து நெய் அல்வா வாங்கிட்டு வந்து என்னைப் பாத்துட்டுப் போவான். அவ்வளவு தங்கமான பையன். அவனுக்கு ஆசிர்வாதம் பண்ணமுடியாதுன்னு எப்படிரா சொல்றது?”
“அதுவும் சரிதான்…” என்று சில வினாடிகள் யோசித்த வெங்கடேசன், “சரி… இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல? அதுக்குள்ள ஏதாச்சும் ஐடியா பண்ணலாம்.” என்றார்.
வீட்டிற்கு வந்தவுடன் சிரஞ்சீவியின் பயம் மேலும் அதிகரித்தது. மனதிற்குள், “இந்த சேகர் கம்னாட்டி பய நம்பள அல்பாயுசுல(?) போக வச்சிடுவான் போல…” என்று புலம்பினார். பேசாமல் சேகருக்கே ஃபோன் போட்டு விஷயத்தைச் சொல்லி, என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கவேண்டாம்ன்னு சொன்னால் என்ன? என்று தோன்றியது. ஆனால் அப்படிச் சொன்னால், அவன் மனம் எவ்வளவு வேதனைப்படும்?
இது குறித்து மனைவி மீனாட்சியிடம் டிஸ்கஸ் செய்யலாமா? மீனாட்சி இப்போது அமெரிக்காவில் அவர்களுடைய கடைசி மகள் வீட்டில் இருக்கிறாள். (சிரஞ்சீவிக்கு சாப்பாடு வெங்கடேசன் வீட்டிலிருந்து வந்துவிடும்.)
மீனாட்சியிடம் பேசுவதற்காக மொபைலை எடுத்தவர் யோசித்தார். மனைவிகள் என்பவர்கள், அவர்கள் வீட்டுச் சொந்தம் என்றால் ஒரு நியாயம் வைத்திருப்பார்கள். நம் வீட்டுச் சொந்தம் என்றால் ஒரு நியாயம் வைத்திருப்பார்கள்.
இது என் தங்கச்சி மகன் என்பதால், ‘அவன் உங்கள சாவடிக்கிறதுக்குன்னே திட்டம் போட்டு ஆசிர்வாதம் வாங்க வர்றான்’ என்றுதான் சொல்வாள். சொல்வதோடு மட்டுமின்றி ஊரெல்லாம் ஃபோன் போட்டு சொன்னால், பாக்கியலட்சுமி மனமும், சேகர் மனமும் என்ன பாடுபடும்? அதனால் இதைத் தானே டீல் செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.
சிறிது நேரத்தில் காலை டிஃபனுடன் வந்த வெங்கடேசன், “இப்ப ஒரு ஐடியா தோணுச்சு. நாளைக்கி கண்டியூர் கண்ணம்மாக்கு திருவையாத்து படித்துறைல கருமாதி பண்றாங்கள்ல? எப்படியும் சேகர் அதுக்கு வருவான். அங்க அவன்கிட்ட எதாச்சும் வெட்டி வம்பு இழுத்து தகராறு பண்ணு. அவன் கடுப்பாயி உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்க வரமாட்டான்.”
“டேய்… அவன் என்கிட்ட ரொம்ப மரியாதையா, ரொம்ப பாசமா இருப்பான்டா. அவன்கிட்ட போய் எப்படிரா சண்டை போடுறது?”
“வேற வழியில்ல சிரஞ்சீவி. நம்ம உயிருக்கு முன்னாடி எதுவுமே முக்கியமில்ல” என்று வெங்கடேசன் கூறியதும் சரி என்றுதான் தோன்றியது.
மறுநாள் காலை. திருவையாறு காவிரி ஆற்று படித்துறை, அரசமரத்தடியில் கண்ணம்மாவின் கருமாதி நடந்துகொண்டிருந்தது.
தாமதமாக வந்த சேகர், “எப்ப வந்தீங்க மாமா?” என்றபடி சிரஞ்சீவியின் தோளை உரசிக்கொண்டு ஜமுக்காளத்தில் அமர்ந்தான். டக்கென்று சிரஞ்சீவி, “டேய்… உன் வயசு என்ன? என் வயசு என்ன? தோள இடிச்சுகிட்டு உக்கார்ற… ஒரு மட்டு மரியாதை வேணாம்?” என்று வெட்டி வம்பிழுத்தார்.
அதற்கு சேகர், “மாமாவுக்கு எப்பவும் என் கூட விளையாட்டுதான்” என்றான் சிரிப்புடன்.
“மயிர விளையாடுறேன். நிஜமாதான்டா சொல்றேன். தள்ளி உட்காருடா…” என்று சிரஞ்சீவி கடுமையான குரலில் கூறியவுடன் முகம் வாடிய சேகரைப் பார்க்க பாவமாக இருந்தது. இருந்தாலும் சேகர் சமாளித்துக்கொண்டு, “என்ன மாமா? என் மேல ஏதும் கோபமா?” என்றான்.
“நான் கோபப்படுறதுக்கெல்லாம் உனக்கு ஒரு தகுதி வேணும்டா. வந்தா உன் வேலையப் பாத்துட்டு போடா…” என்று முகத்திலடித்தாற் போல் கூறினார். சேகர் எழுந்து வேறு இடத்தில் சென்று நின்றுகொண்டு, வெங்கடேசனை ஜாடையாகக் கூப்பிட்டான். வெங்கடேசன் அருகில் வந்ததும், “மாமா ஏன் திடீர்னு என் மேல கோபமா இருக்காரு?” என்றான்.
“தெரியல. ஆனா கொஞ்ச நாளாவே யாரும் என் வயசுக்கு மரியாதை தரதில்லன்னு சொல்லிகிட்டேயிருக்கான்.”
“ஏன் திடீர்னு இப்படி ஆயிட்டாரு? நாளைக்கி என் பிறந்தநாள். அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கலாம்ன்னு இருக்கேன். இந்த நேரத்துல இப்படி இருக்காரு…”
“டேய்… எப்படி சீர்றான் பாத்தீல்ல… அதெல்லாம் வேண்டாம், விடு.”
“அட என்ன சார்? யாரு திட்டுறா? என் சொந்த தாய் மாமன். எங்களுக்கு எவ்ளவோ செஞ்சிருக்காரு. வேற எதையோ மனசுல வச்சுகிட்டு திட்டுறாரு. அதுக்குன்னு ஆசிர்வாதம் வாங்காம இருக்கமுடியுமா? மாமாவுக்கு மஹாராஜால பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டு வேட்டி, சட்டைல்லாம் வாங்கி வச்சிருக்கேன்.
நாங்க சொந்தக்காரங்க… இன்னைக்கி அடிச்சுக்குவோம், நாளைக்கி சேந்துக்குவோம். நீங்க மொத்தமா அறுத்து விடப் பாக்குறீங்களே? நாளைக்கி ஆசிர்வாதம் வாங்க வருவன்னு மாமாகிட்ட சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு நகர்ந்தான் சேகர்.
உதட்டைப் பிதுக்கியபடி சிரஞ்சீவியின் அருகில் வந்த வெங்கடேசன், “படுபயங்கர பாசக்கார பயலா இருக்கானே… மாமா கோபமா பேசினாலும் நாளைக்கி ஆசிர்வாதம் வாங்க வருவன்ங்கிறான்…” என்று கூற… சிரஞ்சீவி தலையில் கையை வைத்துக்கொண்டார்.
அன்று இரவு. சிரஞ்சீவியும் வெங்கடேசனும், சிரஞ்சீவி வீட்டில், ‘ஷைன்அவுட் கிளாஸிக்’ பிராந்தியை அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மாதத்துக்கு ஒரு முறை மட்டும் சரக்கடிப்பார்கள்.
பொதுவாக மூன்று லார்ஜ்களுக்கு மேல் அடிக்கும் பழக்கமில்லாத சிரஞ்சீவி இன்று மரண பயத்தில் ஐந்தாவது லார்ஜில் பயங்கர போதையில், “வெங்கடேசா… நாளைக்கி காலைல சேகர் வந்து நிப்பானேடா… நினைக்கிறப்பவே திக்கு திக்குன்னு இருக்குடா. இப்ப என்னடா பண்ணலாம்?”
“சிரஞ்சீவி… காலைல நீ சேகர திட்டுனதுல ஒரு எஃபெக்ட்டே இல்ல. இப்ப நீ நல்ல மப்புல இருக்க. இப்ப அவன்கிட்ட மொபைல்ல பேசி பெருசா எதாச்சும் தகராறு பண்ணு”
“எதுக்குடா தகராறு பண்றது?”
“சின்ன வயசுல அவன் எதாச்சும் தப்பு பண்ணியிருப்பான்ல்ல? அதைச் சொல்லித் திட்டு.”
“அதுக்குப் போய் இப்ப எப்படிரா திட்டுறது?” என்ற சிரஞ்சீவி வெங்கடேசன் முறைத்தவுடன், “சரி… சரி…” என்று நிறை போதையுடன் சேகருக்கு ஃபோன் அடித்தார். உடனே ஃபோனை எடுத்த சேகர், “என்ன மாமா கோபம்ல்லாம் போயிடுச்சா?” என்றான் சந்தோஷத்துடன்.
மொபைலை ஸ்பீக்கரில் போட்ட சிரஞ்சீவி, “யாருக்குடா கோபம் போச்சு? நீ பண்ண வேலைய எல்லாம் நினைச்சா இப்பக் கூட மனசு ஆறலடா…”
“தண்ணியடிச்சிருக்கீங்களா? சரி சொல்லுங்க… நான் என்ன மாமா பண்ணேன்?”
“ஒரு தடவை நான் திருவையாத்துக்கு வந்திருந்தப்ப, மதியானம் கறிசோறு சாப்பிட்டு நிம்மதியா திண்ணைல படுத்து தூங்கிட்டிருந்தேன். அப்ப எருமைமாடு மாதிரி என் மேல வந்து தொப்புன்னு விழுந்தியே…. பாவி…. இப்ப நினைச்சாக் கூட வயிறு எரியுதுடா.”
“எப்ப மாமா விழுந்தேன்?”
“நீ ஆறாவது படிக்கிறப்ப…”
“ஆறாவது படிக்கிறப்பவா?” என்று சிரித்த சேகர், “என்ன மாமா சின்னபிள்ள மாதிரி…” என்றான்.
“செருப்பால அடிப்பேன். தூங்கிட்டிருக்கிற மனுஷன் மேல அப்படித்தான் விழுவியா?”
“மாமா… நீங்க மப்புல பேசுறீங்க. போய் படுங்க.”
“நீ யாருடா என்ன படுக்கச் சொல்றதுக்கு?”
“சரி… படுக்கவேண்டாம். பேசுங்க.”
“நீ ப்ளஸ் டூ படிக்கிறப்ப, தியேட்டர்ல மாமன்காரன் க்யூல நிக்கிறான்ங்கிற மரியாதை கூட இல்லாம, எனக்கு பின்னாடி க்யூல நின்னப் பயதானே நீ…”
“இதெல்லாம் எப்படி மாமா மரியாதைக் குறைவாகும்?”
“டேய்… நீ நின்ன படம் என்ன படம்? ஷகிலா நடிச்ச கிண்ணாரத் தும்பிகள்… மாமன்காரன் தியேட்டர்ல இருக்காங்கிற மரியாதையில்லாம ஷகிலா குளிக்கிறப்ப தியேட்டர்ல விசிலடிச்ச பயதானே நீ…”
“மாமா… அந்தப் படத்துக்கு நீங்க வந்துருந்தீங்களா?அங்க என்னைப் பாத்தீங்களா? சத்தியமா சொல்றேன் மாமா. நான் உங்களப் பாக்கவே இல்ல. ஆனா அந்தப் படம் வந்தப்ப நீங்க ரிட்டயரே ஆயிருப்பீங்களே…”
“ஏன்? ரிட்டயரானா எனக்கு…” என்று நிறுத்திய சிரஞ்சீவி, “நல்லா வருது வாய்ல… அன்னைக்கே உன்னை சத்தம் போடணும்ன்னு நினைச்சேன். இப்பதான் ஞாபகம் வந்துச்சு.”
“சரி… தப்புதான் மாமா. மன்னிச்சுக்குங்க…”
“நீ மன்னிக்கச் சொன்னா மன்னிக்கிறதுக்கு நான் என்ன நீ வச்ச ஆளா?” என்று சிரஞ்சீவி தொடர்ந்து எகிற… “இப்ப என்னதான் பண்ணச் சொல்றீங்க?” என்ற சேகரின் குரலில் எரிச்சல்.
சந்தோஷமான சிரஞ்சீவி மெதுவாக வெங்கடேசனிடம், “கடுப்பாயிட்டான்… கடுப்பாயிட்டான்…” என்று கூற… “அப்படியே கன்டினியூ பண்ணு….” என்ற வெங்கடேசன், சிரஞ்சீவியின் கிளாஸில் இன்னும் கொஞ்சம் சரக்கை ஊற்றினார்.
“இனிமே நீ என் மூஞ்சிலயே முழிக்காத. அவ்வளவுதான்.”
“சரி மாமா….” என்றவுடன் சிரஞ்சீவி நிம்மதியாக… எதிர்முனையில் சேகர், “ஆனா நாளைக்கி ஒரு நாள் மட்டும் வந்து உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போயிடுறேன். நாளைக்கி நீங்க என் கழுத்தப் பிடிச்சு வெளியத் தள்ளினாலும் சரி. காலைல சரியா ஆறு மணிக்கு உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்காம போகமாட்டேன். இது சத்தியம்” என்று கூறி விட்டு ஃபோனை வைக்க… சிரஞ்சீவிக்கு ஏறிய போதை எல்லாம் இறங்கிவிட்டது.
“இப்ப என்ன வெங்கடேசா பண்றது?” என்ற சிரஞ்சீவியின் குரலில் திகில்.
“ம்…” என்று கிளாஸிலிருந்த சரக்கை அடித்தபடி யோசித்த வெங்கடேசன் சட்டென்று முகம் பிரகாசமாகி, “நம்ம இங்க இருந்தாதானே அவன் வந்து ஆசிர்வாதம் வாங்கமுடியும்? பேசாம சந்திரா ட்ராவல்ஸ்ல ஒரு கார புக் பண்ணுவோம். காலைல அஞ்சு மணிக்கே கிளம்பி கும்பகோணம் போய்ட்டு, பகல் ஃபுல்லா அங்கருக்கிற கோயிலுக்கெல்லாம் போவோம். ராத்திரி கும்பகோணத்துலயே லாட்ஜ் எடுத்துத் தங்கிட்டு, மறுநாள் காலைல வருவோம்…” என்றவுடன் வாயெல்லாம் பல்லாக சத்தமாக சிரித்த சிரஞ்சீவி, “சூப்பர் ஐடியாடா…” என்று போதையில் வெங்கடேசனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
அப்போது சட்டென்று சிரஞ்சீவியைத் தள்ளிய வெங்கடேசன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, “ஆனாலும் எனக்கு நீ இப்படி ஒரு துரோகம் பண்ணியிருக்கக்கூடாதுடா….” என்றார்.
“என்ன துரோகம்?”
“என்னை விட்டுட்டு நீ ஷகிலா படம் போயிருக்க…”
“டேய்… அப்ப உனக்கு பேரன் பொறந்திருக்கான்னு நீ மன்னார்குடி போயிருந்த. அதனால மிஸ்ஸாயிடுச்சு.”
“ஓ… அதானே பாத்தேன். அதிருக்கட்டும். பின்னாடி தங்கச்சி பையன் நிக்கிறான்னு தெரிஞ்ச பிறகுமா நீ மலையாளப் படம் பாத்த? உனக்கு வெக்கமா இல்ல?” என்று கூற… “வெக்கமாதான் இருக்கு.” என்ற சிரஞ்சீவி வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டார்.
மறுநாள் விடியற்காலை ஐந்து மணிக்கே புறப்பட்டு விட்டார்கள். தன் தம்பி முருகானந்தத்தை தவிர வேறு யாரிடமும் சிரஞ்சீவி தான் கும்பகோணம் போவதாகச் சொல்லவில்லை.
அவர்கள் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தபோது மணி ஏழாகியிருந்தது. சிரஞ்சீவியின் முகம் நிறைவாக இருந்தது.
“இப்பதான்டா மனசு நிம்மதியா இருக்கு. சேகர் இந்நேரம் வந்து பாத்துட்டுப் போயிருப்பான்” என்றபோது சிரஞ்சீவியின் மொபைல் ஃபோன் அடித்தது. மொபைலை எடுத்துப் பார்த்த சிரஞ்சீவி அதிர்ந்தார்.
“சேகர்ரா…” என்றார் பதட்டத்துடன்.
“பரவால்ல பேசு. நம்மதான் தஞ்சாவூர்ல இல்லையே….”
மொபைலை ஆன் செய்த சிரஞ்சீவி, “ஹலோ…” என்றார்.
“என்ன மாமா? சொல்லாம கொள்ளாம நீங்க பாட்டுக்கும் கும்பகோணம் போயிட்டீங்க…” என்றவுடன் சிரஞ்சீவிக்கு தூக்கி வாரிப் போட்டது.
“உனக்கு எப்படி தெரியும்?”
“காலைல ஆறு மணிக்கு உங்க வீட்டுக்கு வந்தேன். கதவு பூட்டியிருந்துச்சு. எதிர் வீட்டுல கேட்டேன். எங்க போனீங்கன்னு தெரியாது. ஆனா சந்திரா டிராவல்ஸ் கார் வாசல்ல நின்னுட்டிருந்துச்சுன்னு சொன்னாங்க. சந்திரா டிராவல்ஸ்ல விசாரிச்சுட்டு ஃபோன் பண்றேன். என் பிறந்த நாளும் அதுவுமா, கோயில்ல உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்குறதும் நல்ல விஷயம்தான். நான் இப்ப பஸ்ல வந்துட்டிருக்கேன். பண்டாரவடை தாண்டிட்டேன். கும்பகோணம் வந்தவுடனே ஃபோன் பண்றேன். எந்த கோயில்ல இருக்கீங்கன்னு சொல்லுங்க. வந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு உடனே கிளம்பிடுவேன்” என்று வேகமாக கட் செய்துவிட்டான்.
சிரஞ்சீவி வெங்கடேசனிடம் விஷயத்தைச் சொல்ல… வெங்கடேசன், “நாசமாப் போக…” என்றார்.
“இப்ப என்னடா பண்றது?”
“கும்பகோணத்துல எந்த கோயில்ல இருக்கோம்ன்னு தெரியாதுல்ல… இங்க நூறு கோயில் இருக்கு. வந்தா பாத்துக்குவோம். இப்ப நம்ப கும்பேஸ்வரர் கோயிலுக்கு போயிடலாம்” என்று அவர்கள் கிளம்பி காரில் சென்று வடக்கு வாசலில் இறங்கியபோது சேகரிடமிருந்து ஃபோன் வந்தது. மொபைலை எடுத்த சிரஞ்சீவி, “எதுக்குடா நாயே இப்படி எங்கள துரத்திகிட்டு வர?” என்று கத்தினார்.
“நான் கும்பகோணம் வந்துட்டேன். இப்ப எந்த கோயில்ல இருக்கீங்க?”
“அதெல்லாம் சொல்லமுடியாது. ஏன்டா… ரெண்டு நாளா இத்தனை திட்டு திட்டுறேன். உனக்கு சூடு, சொரணையே இல்லையா?”
“சின்ன வயசுல ரொம்ப இருந்துச்சு. அப்புறம் கல்யாணமானவுடனே அதெல்லாம் போயிடுச்சு” என்று சிரித்த சேகர்,
“மாமா… நீங்க யாரு? என் சொந்த தாய் மாமா… நீங்க என்னைத் திட்டுறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீங்க மட்டும் அன்னைக்கி ‘பாக்கியலட்சுமி’ படம் பாக்கப்போகலன்னா நான் பிறந்திருப்பனா?”
“டேய்… உனக்கு எப்படிரா இது தெரியும்?” என்றார் சிரஞ்சீவி அதிர்ச்சியுடன்.
“நீங்கதான் என் கல்யாணத்துக்கு முந்தின நாளு சரக்கடிச்சுட்டு நல்ல மப்புல சொன்னீங்க. அதனால… நீங்க இல்லன்னா எனக்கு இந்த பொறப்பே இல்ல. அதனால நீங்க என்ன திட்டினாலும் எனக்கு உறைக்காது மாமா. கும்பகோணம் கோயில்ல கண்டுபிடிக்கிறது என்ன பெரிய கஷ்டமா? நானே கண்டுபிடிச்சு வர்றேன்” என்றான்.
சட்டென்று காலை கட் செய்த சிரஞ்சீவி, “நம்ம எந்த கோயிலுக்கு போனாலும் வாசல்ல சந்திரா டிராவல்ஸ் கார் நிக்கிறத வச்சு கண்டுபிடிச்சுடுவான். இனிமே கோயிலுக்கு போறது டேஞ்சர். வா…. இப்பவே ஒரு லாட்ஜ் போட்டுத் தங்கிடலாம்” என்று வேகமாக காரில் ஏறினர்.
“சே… ஈ.வி. சரோஜாவ பாக்க ஆசைப்பட்டு ‘பாக்கியலட்சுமி’ போனது, இன்னைக்கி என் உயிருக்கே வேட்டு வைக்குது” என்று சிரஞ்சீவி டென்ஷனுடன் கூற… வெங்கடேசன், “ஈ.வி சரோஜா நல்ல ஃபிகர்தான். ஆனாலும் ஏன் ரொம்பப் பெருசா வரல?” என்றபோது திரும்பி அவரை முறைத்த சிரஞ்சீவி, “இப்ப இது ரொம்ப அவசியம்…” என்றார்.
உடனே அமைதியான வெங்கடேசன் தன்னிச்சையாக, “மாலைப் பொழுதின் மயக்கத்திலே…” பாடலை முணுமுணுக்க…. சிரஞ்சீவி இன்னும் டென்ஷனாகி, “இப்ப எதுக்கு நீ ‘பாக்கியலட்சுமி’ படப் பாட்டப் பாடுற?”
“அது… அந்த படத்தைப் பத்தி பேசினவுடனே தானா வந்துருச்சு…” என்று கூறிவிட்டு அமைதியானார் வெங்கடேசன்.
டெம்பிள் வியூ லாட்ஜில், ரூம் போட்டு கதவைச் சாத்தியவுடன் சிரஞ்சீவி, “இங்க வந்துடமாட்டான்ல்ல?” என்றார் வெங்கடேசனிடம்.
“அவன் நம்ம லாட்ஜ்ல தங்குவோம்ன்னு எதிர்பார்க்கமாட்டான். கோயில் கோயிலா தேடிட்டு போயிடுவான்.”
இருந்தாலும் கொஞ்சம் தவிப்புடன்தான் இருந்தார் சிரஞ்சீவி. அரை மணி நேரம் ஃபோன் ஏதும் வரவில்லை என்று சற்று நிம்மதியானபோது, சேகரிடமிருந்து ஃபோன் வந்தது. சிரஞ்சீவி கடுப்புடன் மொபைலை ஆன் செய்து, “ஹலோ…” என்றார்.
“மாமா… ரூம் நம்பர் சொல்லுங்க” என்றான் சேகர் அலட்சியமான குரலில்.
“ரூம் நம்பரா?” என்று அதிர்ந்தார் சிரஞ்சீவி.
“மாமா… நான் டெம்பிள் வியூ லாட்ஜ் வாசல்லதான் இருக்கேன். எதுக்கு கோயில் கோயிலா அலையணும்ன்னு சந்திரா டிராவல்ஸ்க்கு ஃபோன் பண்ணி, உங்க டிரைவர் ஃபோன் நம்பர் கேட்டேன். தந்தாங்க. அவனுக்கு ஃபோன் பண்ணேன். நீங்க இந்த லாட்ஜ்ல இருக்கீங்கன்னு சொல்லிட்டான். நீங்க ரூம் நம்பர் சொல்லுங்க… இல்லன்னா விடுங்க. நான் ரிசப்ஷன்ல கேட்டுக்குறேன்” என்று ஃபோனை கட் செய்தான்.
“டேய்…. லாட்ஜ்க்கே வந்துட்டான்டா. ரிசப்ஷன்ல ரூம் நம்பர் கேட்டுட்டு வர்றேன்ங்கிறான். இப்ப இங்க வந்து வலுக்கட்டாயமா அவன் என் கால்ல விழுந்தா நான் என்னடா பண்ணுவேன்?” என்று பதறிய சிரஞ்சீவி பயத்தில் கட்டில் மேல் ஏறி நின்றுகொண்டார்.
“அவன ரூமுக்குள்ள விட்டாதானே உன் கால்ல விழுவான்…” என்ற வெங்கடேசன் அறைக் கதவின் இரண்டு தாழ்ப்பாள்களையும் இறுக்கமாக போட்டார். ஜன்னல் கதவுகளையும் தாழ்ப்பாள் போட்ட வெங்கடேசன், “அவன் எவ்ளோ நேரம் கதவத் தட்டினாலும் திறக்காத. ஃபோனடிச்சாலும் எடுக்காத.”
“எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா. இவனால நான் அல்பாயுசுல(?) செத்துப்போய்டுவேன் போலருக்கே…”
“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது. நான் ருத்ர காயத்ரி மந்திரம் சொல்றேன். அதை திருப்பிச் சொல்லு” என்ற வெங்கடேசன் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார். சிரஞ்சீவி அறைக் கதவைப் பார்த்துக்கொண்டே, அரை குறையாக மந்திரத்தை சொன்னார். ஆனால், ஐந்து நிமிடங்கள் ஆகியும் அறைக் கதவு தட்டப்படவேயில்லை.
“என்னடா ஆளக் காணோம்?”
“தெரியலையே… ஒருவேளை… கதவத் தட்டினா திறக்கமாட்டோம்ன்னு, சைலன்டா வெளிய நிப்பான்னு நினைக்கிறேன். நீ பேசாம மந்திரத்தைச் சொல்லு”
ஐந்து நிமிடம், அரை மணி நேரமானது. ஒரு மணி நேரமானது. கதவு தட்டப்படவேயில்லை.
“என்னாச்சு? ஒண்ணும் புரியலையே…” என்று ரிசப்ஷனுக்கு ஃபோன் அடித்த சிரஞ்சீவி, “சேகர்ன்னு ஒருத்தன் என்னைத் தேடிட்டு வந்தானா?”
“ஆமாம். அவரு வந்து போயி ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிருக்குமே…”
“போய்ட்டானா?”
“ஆமாம். வந்து உங்க பேரச் சொல்லி எந்த ரூம்ல இருக்காங்கன்னு கேட்டாரு. நான் சொன்னேன். சரின்னு மாடி படிக்கட்டு வரைக்கும் போனாரு. அப்ப அவருக்கு ஏதோ போன் வந்துச்சு. உடனே திரும்பிப் போய்ட்டாரு”
“நல்லா தெரியுமா?”
“நல்லா தெரியும். நான் தம்மடிக்கிறதுக்காக அவரு பின்னாடியேதான் போனேன். அவரு ரோட்டுக்குப் போயி ஆட்டோ பிடிச்சு போனத நான் கண்ணால பாத்தேன்…” என்று கூற…. சிரஞ்சீவி குழப்பத்துடன் ஃபோனை வைத்துவிட்டு வெங்கடேசனிடம் விஷயத்தைச் சொன்னார்.
“ஏன் போய்ட்டான்? இல்ல… போய்ட்டு திரும்பி வருவானா? ஒண்ணும் புரியலையே…” என்றபோது சிரஞ்சீவியின் மொபைல் அடித்தது. சிரஞ்சீவி திகிலுடன் மொபைலை எடுத்துப் பார்த்து ஆசுவாசமானவர், “என் தம்பி…” என்று மொபைலை ஆன் செய்து, “சொல்லு முருகா…” என்றார்.
“அண்ணன்… இனிமே சேகர் வரமாட்டான். நீ தைரியமா கிளம்பி வீட்டுக்கு போ…”
“ஏன்டா?”
“இந்த வருஷம் நம்ப திருமானூர் ராஜேந்திரன், கீழப்பழூர் செல்வராஜ்… ரெண்டு பேரும் பைக் ஆக்ஸிடென்ட்ல செத்துட்டாங்கள்ல?”
“ஆமாம்…”
“அவங்க ரெண்டு பேரும், இந்த வருஷம், அவங்க பொறந்தநாளுக்கு உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்கினாங்களா?”
“ஆமாம்… வாங்கினாங்க.”
“உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்கி ஒரே மாசத்துக்குள்ள, அவங்க ஆக்ஸிடென்ட்ல செத்துருக்காங்க. அதனால உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்கவேண்டாம்ன்னு, இப்பதான் சேகர் பொண்டாட்டி கவிதாகிட்ட யாரோ சொல்லியிருக்காங்க. கவிதா உடனே சேகருக்கு ஃபோனடிச்சு சொல்லிட்டா. அவன் மிரண்டு போயி தெறிச்சு ஓடிட்டான். இந்த விஷயத்த இப்பதான் கவிதா என் பொண்டாட்டிக்கு ஃபோன் போட்டு சொன்னா” என்று முருகானந்தம் கூற… இதற்காக சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா? என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தார் சிரஞ்சீவி, 80 நாட் அவுட்.