தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படங்களில் கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தின் கதை வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.
2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி மாலை 5 மணியளவில் காஷ்மீரின் செளபியான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் ராணுவத்தினருக்கு கிடைத்தது. பொதுமக்கள் வாழும் பகுதி என்பதால் மிகுந்த கவனத்துடன் ஆபரேஷனை நடத்தி முடிக்க அங்கு ஒரு தமிழரின் தலைமையில் 44 வீரர்களை கொண்ட ராஷ்ட்ரிய ரைஃபில் படை.
இந்திய ராணுவம் தங்களை நெருங்குவதை அறிந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ஆனால் பதிலுக்கு இந்திய ராணுவத்தினரிடம் இருந்து தீவிரவாதிகளை நோக்கி ஒரு குண்டு கூட பறக்கவில்லை. அமைதி காத்திருந்தார் அந்த மேஜர். இருள்வதற்குள் ஆபரேஷனை முடிக்க வேண்டும். இல்லையென்றால் எதிரிகள் தப்பித்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த மேஜர், தவழ்ந்து தவழ்ந்து எதிரிகள் பதுங்கியிருந்த குடியிருப்பை அடைந்தார். அடுத்த நொடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் எதிரிகள் மீது குண்டு மழை பொழியத் தொடங்கியது ராணுவம். இதனால் அந்த பகுதியே போர்க்களம் ஆனது.
அப்போது கையெறி குண்டை வீசி முதல் எதிரியை வீழ்த்தினார் மேஜர். எஞ்சியுள்ள இரண்டுபேரை நோக்கி செல்லும்போது, தாடையில் குண்டு பாய்ந்து மண்ணில் சாய்ந்தார் மேஜரின் நண்பரும், சக ராணுவ வீரருமான விக்ரம் சிங். நண்பன் உயிர் தன் கண்முன் போனதைக் கண்டு அழுவதற்கு அங்கு நேரமில்லை. இதனால் கடும் கோபத்தோடு அந்த எதிரிகளை நோக்கி முன்னேறிய முகுந்த் இரண்டாவது எதிரியையும் வீழ்த்தினார்.
இன்னும் மீதம் இருப்பது ஒருவர் தான். மணி மாலை 6 மணியை நெருங்கிய நிலையில், எதிரியின் துப்பாக்கி சத்தம் வரும் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மேஜர், அடுத்த நொடியே அவனை நேருக்கு நேர் சென்று தலையில் குறிவைத்து சுட்டு வீழ்த்தினார். அந்த கடைசி தீவிரவாதியும் காலி. ஆபரேஷனை சக்சஸ்புல்லாக முடித்த மேஜரை வரவேற்க சக வீரர்கள் காத்திருக்க, அங்கு அவர்கள் முன்பு வந்து நின்றதும் மண்டியிட்டு மயங்கி விழுந்துள்ளார் மேஜர்.
எதிரிகள் உடனான தாக்குதலின் போதே மேஜரின் உடலில் மூன்று இடங்களில் குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு தான் எதிரிகளுடன் சண்டையிட்டு வெற்றி கண்டிருக்கிறார் மேஜர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சக வீரர்கள். ஆனால் வழியிலேயே மேஜரின் உயிர் பிரிந்தது. இப்படி வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்துவிட்டு நாட்டுக்காக வீரமரணம் அடைந்த அந்த மாவீரன் தான் தமிழ்நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன். இவரது வாழ்க்கையை தான் அமரன் என்கிற பெயரில் படமாக எடுத்துள்ளனர்.
1983-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி கேரளா மாநிலம் கோழிகோட்டில் வரதராஜன் – கீதா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் முகுந்த். கேரளாவில் பிறந்தாலும் அவர் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்ததெல்லாம் சென்னையில் தான். 2006-ம் ஆண்டு ராணுவத்தில் லெப்டினண்ட் ஆக நியமிக்கப்பட்ட முகுந்த், 2008-ம் ஆண்டு கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து 2009-ம் ஆண்டு தன் நீண்ட நாள் காதலியான இந்து ரெபேகா வர்கீஸை திருமணம் செய்துகொண்டார் முகுந்த்.
2011-ம் ஆண்டே இந்த ஜோடிக்கு அஸ்ரேயா என்கிற பெண் குழந்தையும் பிறந்தது. இப்படி தனது பணியிலும் சொந்த வாழ்க்கையிலும் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது தான் மேஜர் முகுந்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த அந்த உத்தரவு வந்து சேர்ந்தது. ஜம்மு காஷ்மீரின் பதற்றமான பகுதியாக கருதப்படும் சோபியான் மாவட்டத்திற்கு 2012-ம் ஆண்டு மேஜராக நியமிக்கப்பட்டார் முகுந்த் வரதராஜன். இந்த காலகட்டத்தில் தான் ஒரு முக்கியமான ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தார் மேஜர் முகுந்த்.
2013-ம் ஆண்டு ஜூன் 5ந் தேதி காஷ்மீரின் யாஞ்ச் புகர் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை மேஜர் முகுந்த் தலைமையிலான 44 பேர் கொண்ட ராஷ்ட்ரிய ரைஃபில் படை அந்த பகுதியை சுற்றிவளைத்தது. தாக்குதலை எதிரிகள் தொடங்கினாலும் அவர்களின் துப்பாக்கியில் உள்ள குண்டுகள் முடியும் வரை புத்திசாலித் தனமாக காத்திருந்த முகுந்த், பின்னர் தன் படையுடன் சென்று அவர்களை வேட்டையாடினார். ஆபரேஷன் சக்சஸ் ஆனது. எதிரிகளின் படை மற்றும் ஆயுதங்களின் அளவை கணக்கிட்டு தீர்க்கமாக சிந்தித்த, மேஜர் முகுந்தின் கூர்மையான முடிவெடுக்கும் தன்மையே இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்க உதவியது.