ட்விட்டரில் இப்போது வைரலாக போய்க்கொண்டிருக்கும் விஷயம் ஒரு வார்த்தை ட்வீட் (Twitter One-Word Trend. ட்விட்டரில் உங்களைப் பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் விஷயத்தை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும். அதுதான் இந்த ஒரு வார்த்தை ட்வீட்.
முன்னணி செய்தி நிறுவனமான சிஎன்என், ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற வார்த்தையை ட்வீட் செய்ய, இதைத் தொடர்ந்து ஒரு வார்த்தை ட்வீட்டுகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனதாக கூறப்படுகிறது. ட்விட்டர் தளத்தில் இது ட்ரெண்டாகத் தொடங்கியதும் சச்சின் முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரை, தங்கள் மனதில் உள்ள விஷயத்தை ஒரு வார்த்தையில் வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ஜனநாயகம்’ என்ற ஒரு வார்த்தை ட்வீட்டை பதிவிட்டுள்ளார். நாசா அமைப்பு ‘பிரபஞ்சம்’ என்றும், கூகுள் மேப்ஸ் நிறுவனம், ‘மேப்ஸ்’ என்றும் ட்விட்டரில் பதிவிட்டது. ட்விட்டரில் லட்சக்கணக்கான பேரால் பின்பற்றப்படும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், தனது உயிர் மூச்சாக கருதும் ‘கிரிக்கெட்’டை ஒரு வார்த்தை பதிவாக வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசியல் களத்தையும் இந்த ஒரு வார்த்தை ட்வீட் டிரெண்ட் விட்டுவைக்கவில்லை. நேற்று அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழகத்திலும் இந்த ட்ரெண்ட் சூடு பிடிக்கத் தொடங்கியது. நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன், அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘எடப்பாடியார்’ என்று பதிவிட்டனர்.
தீர்ப்பு வந்த கொண்டாட்டத்திற்கு இடையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி ‘தமிழ்நாடு’ என்று ட்வீட் செய்தார்.பல அதிமுக பிரபலங்களும் தொண்டர்களும் அதை லைக், ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.
அதிமுகவின் இப்போதைய நிலையை கருத்தில்கொண்டு, ‘ஒற்றுமை’ என்ற வார்த்தையை சசிகலா பதிவிட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘ அம்மா’ என்று பதிவிட்டுள்ளார்.
ஓபிஎஸ்ஸின் ட்விட்டர் பக்கம் மட்டும் மவுனமாக தர்ம யுத்தம் செய்தது.
திமுகவின் ஐடி விங்கும் இதற்கு சளைக்கவில்லை. ‘திராவிடம்’ என்ற வார்த்தையை ட்வீட் செய்தது.. முதல்வர் ஸ்டாலின் ’திராவிடம்’ என்று ட்வீட் செய்திருந்தார். திமுக பிரபலங்கள் பலரும் திராவிடம் என்ற வார்த்தையை ட்வீட் செய்து வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் ‘சமூக நீதி’ என்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ் தேசியம்’ என்றும் இடைவெளி இல்லாமல் பதிவிட்டிருந்தனர். இதைப் பார்த்து பலரும், ‘இது ஒரு வார்த்தையா?’ என்று கமெண்ட் அடித்திருந்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘தமிழன்’ என்று பதிவிட்டுள்ளார். உடனே ட்விட்டர்வாசிகள் அவர் கர்நாடகத்தில் ‘நான் பெருமைமிக்க கன்னடக்காரன்’ என்று பேசிய வீடியோவை இணைத்து ட்ரோல் செய்திருக்கிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள்’ என்று ட்வீட் செய்ய, ‘மக்கள் நீதி மையத்தின் இப்போதைய தேவை மக்கள்தான்’ என்று ட்விட்டர்வாசிகள் கமெண்ட் அடித்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அக்கவுண்டில் ‘வறுமைஒழிப்பு’ என்று பதிவிட்டிருந்தார். பலர் அதை ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், அவர் ட்விட்டர் கணக்கில் இருந்து யார் இந்த ட்வீட்டை செய்தது என்றும் பலர் கமெண்ட் அடித்திருந்தனர்.