ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம். இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
இதனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்துக்கு மாற வேண்டிய அல்லது அமெரிக்காவைவிட்டு வெளியேறும் சூழல் எழுந்துள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஹாவர்டு பல்கலைக்கழகம். பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு உயர்கல்வி பயில்கின்றனர். அடுத்த தலைமுறை மாணவர்கள் இங்கு பயிலவும் விரும்புகின்றனர். இந்தச் சூழலில்தான் ஹாவர்டு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான உரிமையை ரத்து செய்துள்ளது அதிபர் ட்ரம்ப் நிர்வாகம்.
இது தொடர்பாக அமெரிக்க உள்துறை வியாழக்கிழமை அன்று கூறியதாவது: அமெரிக்க எதிர்ப்பு, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை ஒருங்கிணைப்பு, பல்கலைக்கழக வளாகத்தில் யூத மாணவர்கள் மீதான தாக்குதல், சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களை பல்கலைக்கழக வளாகத்தில் ஒருங்கிணைப்பது என ஹாவர்டு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தான் பொறுப்பு. அமெரிக்க அரசாங்கத்துக்கு யார் நாட்டுக்குள் வருகிறார்கள் என்பது குறித்து அறிவதற்கான அதிகாரம் உள்ளது. ஹாவர்டு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோத நடவடிக்கை என ஹாவர்டு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2025-26 கல்வி ஆண்டு முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் பட்டம் பெறுவதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை தொடர்பான விவகாரத்தை உள்துறை மேற்பார்வை செய்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்க கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹாவர்டு பல்கலைக்கழகத்துக்கான 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகம் நீண்ட பட்டியல் ஒன்றை அனுப்பியது. அதில் இருந்த கெடுபிடிகளுக்கு இணங்கப் போவதில்லை என ஹாவர்டு பல்கலைக்கழகம் அப்போது தெரிவித்தது. இந்நிலையில் தான், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், ஏற்கெனவே அரசு வழங்கிய உத்தரவுகளுக்கு ஹாவர்டு பல்கலைக்கழகம் இணங்கினால் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை தொடர்பான முடிவை ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலிக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அல்லது அரசின் தடையை எதிர்த்து பல்கலை நிர்வாகம் நீதிமன்றத்தை அணுக வேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும்.