ரஷியாவில் பல மாகாணங்களில், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 900 ஈரோக்கள், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும், இது அவர்களது பிள்ளைகளை வளர்க்க உதவும் என்றும் பிடிஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, ரஷியாவின் பத்து மாகாணங்களில் முதல்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாகக் குறைந்திருப்பதை சரி செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டம், கடந்த மார்ச் மாதம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போது பெண்களுக்கு மட்டுமே இது பொருந்தக் கூடியதாக இருந்துள்ளது.
ஒரு நாட்டின் மக்கள் தொகை நிலைத்து இருக்க வேண்டும் என்றால், அங்கு சராசரியாக ஒரு பெண் 2.05 குழந்தைகள் பெற வேண்டும்.
ஆனால், கடந்த 2023 முதல், அந்நாட்டின் மக்கள் தொகை சராசரி அதாவது ஒரு பெண் 1.41 குழந்தைகளுக்கும் குறைவாக பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.இதனால்தான், ரஷிய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
ஆனால், ரஷிய அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறார் பருவ கருவுறுதல் அதிகரிப்பது பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள்.