தற்கால தமிழ் இலக்கிய இலக்கிய பரப்பில் தனது சிறுகதைகள், திரைப்படம் குறித்த கட்டுரைகளால் பரவலாக கவனிக்கப்பட்டவர், மணி எம்.கே.மணி. இவர் எழுதிய ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’, ‘டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்’, ‘ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ்’ சிறுகதைத் தொகுப்புகளும் ‘மதுர விசாரம்’ நாவலும் வாசகர்களிடையே கவனம் பெற்றவை.
திரைப்பட சினிமா துறையிலும் நீண்ட காலம் திரைக்கதையாளராக பணியாற்றிவர். இவர் எழுத்தில், நடிகர் கதிர் நடித்து வெளியான ‘சிகை’ திரைப்படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘நவரசா’ ஆந்தாலஜி படமொன்றில் திரைக்கதை பங்களிப்பை செய்தார். இறுதியாக, இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் வெளியான ‘டெவில்’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். சில இணையத் தொடர்களின் கதை விவாதங்களிலும் பங்கேற்றவர்.
மணி எம்.கே. மணி, மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். குஞ்சன், யசோதா இணையருக்கு நவம்பர் 4, 1962-ல் சென்னையில் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரைதான் பள்ளிக் கல்வி பயின்றுள்ளார்.
மணி எம்.கே. மணி மனைவி பெயர் மனோன்மணி. மகன் கண்மணி யாழன். இவர்களுடன் சென்னையில் வசித்து வந்த மணி எம்.கே. மணி, சிறுநீரகக் கோளாறு காரணமாக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். டயாலிஸிஸ் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூலை 15) மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவர் மறைவிற்கு எழுத்தாளர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கலில், “திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள்.” எனக் கூறியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள இரங்கல் குறிப்பில், “எம்.கே.மணி தமிழில் விசித்திரம் என சொல்லத்தக்க சில நல்ல கதைகளை எழுதிய படைப்பாளி. கதை நிகழும் களம், கதை சொல்லும் முறை மட்டுமல்ல கதைமாந்தரின் மனநிலையிலும் நாமறியாத ஒரு விந்தையான திருகல் கொண்ட கதைகள் அவை. திரைக்கதையாசிரியர். சினிமா ஆர்வலர். என்னைப் போலவே மலையாள இடைநிலை சினிமாக்களின் ரசிகர். அவ்வப்போது கடிதங்கள் வழியாகத் தொடர்பு உண்டு. நேரில் ஒருமுறை மட்டுமே பார்த்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் அஜயன் பாலா வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், “மணியின் மறைவு பெரும் அதிர்ச்சி தருகிறது. நல்ல சினிமா குறித்து தொடர்ந்து உரையாடி வந்தவர். மிஷ்கின், கமல் மற்றும் மலையாள சினிமா குறித்த விவாதங்களில் உரத்து ஒலிக்கும் குரல் அவருடையது. அவருடைய இழப்பு குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஈடு செய்யமுடியாத துயரம்” என தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கோகுல் பிரசாத் எழுதியுள்ள குறிப்பில், “எம்.கே. மணி பெரும் ஆர்வத்துடனும் பித்துடனும் தொடர்ந்து உலகத் திரைப்படங்களைப் பார்த்தவர். அவற்றைக் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதியவர். அவர் அளவுக்கு சினிமா பார்த்தவர்களைத் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். பின்னர் எழுத்தாளராகவும் சரசரவென நிறையச் சிறுகதைகளைப் படைத்தார். நாவல்கள் எழுதினார். திரைத்துறையில் பணியாற்றினார்.
கூருணர்வு மிக்கவர். ஒரு படைப்பின் சாரத்தைக் கச்சிதமாக உள்வாங்கிக்கொள்ளும் திறனுள்ளவர். ஒரு படத்தைக் குறித்த மணியின் கண்ணோட்டத்தைப் போலவே அவரது எழுத்துநடையும் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு பத்தியை வாசித்ததுமே ‘இது மணி எழுதியது’ எனக் கணித்துவிட முடியும். அவர் எழுதுகிற வேகமும் பிரமிப்பூட்டக்கூடியது. இன்றைக்குக் கேட்டால் மறுநாளே கட்டுரையோ கதையோ கொடுத்துவிடுவார்.
உடல்நலம் சீராக இல்லாத காலகட்டத்திலும் இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருந்தார். படங்களைப் பற்றி எழுதினார். இயக்குநர் கே.ஜி. ஜார்ஜ் குறித்த தொடரையும் எழுதிப் பங்களித்திருக்கிறார்.