குரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் நோய்த்தொற்றை சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் பொது சுகாதாரத்துறை அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்த எம்-பாக்ஸ், காங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர். தற்போது, மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் பரவி வருகிறது. இந்த வைரஸின் புதிய வகை திரிபு (Variant) மக்கள் மத்தியில் பரவும் வேகம் மற்றும் இதனால் அதிகரிக்கும் இறப்பு விகிதம் குறித்து விஞ்ஞானிகள் கவலையில் தெரிவித்துள்ளனர். ஆப்ரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
எம்- பாக்ஸ் எந்தளவு ஆபத்தானது? அறிகுறிகள் என்ன? பரவாமல் தடுக்க என்ன செய்யவேண்டும்? பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா தரும் அட்வைஸ் இங்கே…
எம்- பாக்ஸ் அறிகுறிகள் என்ன?
“எம்-பாக்ஸ் தொற்று என்பது 1958இல் டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே முதலில் கண்டறியப்பட்டதால் ‘மங்க்கி பாக்ஸ்’ என்று பெயரில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், உண்மையில் இந்த வைரஸ் குரங்குகளில் இயற்கையாக குடிகொண்டு வாழ்வதில்லை என்பதாலும், ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து பரவுவதால் இது போன்ற பெயரை வைத்தால் அது இன அருவருப்புத் தோற்றம் வழங்கும் என்பதால் சுருக்கமாக “எம்-பாக்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.
இந்த எம்-பாக்ஸ் வைரஸ் உலகை அச்சுறுத்திய பெரியம்மை வைரஸின் குடும்பமாகும். 1970இல் ஆப்ரிக்க நாடான காங்கோவில் முதன் முதலில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அப்போது முதலே தொடர்ந்து காங்கோ நாட்டிலும் அதற்கு அக்கம் பக்க நாடுகளிலும் இந்தத் தொற்று அடையாளம் காணப்பட்டு வருகிறது.
இந்த வைரஸ், சிறிய வகை பாலூட்டி இனங்களான எலிகள், அணில்களிடமும் குரங்குகளிடமும் காணப்படுகிறது. இந்த விலங்குகள் கடிப்பதாலும் பிராண்டுவதாலும் அவற்றின் மாமிசத்தை முறையாக சமைக்காமல் உண்பதாலும் மாமிசத்தை தொடுவதாலும் தொற்று மனிதர்களுக்கு பரவுகிறது.
தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து ஐந்து முதல் 21 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். எப்படி நமக்கு அம்மை வந்தால் உடல் முழுவதும் போடுமே அதுபோல உடல் முழுவதும் செந்நிறப்படை தோன்றி பிறகு கொப்புளமாக மாறி அந்த கொப்புளம் சருகாக உலர்ந்து காய்ந்து விழும். கூடவே காய்ச்சல் உடல் வலி, இருமல் போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகள் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம்.
பொதுவாக பெரும்பான்மையினருக்கு சாதாரண தொற்றாக குணமாகிவிடும். எனினும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், இணை நோய்கள் கொண்டவர்கள், எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு இந்த எம் பாக்ஸ் தொற்று சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம்.
இந்த நோய் பாதிப்பு பல்வேறு வகை தொற்றுகளுக்கும் நியூமோனியா எனும் நுரையீரல் தொற்று நிலைக்கும், மூளைக் காய்ச்சலுக்கும் கண் பார்வை குறைபாட்டையும் ஏற்படுத்தலாம்.
ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு பரவும் நோயாக இருப்பதால் இது குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொற்றுக்குள்ளான நபரின் தோலோடு தோல் உரசுமாறு இருக்கும் போது தொற்று எளிதில் பரவும். மேலும் தொற்றுக்குள்ளான நபரின் எச்சில், விந்து வழியாக தொற்று பரவும். தொற்றுக்குள்ளான நபருடன் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் போது தொற்றுப் பரவும்.
ஒருவருக்கு அறிகுறிகள் தோன்றியதில் இருந்து உடல் முழுவதும் தோன்றிய கொப்புளம் காய்ந்து சருகாகி குணமாகும் வரை அவர் பிறருக்குத் தொற்றைப் பரப்பலாம்.
இதுவரை இந்த வைரஸ் வகையில் இரண்டு கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. க்ளேடு ஒன், க்ளேடு டூ என்பது அந்த இரண்டு கூறுகள். க்ளேடு ஒன் – மனிதர்களைப் பொருத்தவரை கொஞ்சம் தீவிரமாக வெளிப்படக்கூடியது. க்ளேடு டூ – ஒப்பீட்டளவில் பலம் குன்றிய வைரஸ் வகையாகப் பார்க்கப்படுகிறது.
ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் போது அவரது ரத்தத்தில் இருந்து வைரஸின் டிஎன்ஏ வைப் பிரித்து பிசிஆர் பரிசோதனை செய்து நோய்க்கிருமியைக் கண்டறிய முடியும். எனினும் பலருக்கு இந்தத் தொற்று அறிகுறிகள் இல்லாமலும் வெளிப்படும் (asymptomatic infection) மற்றும் பலருக்கு சாதாரண தொற்றாக வெளிப்படும் என்பதால் தொற்றுக்குள்ளான அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பது கடினம்.
இதற்கு முன்பு ஜூலை 2022இல் உலக சுகாதார நிறுவனம் க்ளேடு டூ – பி வகை வைரஸ் பரவல் நடந்த போது இதே போன்று அவசர நிலையை அறிவித்தது. அந்த அவசர நிலை மே 2023 வாபஸ் பெறப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 93327 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுள் 208 மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் மரண விகிதம் (case fatality rate )- 0.2%. அதுவே தற்போது கடந்த ஓராண்டில் மட்டும் காங்கோ நாட்டில் 18245 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு அதில் 919 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மரண விகிதம் 5% என்று அதிகரித்திருக்கிறது. இதற்குக்காரணம் இம்முறை பரவுவது க்ளேடு – ஒன்று வகை வைரஸ் என்று கண்டறிந்துள்ளனர். கூடவே இந்த வைரஸ் பாதுகாப்பற்ற உடலுறவால் எளிதாகப் பரவுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக காங்கோவுக்கு அருகில் இருக்கும் நாடுகளான கென்யா, புருண்டி, ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் மொத்தமாக நூறு தொற்றாளர்களுக்கு மேல் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் துரிதமான விமான சேவையால் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த வைரஸ் தொற்று ஆப்பிரிக்க கண்டத்தையும் தாண்டி வெளியில் பல நாடுகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாலேயே இத்தகைய அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வைரஸுக்கு எதிராக ஏற்கனவே சின்னம்மைக்கு எதிராக பயன்படுத்திய தடுப்பூசியும் எம்விஏ – பி என் எனும் தடுப்பூசியும் 86% செயல்திறனுடன் நோயின் தீவிரத்தைக் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவத்தைப் பொருத்தவரை நோயின் அறிகுறிகள் மற்றும் தன்மைக்கு ஏற்ப பக்கபலமான சிகிச்சை முறைகளும் கூடவே சில வைரஸ் கொல்லி மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
தொற்று வராமல் எப்படி தற்காத்துக் கொள்வது?
இந்தத் தொற்று குறித்த விழிப்புணர்வு அவசியம். அடுத்து தொற்றின் அறிகுறிகள் தோன்றுபவரை உடனடியாக அவரிடம் தோன்றிய கொப்புளங்கள் சருகாகி உலர்ந்து விழும் வரை தனிமைப்படுத்த வேண்டும் .
தொற்றுக்குள்ளானவர் இருமுவதாலும் தும்முவதாலும் தொற்று பரவும் என்பதால் முக்ககவசம் அணிய வேண்டும். கைகளை சோப் போட்டு அவ்வப்போது கழுவ வேண்டும்.
1970களின் இறுதியில் சின்னம்மையை உலகம் வென்ற பின், சின்னம்மை தடுப்பூசிகள் போடும் திட்டம் உலகம் முழுவதிலும் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகே இந்த எம்-பாக்ஸ் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
2022-2023 வரை ஆப்ரிக்க கண்டத்தில் அதிலும் குறிப்பாக காங்கோ நாடு அதைச் சுற்றி மட்டும் இருந்த தொற்றுப் பரவல் ஏனைய கண்டங்களுக்கும் பரவியது.
இப்போது க்ளேடு-1 எனும் வீரியமிக்க வகை பரவுவதாலும் கூடவே பாதுகாப்பற்ற உடலுறவால் எளிதில் பரவுவதையும் கருத்தில் கொண்டு ஏனைய உலக நாடுகளுக்கு இந்த தொற்று பரவி அச்சுறுத்தும் நிலை ஏற்படலாம். எனவே அதீத எச்சரிக்கை உணர்வு தேவை.
இந்தத் தொற்று நம்மிடையே பரவுகிறதா என்பதை கண்காணித்து வர வேண்டும். இந்தத் தொற்று அடுத்த பெருந்தொற்றாக மாறும் நிலை இருப்பின் அதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.