சொன்னபடி பணத்தை திருப்பித் தராமல் கன்னியாகுமரியின் தமிழ்நாடு ஹோட்டல் தன்னை அலைக்கழிப்பதாக எழுத்தாளர் ராஜேஷ் குமார் புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராஜேஷ்குமார் கூறியிருப்பதாவது:
நான் குடும்பத்தோடு ஒரு மினி டூர் செல்ல தயாராகி, நாகர்கோவில்,கன்னியாகுமரி
என்று மார்ச் 7ந்தேதி முதல் 12ந்தேதி வரை, சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து முதற் கட்டமாக
கன்னியாகுமரி தமிழ்நாடு ஹோட்டலில் அறையை 10 நாட்களுக்கு முன்பாகவே பிப்ரவரி மாதம் ஆன்லைனில் புக் செய்து முழுத் தொகையையும் கட்டினேன்.
ஆனால்
தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால்,
கன்னியாகுமரி போகமுடியாத நிலைமை ஏற்பட்டதால்,
மார்ச் 1 ம் தேதியன்று ஹோட்டல் அறையை ஆன்லைனிலே கேன்ஸல் செய்தேன்.
ஹோட்டல் விதிகளின் படி அறையை
முன்பதிவு செய்து 48 மணிநேரத்திற்கு முன்பாக,
ரத்து செய்தால் 90 சதவீதம் கட்டணம் திரும்ப தரப்படும் என்றும் அதற்குமேல் 2 சதவீதம் ரத்து கட்டணம் விதிக்கப்படும் என்று வலைப் பக்கத்தில் கூறப்பட்டு இருந்தது.அந்த விபரம் ரத்து செய்யப்பட்ட ஆன்லைன் ரசீதிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால்…..
ஒரு வாரத்திற்கு முன்பே
நான் கேன்ஸல் செய்திருந்தும்
தமிழ் நாடு ஹோட்டல் நிர்வாகம்
எனக்கு திருப்பி அனுப்பிய தொகை 50% மட்டுமே.
மீதி 50% தொகையைக் கேட்டு போன் செய்த போது இ. மெயில் மூலம் புகார் செய்யுங்கள்.பணம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
நான் ஹோட்டல் customer care e.mail க்கு புகார் அனுப்பி வைத்தேன்.
பதில் இல்லை.
இதுகுறித்து புகார் செய்ய வலைத்தளத்தில் இருந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அதில் ஒன்று மட்டும் உயிருடன் இருந்தது (04425333113).
ரிங் போகிறது ஒருவரும் எடுக்கவில்லை. ஒருநாள் முயற்சிக்கு பின் ஒருபெண்மணி எடுத்து, நம் புகாரை கேட்டுவிட்டு ஒரு மின்னஞ்சல் தந்து அதற்கு புகார் அளிக்குமாறு கூறினார்.
உடனே மின்னஞ்சல் ([email protected]) அனுப்பினேன். இரண்டு நாள் பொறுத்திருந்தேன். ஒரு பதிலும் வரவில்லை. பணம் கட்டும்போது சுறுசுறுப்பாக இருந்த அவர்களின் மின்னஞ்சல்
இப்போது பிடிவாதமாக
மெளனம் சாதிக்கிறது,?
நேற்று
திரும்பவும் தொலைபேசி எண்களைதொடர்பு கொண்டேன்.பகீரத முயற்சிக்குபின் ஒரு பெண்மணி
லைனில் வந்தார். பிரச்சினையை சொல்லி இதற்கு ஒருமுடிவு வேண்டும் என்று சொன்னேன். ‘ சார் அவர்களுக்கு நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் எங்களுக்குத் தெரியாது. நீங்கள் நான் தரும் மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு ([email protected]) செய்தி அனுப்புங்கள்.நானும் முயற்சி எடுத்து உங்களை அழைக்கிறேன்’ என்று கூறி தொலைபேசியை வைத்துவிட்டார். திரும்பவும் நேற்று மின்னஞ்சல் அனுப்பினேன் .
பயனில்லை.காலையிலிருந்து பத்து பதினைந்து தடவை அழைத்ததில் ஒரு அழைப்பைக்கூட எடுக்கவில்லை.
என்ன செய்வது என்று
புரியவில்லை.
பணம் மரத்தில் காய்ப்பதில்லை.
உழைத்து ஈட்டுவது.
சுற்றுலாத்துறை
இப்படி
சுற்றவிடலாமா?