தஞ்சை மாவட்டத்தில் ஒரு அழகிய கிராமத்தில் நடக்கும் கதை. ஊர் தலைவராக இருக்கும் ராஜூ ராஜப்பனின் மனைவி கீதா கைலாசம்.
இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். மகள் ரூபாவிற்கு மூச்சுத்திணறல் பிரச்சனை என்பது அவ்வப்போது வருகிறது. அதற்காக அவர் சுவாச மருந்தும் எடுத்துக் கொள்கிறார்.
இந்நிலையில், கிராமத்தில் இன்னும் இரண்டு வாரத்தில் கோவில் கொடை விழா நடைபெறவிருப்பதால் ஊர் அதற்காக தயாராகி வருகிறது.
சுபாஷ் ராமசாமி கோவில் சிலையின் கீரிடத்தை தன் நண்பர்களின் உதவியோடு திருடி அதை அடமானம் வைத்து தொழில் தொடங்கி அதில் நஷ்டமும் அடைகிறார். இன்னும் இரண்டு வாரத்தில் கோவில் திருவிழா இருக்க, கிரீடம் இல்லை என்று தெரிந்தால் மாட்டி விடுவோம் என்று சுபாஷும் அவரது நண்பர்கள் மூவரும் படபடப்பில் இருக்கின்றனர்.
ஒருநாள், வீட்டிற்கு மிகுந்த கோபத்தோடு வரும் ராஜூ, மனைவி கீதாவை அடித்துவிடுகிறார். எதற்காக அடித்தீர்கள் என்று மகள் ரூபா கேட்க, ரூபாவையும் அடித்துவிடுகிறார் ராஜூ. இதனால், அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிடுகிறார் ரூபா. நள்ளிரவில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த கீதா, தனது மகள் ரூபா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியில் உறைகிறார் கீதா.
குடும்பத்தில் அனைவரும் ரூபாவின் பிணத்தைக் கண்டு கதறி அழ, தூக்கிட்டு தற்கொலை செய்தது வெளியே தெரிந்தால் கெளரவம் போய்விடும் என்பதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரூபா இறந்ததாக கிராமத்தினரிடம் கூறிவிடுகின்றனர் ரூபாவின் குடும்பத்தினர்.
கிராமமே சோகமாய் உருமாற, அனைவரும் வந்து துக்கம் விசாரிக்கின்றனர். இந்நிலையில், இரவு நெருங்க இறுதி சடங்கு செய்வதற்காக பிணத்தை தூக்க முயல்கின்றனர் கிராமத்து இளைஞர்கள். அப்போது, பிணத்தை தூக்க முடியாமல் அதிகனம் கனக்க, தொடர்ந்து பிணம் அசைவதைக் கண்டு அனைவரும் நாலாபுறமும் தெறித்து ஓடுகிறார்கள்.
மீண்டும் பிணத்தைத் தூக்க முயற்சிக்க, கண்கள் மூடியபடியே பிணம் எழுந்து உட்காருகிறது. இதனால், ஒட்டுமொத்த கிராம மக்களும் வீட்டிலிருந்து வெளியே ஓடுகின்றனர்.
இறந்த பெண் எதற்காக இப்படி மக்களை அச்சுறுத்த வேண்டும்.?? வீட்டிலிருந்து ரூபாவின் ஆன்மா தன் உடலை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்காதது ஏன் என்பதே படத்தின் மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் எப்போதாவது இப்படிப்பட்ட திரைப்படங்கள் வரும். ஹீரோயிசத்தை நம்பாமல், முன்னணி நாயகன், நாயகி யாரையும் நம்பாமல் முழுக்க முழுக்க புதுமுகங்களுடன் வந்து ரசிகர்களின் மனதை ஆக்கிரமிக்கும் திரைப்படமாக வந்திருக்கிறது எமகாதகி.
கிராமத்தில் நடக்கும் சடங்கு, நம்பிக்கை, அதுசார்ந்த மனிதர்களின் நடவடிக்கைகள் என்று முழுவதும் ஆய்வுக்குட்படும் ஒரு கதையை ஜனரஞ்சகமாக திரைக்கதையில் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலன்.
பழங்கால வீடும் அதில் அடைக்கப்பட்ட அறையை வெறித்துப் பார்க்கும் பாட்டியும், அதற்கு அவர் வைத்திருக்கும் அக்கா பாசமும், ஜாதிய மனக்குமுறல்களும் அதற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் என்று படம் நெடுகிலும் காட்சிகளை ரியாலிடி தன்மையோடு காட்டியிருப்பது புதுமை.
படத்தின் மையமாக நாயகனோ நாயகியோ இல்லாமல் எல்லா பாத்திரங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகளும், மனிதர்களின் செயப்பாடுகளும் நம்மை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கிறது.
சடலம் எழுந்து உட்காருவதும், அது நகராமல் அடம் பிடிப்பதும் நமக்கே வியர்த்து விடுகிறது. கடைசியாக கீதா கைலாசம் மகளிடம் பாசத்தைப் பொங்கி பேசும் போது தானாக அவரது மடியில் சடலம் விழும்போது நமக்கும் விசும்பல் எழுகிறது.
படத்திற்கு முக்கிய தூணாக இருப்பது ஒளிப்பதிவும், இசையும்தான். ஒளிப்பதிவு, எடிட்டிங் சுஜித் சாரங் கிராமத்து மனிதர்களின் உணர்ச்சிகளை மட்டும் படம் பிடித்து அவர்களை தூக்கிப் பிடித்திருக்கிறார். இசை ஜெசின் ஜார்ஜ் ஒரு திரில்லர் படத்திற்கு அமைதிதான் முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார். பல புதிய ஒலிகளை உணர முடிகிறது. ஒப்பாரி பாடல் புதுமை.
உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுகங்களை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான கதை சொல்லியிருக்கும் இயக்குனர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள். சடல் எழுந்து உட்காருவதற்கான விஞ்ஞான காரணம் சொல்லப்பட்டிருந்தால் அந்த குறையும் இல்லாமல் போயிருக்கும். மற்றபடி அரிதான கதை.