சதாசிவம் சின்னராசு இயக்கி, நடிக்கும் படம் ‘இ.எம்.ஐ’. இன்றயை காலத்தில் இ. எம். ஐயில் பொருட்கள், வாகனங்கள் வாங்குபவர்களின் நிலை. அதை கட்டமுடியாவிட்டால் அவர்கள் படுகிற அவமானம், அதை வசூலிப்பவர்களின் அடாவடி ஆகியவற்றை இந்த கதை பேசுகிறது.
சென்னையில் நடந்த பாடல்கள் வெளியீட்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை தேவயானி பேசியது. ‘‘இப்போது கைக்குட்டை ராணி என்ற குறும்படத்தை இயக்கியுள்ளேன். நானும் இயக்குனர் ஆகிவிட்டேன். நாம் ஏதாவது ஒன்றை புதுசாக செய்யணும். ஓடுகிற நதி மாதிரி இருக்கணும்னு நினைப்பேன். அந்தவகையில் இந்த குறும்படத்தை இயக்கிவிட்டேன். நான் முறைப்படி பிரசாத் மல்டிமீடியாவில் கோர்ஸ் படித்து, அந்த அனுபவத்தில் இயக்குனர் ஆகி இருக்கிறேன். அந்த கோர்சில் 8 பேர் படிச்சாங்க. அதில் நான் மட்டும்தான் சீனியர். நான் மட்டும்தான் பெண்கள். அந்தவகையில், எனக்கு பெருமை. நான் படித்த இடத்திலேயே, என் குறும்படம் ஒளிபரப்பானது. ஜெய்பூர் பிலிம் பெஸ்டிவலில் விருது பெற்றது, சென்னை, டில்லி பிலிம்பெஸ்டிவலில் தேர்வானது. இன்னும் பல திரைப்பட விழாக்களுக்கு செல்லப்போகிறது. அந்த குறும்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தது என் பாக்கியம். நான் கன்டன்ட் சொன்னதும், உடனே அவர் ஓகே சொன்னார். ஒரு பாட்டு எழுதியும் கொடுத்தார். பின்னணி இசையும் நன்றாக வந்துள்ளது. தேசியவிருது பெற்ற லெனின்சார் எடிட் செய்தார்.
இ எம் ஐ படக்குழுவுக்கு வாழ்த்துகள். இந்த படவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று இந்த பட டிசைனை அனுப்பினார்கள். அது என்னை கவர்ந்தது. இது, அனைவருக்கும் கனெக்ட் ஆகிற தலைப்பு. இன்றைய காலகட்டத்தில் இஎம்ஐ இல்லாமல் யாரும் வாழ முடியாது என்கிற நிலை. அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். வீடு, வண்டி, மற்ற பொருட்கள் வாங்க இஎம்ஐ தேவைப்படுகிறது. அளவுக்கு மீறினால், அது தவறாக முடியும் என்ற கருத்தையும் இந்த படம் சொல்கிறது. இந்த படம் ஜெயித்து, படத்தயாரிப்பாளருக்கு பணம் வர வேண்டும். இந்த காலத்தில் மட்டுமல்ல, எந்த காலத்திலும் ஒரு படம் தயாரித்து ஜெயிப்பது ரொம்பவே கஷ்டம். நாம் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகமாக கிடைக்க வேண்டும். அதுதான் வெற்றி.
எங்கள் காலத்தில் ஒருவர் கதை சொல்ல வந்தால், நீங்க யாருடைய உதவியாளர் என்று கேட்பேன். காரணம், அவர்கள் ஸ்கூல், அவர்கள் அனுபவம் நல்ல படத்தை தரும். அந்தவகையில் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பல இயக்குனர்கள், அவர்களின் உதவியாளர்களிடம் நான் பணியாற்றி இருக்கிறேன். பல முதல் பட இயக்குனர் படங்களில் நடித்து இருக்கிறேன். இந்த பட இயக்குனர், பேரரசு உதவியாளர். அவர் வெற்றி பெற வேண்டும். இப்போதுள்ள ஹீரோக்கள், இந்த ஹீரோ சதாசிவம் ஆகியோர் ஆண்டுக்கு பல படங்கள் நடிக்கணும். அஜித்குமார் மாதிரி ஆண்டுக்கு ஒரு படம் பண்ணாதீங்க.(சிரிக்கிறார்)