மலையாள சினிமாவின் முன்னோடி இயக்குநரும் 1980களில் மலையாள சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவருமான கே.ஜி. ஜார்ஜ் (வயது 77) நேற்று காலமானார். ‘மலையாள திரையுலகின் மனோவியல் நிபுணர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட கே.ஜி. ஜார்ஜ், கதாபாத்திரங்களின் உளவியலை நுட்பமாக கையாண்ட இயக்குனர்களில் இந்தியளவிலேயே முதல் வரிசையில் இருக்கக்கூடியவர் என்பது நிச்சயம்.
கே.ஜி. ஜார்ஜுக்கு தமிழிலும் ரசிகர்கள் உண்டு. தமிழில் இன்று ஒரு கூட்டமாக உருவாகியிருக்கும் மலையாள சினிமா ரசிகர்களுக்கு முன்பே கே.ஜி. ஜார்ஜ் படங்கள் தமிழ்நாட்டு ரசிகர்களால் திரையரங்குகளில் விரும்பி பார்க்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் 1946 மே மாதம் பிறந்தவர், கே.ஜி. ஜார்ஜ். கேரளப் பல்கலைக்கழகத்தில் 1968இல் பட்டம் பெற்ற பின், சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தினால் புனேவில் இருக்கும் இந்திய திரைப்பட நிறுவனத்தில் 1971இல் இணைந்து முறையாக சினிமாவைப் பயின்றார். பின்னர் பிரபல மலையாள இயக்குனர் ராமு காரியத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
கே.ஜி. ஜார்ஜின் முதல் படம் ‘சுவப்நாடனம்’ (1976). கருப்பு வெள்ளையில் வெளியான இந்த திரைப்படத்தில், இலக்கியப் படைப்பு போல் சினிமாவிலும் மனித மனதின் அடியாழம் வரை சென்று அலச முடியும் என்று காட்டியிருப்பார்.
மனச்சிதைவு கொண்ட ஒருவனின் உலகைப் பேசும் இப்படம், திருமணம் என்கிற அமைப்பையும் கணவன் – மனைவி உறவையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்துகிறது. இந்த விசாரணை அகம் வழியாக, கனவுகள் வழியாக, நனவிலி மனம் வழியாக என ஆழ்ந்து செல்வது ஆச்சரியம் தருவது.
முதற் காதலை இழந்த ஒரு ஆணும் – சராசரி பெண்ணின் அத்தனை ஆசைகளையும் வசதியான பின்புலத்தையும் கொண்ட ஒரு பெண்ணும், உறவு நிமித்தம், திருமண பந்தத்திற்குள் நுழைகிறார்கள். திருமண வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை ‘சுவப்நாடனம்’ முன் வைக்கிறது. மனச் சிதைவுக்கு உள்ளாகும் பிரதான கதாபாத்திரமான மருத்துவர் கோபி, நார்கோடிக் டெஸ்ட் மூலம் தன் பழைய நினைவுகளைச் சொல்வதாக திரைக்கதை விரிகிறது. இவரது மனைவி சுமித்ரா கதாபாத்திரத்தில் ராணி சந்திரா வருகிறார். ராணி சந்திராவின் தோழி ரோஸி கதாபாத்திரத்தில் மல்லிகா சுகுமாரன்.
ஒரு காட்சி… ராணி சந்திரா கணவன் கோபியுடன் சண்டை போட்டுக்கொண்டு பிறந்த வீட்டிற்குப் போயிருப்பார். அன்று மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்து தூங்கிவிடும் கோபி, அசாதாரண கனவு கண்டு அலறி இரவு ஒன்பது மணிக்கே விழித்து விடுவார். அதன்பின்னர் 15 நிமிடங்கள் வரை தொடரும் நீண்ட காட்சியில் காமமும் போதையும் வெறுப்பும் குரூரமும் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள விழையும் சாதாரண மனதின் ஆசையும் அவ்வளவு கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். முழுப் போதையில் நெருங்கி வரும் கோபியை, குடி பழகிய ரோஸி மிகச் சாதரணமாக எதிர்கொள்வார். ரோஸி போன்ற திடமான ஒரு பெண் கதாபாத்திரத்தை இன்றுவரை தமிழ் சினிமா உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக் காட்சியில், எல்லாம் முடிந்து வீடு திரும்பும் கோபி, தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு எதிர்காற்றில் இலக்கற்று விரைவார். படம் முழுக்க இறுக்கமாக இருக்கும் கோபி முகம் லேசாகப் புன்னகைப்பதுடன் படம் முடியும்.
‘சுவப்நாடனம்’ போலவே ‘இரகல்’, ‘பஞ்சவடிபாலம்’, ‘ஆதாமின்ட வாரியெலு’, ‘லேகயுடெ மரணம்: ஒரு ப்ளாஷ்பாக்’, ‘யவனிகா’, ‘கோலங்கள்’, ‘உள்கடல்’, ‘மேளா’ போன்றவையும் கே.ஜி. ஜார்ஜின் தனித்துவமான, மறக்க முடியாத படங்கள். இவை அனைத்துமே 1980களின் நிலவிய கேரள சமூகப் பண்பாட்டு, அரசியல் உலகை மிகத் துல்லியமாகச் சித்தரிப்பவை. ஒருவகையில் கேரள வாழ்வின் சாட்சியங்கள். குறிப்பாக, பெண்களின் வாழ்க்கை துயரங்கள் பற்றி நிஜமாகப் பதிவு செய்தவை என இவரது படங்களை சொல்லலாம்.
மலையாளத்தில் மாற்று சினிமாவை உருவாக்கியவர்கள் என அறியப்படும் அரவிந்தன். பத்மராஜன், பரதன், அடூர் கோபாலகிருஷ்ணன், சேது மாதவன், எம்.டி. வாசுதேவன் நாயர் போன்ற இயக்குனர்கள் வரிசையில் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவர் கே. ஜி. ஜார்ஜ். இவரது எல்லாப் படங்களுமே அந்தந்த வகைமையின் உச்சம் எனலாம். ஒரு இலக்கிய பிரதியை வாசிக்கும் அனுபவத்தை அளிக்கக்கூடியவை.
கே.ஜி. ஜார்ஜின் திரையுலக வாழ்க்கை மற்றும் திரைப் படங்கள் குறித்து ‘8 ½ Intercuts: Life and Films of K G George’ என்ற ஆவணப்படம் வெளிவந்துள்ளது. இப்படத்தை மலையாளத்தின் இன்றைய இளம் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவரான லிஜின் ஜோஸ் இயக்கியுள்ளார்.
கே.ஜி. ஜார்ஜ், பூனே திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது நிறைய உலகத் திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி அவர் பார்த்த உலக சினிமாவில் அவருக்கு விருப்பமான இயக்குநர் பெடரிகோ பெலினி. ‘ஆதாமின்டே வாரியலு’ படத்தின் இறுதிக் காட்சியில் பெண்கள் கூட்டமாக வெளியேறி ஓடும் போது படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஜார்ஜினை தள்ளிக்கொண்டு ஓடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இது பெலினியின் பாதிப்பில் உருவானதுதான்.
பெலினியின் ‘8½’ திரைப்படத்தை நினைவுபடுத்தும் விதமாக, கே.ஜி. ஜார்ஜ் பற்றிய ஆவணப்படத்துக்கு ‘8 ½ Intercuts: Life and Films of K G George’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த ஆவணப் படம் கே.ஜி. ஜார்ஜின் சினிமா வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை, நினைவுகளை, அனுபவங்களை தொகுத்து தருகிறது. கே.ஜி. ஜார்ஜின் படங்களைப் போலவே இந்த ஆவணப்படமும் பெருமைக்குரிய கலைப் படைப்பாகவே கொண்டாடப்படுகிறது. சர்வதேச அளவில் பல்வேறு திரைவிழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளை பெற்றுள்ளது.
மலையாள எழுத்தாளர்கள் எம்.டி. வாசுதேவன் நாயர், பால் சக்கரியா, விமர்சகர் வெங்கடேஸ்வரன், ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபு, நடிகை கீது மோகன் தாஸ், திரைப்பட இயக்குநர்கள் லெனின் ராஜேந்திரன், அடூர் கோபாலகிருஷ்ணன், அஞ்சலி மேனன், படத்தொகுப்பாளர் பீனா பால், நடிகர்கள் மம்முட்டி, பகத் பாசில், நெடுமுடி வேணு ஆகியோர் ஜார்ஜின் திரைப்படங்கள் பற்றிய தங்களின் அனுபவங்களை இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கே.ஜி. ஜார்ஜ், அவரது மனைவி சல்மா இருவரும் மனம் திறந்து பேசுகிறார்கள். பாடகியான சல்மா, கே.ஜி. ஜார்ஜை திருமணம் செய்துகொண்ட விதம் பற்றியும், குடி மற்றும் பெண்கள் விஷயத்தில் ஜார்ஜ் மூழ்கிக் கிடந்தது குறித்தும் வெளிப்படையாக பேசுகிறார். தன் மீது மனைவி சுமத்தும் குற்றச்சாட்டுகளைச் சிரித்தபடியே எதிர்கொள்ளும் கே.ஜி. ஜார்ஜ், ‘தனக்குக் குடும்பம், மனைவி, பிள்ளை, உறவினர் போன்றவற்றில் எப்போதும் ஈடுபாடு இல்லை; தான் ஒரு சுதந்திரமான கலைஞன்; தனது விருப்பமும் நினைவும் சினிமா மட்டுமே’ என்கிறார்.
தன்னை கவர்ந்ததாக எம்.பி. ஸ்ரீனிவாசன் இசை குறித்தும், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு பற்றியும் பேசுகிறார். தனக்கு உளவியலில் மிகுந்த ஆர்வம் என்றும் சொல்கிறார்.
கே.ஜி. ஜார்ஜின் கடைசிப்படம் ‘விளங்கோடு தேசம்’. இப்படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. இது குறித்து பேசும் கே.ஜி. ஜார்ஜ், “இனி நான் படம் இயக்கப் போவதில்லை. எனது காலம் முடிந்துவிட்டது. நான் விரும்பிய சினிமாவை இப்போது இயக்க முடியாது. இன்றுள்ள திரையுலகம் வேறுவிதமானது” என்கிறார்.
கே.ஜி. ஜார்ஜ் மறைவு மலையாள திரையுலகுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே பேரிழப்பு.