சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டிக்கும் தொனியில் அமித் ஷா பேசும் வீடியோ ஒன்று இன்று காலை சமூக வலைதளங்களில் வைரலானது. சமீப காலமாக அண்ணாமலைக்கு எதிரான சில கருத்துகளை தமிழிசை தெரிவித்து வருகிறார். அது கட்சித் தலைமைக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் தமிழிசையை அமித் ஷா கண்டித்தார் என்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அதற்கு விளக்கங்களை கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மையை அறிய கமலாலயத்தில் விசாரித்தோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவில் உள்ள கோஷ்டி பூசல்கள் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெருவாரியான இடங்களை வென்றிருக்கலாம் என்பது பல மூத்த தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அண்ணாமலையை வெளிப்படையாக பகைத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் தங்கள் கருத்தை வெளியிடாமல் இருந்தனர்.
ஆனால் தெலங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து, தென்சென்னை தொகுதியில் வேட்பாளராக நின்ற தமிழிசை சவுந்தரராஜன் 2 நாட்களுக்கு முன் இந்த கருத்தை வெளிப்படையாக சொன்னார். பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சொன்னது அண்ணாமலைக்கு எதிரான கருத்தாக பார்க்கப்பட்டது. மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை, தமிழக பாஜகவில் கிரிமினல்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பாஜகவின் வார் ரூம் பற்றியும் சில கருத்துகளை வெளியிட்டார். இவை அனைத்தும் அண்ணாமலைக்கு எதிரான செயல்களாக பார்க்கப்படுகிறது.
இந்த கருத்துக்கு பதிலடியாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டனர். அதற்கு எதிராக கல்யாணராமன் உள்ளிட்ட சில பாஜக நிர்வாகிகளும் கருத்துகளை பதிவீட்டனர். அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் தமிழிசைக்கு பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி 2 பிரிவாக பாஜகவினர் மோதிக்கொண்டு இருக்கும் விஷயம் டெல்லி தலைமைக்கு எட்ட, அவர்கள் கடுப்பாகி உள்ளனர். இதுபற்றி விசாரித்து சொல்லுமாறு தமிழக அரசியலை நன்கு தெரிந்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் கூறியிருக்கின்றனர். அவரும் தொலைபேசி வழியாக விசாரணை நடத்தியுள்ளார். குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரிடம் பேசிய பியூஷ் கோயல், நடந்த சம்பவங்களைப் பற்றி விரிவாக ஒரு அறிக்கையை தரச் சொல்லி இருக்கிறார்.
அண்ணாமலையின் செயல்பாடு, கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் அண்ணாமலை நடந்துகொள்ளும் முறை உள்ளிட்டவற்றைப் பற்றியும் தன்னிடம் அறிக்கை தருமாறு பியூஷ் கோயல் அவர்களிடம் கேட்டதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே டெல்லி தலைமையை தொடர்புகொண்ட அண்ணாமலை, 2026 தேர்தலில் பாஜக பெரிய அளவில் ஜெயிக்க வேண்டுமானால், கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் விட வேண்டும் என்று கோரியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழிசையை பேசிய சில வீடியோக்களையும் அவர் டெல்லி தலைமைக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.