ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகர் டெல்லி கணேஷ் கூறியதாவது…
கமலுடன் பல படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்ததால் எனக்கு தமிழ் திரையுலகில் ஒரு முக்கியத்துவம் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கமல் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் கமர்ஷியல் படங்களில் நடிக்கத் தொடங்கியதும், அதில் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் இல்லாததும் அதற்கு காரணம். உதாரணமாக விக்ரம் படம் ஆக்ஷன் படமாக இருந்தது. அதில் நான் துப்பாக்கி எடுத்து சண்டை போடுவதுபோல் காட்சி இருந்தால் யாராவது ரசிப்பார்களா? இதுஇபோல் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லாததால் அவரது படத்தில் நடிக்க முடியாமல் இருந்தது.
இந்த சமயத்தில்தான் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கமலுடன் நடிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியைவிட, ஷங்கர் படத்தில் முதல் முறையாக நடிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் படப்பிடிப்புக்கு சென்றேன்.
ஷங்கர் என்னை மிக மரியாதையாக நடத்தினார். அவரைப் போன்ற ஒரு மரியாதையான இயக்குநரைப் பார்க்க முடியாது. படப்பிடிப்பு தளத்துக்கு நான் சென்று காரை விட்டு கீழே இறங்குவதற்குள், அவர் என்னை வரவேற்க வெளியில் வந்துவிட்டார். அவரே என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்றார்.
“நானே வருவேனே… நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று ஷங்கரைக் கேட்டேன். அதற்கு அவர், “நீங்கள் எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்?” என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார். படப்பிடிப்பில் நான் நடிக்கும்போதும் அவர் எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். என்னிடம் சீனைச் சொல்லி, “இதைப் பண்ண முடியுமா என்று பாருங்கள். முடியாவிட்டால் வேறு மாதிரி எடுக்கலாம்” என்றார். நான் அவர் சொன்ன மாதிரியே செய்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தேன். ‘இந்தியன் 2’ படத்தில் நான் இதுவரை செய்யாத கேரக்டரைச் செய்திருக்கிறேன்.
ஷங்கர் போன்ற நல்ல இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
படப்பிடிப்பு இடைவேளையில் கமலிடம் பேசும்போது, “நீங்கள் இப்போது அரசியலில் நுழைந்துவிட்டீர்கள். பெரிய படங்களைச் செய்கிறீர்கள். என்னிடம் பேசுவீர்களா மாட்டீர்களா என்று கூச்சமாக இருந்தது. அதனால்தான் நான் உங்களைப் பார்க்க வரவில்லை” என்றேன். அதற்கு கமல், “நீங்கள் நினைப்பதுபோல் இல்லை. நான் எப்பவும் அதே கமல்தான். உங்கள் உடல் நன்றாக இருக்கிறதா?” என்றார்.
“அரசியல் எப்படி போய்ட்டிருக்கு? அரசியல்ல நீங்க சரியா இருந்தா மட்டும் போதாது. உங்களைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாக இருக்கணும். இல்லாவிட்டால் உங்களுக்கு கெட்ட பெயர் வரும்” என்றேன்.
அதற்கு கமல், “எனக்கு அப்படி கெட்ட பெயர் வர வாய்ப்பில்லை. ஏன்னா என் கட்சியில என்னைச் சுத்தி இருக்கிற அத்தனை பேரும் நல்லவர்கள். அவர்கள் அனைவரும் வசதியானவர்கள். அரசியலுக்கு வந்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அவங்க கட்சிக்கு ஏதாவது கொடுப்பாங்களே தவிர கட்சியில இருந்து எதையும் எடுக்க மாட்டாங்க. அப்படிப்பட்ட நண்பர்களைத்தான் நான் வைத்திருக்கிறேன்” என்றார்.
அப்படின்னா ஓகே சார்னு சொல்லி நான் அவரிடம் இருந்து விடைபெற்றேன்.
இவ்வாறு டெல்லி கணேஷ் கூறினார்.