வசந்த பாலன்
நீங்கள் வாசிக்கவே முடியாத வாசிக்கும் போதே எரிந்து சாம்பலாகிற ஒரு கடிதத்தை மனப்பாரத்தோடு எழுதிக்கொண்டிருக்கிறேன்.எந்த உரையாடலிலும் கலகலவென்று சிரித்துக்கொண்டேயிருப்பீர்கள்.அந்த உரத்த புன்னகை நினைவுக்கு வருகிறது.
உங்களை வெற்றியின் உச்சத்தில் பார்த்திருக்கிறேன்.பெரியதாக அலட்டிக்கொள்ளாத உங்களின் இயல்பு மகிழ்ச்சியாக இருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு உங்களின் சிறுநீரகம் பழுதாகி விட்டது என்று கேள்விப்பட்டு Bofta திரைப்படக் கல்லூரிக்கு ஓடி வந்தேன். நோய்மைப் பற்றி எப்படி உரையாடலைத் துவங்குவது என்று தெரியாமல் நான் நீண்ட அமைதிக் காத்தேன்.
நீங்கள் சரளமாக இலக்கியம் பற்றியும் திரைப்படங்கள் குறித்தும் உரையாடியவண்ணம் இருந்தீர்கள். நீங்கள் ஒரு துளி கூட உங்கள் நோய்மை குறித்தோ உங்கள் மனநிலை, பொருளாதார நிலை குறித்தோ ஒரு சொல் கூட அந்த அறையில் சிதறி விழவில்லை. யாரிடமும் கழிவிரக்கத்தைக் கோராத உங்களின் மன திடம் எனக்கு பெரும் மனத்திறப்பை உருவாக்கியது.
பலமுறை சூர்யா மருத்துவமனையில் உங்களைப் பார்த்திருக்கிறேன். கைகளை இறுக பற்றிக்கொள்வேன். ஒன்றுமில்லை பாலன் என்று மாறாப்புன்னகையோடு கடந்து போவீர்கள். இப்போதும் அதே புன்னகையோடு கரைந்து விட்டீர்கள்.
இந்த கணத்தில் நீங்கள் நோய்மையுற்ற போது உங்களை இடையறாது தோள் மாற்றி தோள் மாற்றி சுமந்து கொண்டிருந்த உங்களை அத்துணை நண்பர்களுக்கும் என் பேரன்பு.