மியான்மர் – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஐடி துறையில் வேலைகள் வாங்கித் தருவதாக ‘ஏஜெண்டுகள்’ அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி சென்று, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் பலர் அந்நாடுகளுக்குச் சென்றனர். பின்னர் அவர்கள், ராணுவ ஆட்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத மியான்மரின் சட்டவிரோத எல்லைப் பகுதிகளில், சீன குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் சைபர் குற்ற மையங்களுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் எல்லையில் உள்ள சைபர் குற்ற மையங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் மூலம், பெரும்பாலான இந்தியர்கள், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் சேர்த்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மியான்மரின் மியாவாடி பகுதியிலிருந்து தாய்லாந்தின் மே சோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்திய விமானப் படை விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட 266 இந்தியர்கள் நேற்று இந்திய விமானப்படை விமானம் மூலம் பாதுகாப்பாக திருப்பி அனுப்ப இந்திய அரசு ஏற்பாடு செய்தது. இதேபோல், திங்களன்று, 283 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்திய தூதரகங்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் இணைந்து அவர்கள் விடுதலையைப் பெறவும், அவர்களை திருப்பி அனுப்பவும் உதவின என்று குறிப்பிட்டுள்ளார்.
போலி வேலை வாய்ப்புகளை நம்பி, மியான்மர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களை மீட்பதற்கான தொடர் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இவ்வாறு சென்றவர்கள், மியான்மர் – தாய்லாந்து எல்லையில் இயங்கும் மோசடி மையங்களில் சைபர் குற்றத்திலும் பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட வைக்கப்பட்டனர் என்றும் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மோசடிகள் குறித்து சமூக ஊடகப் பதிவுகள் மூலம் பரப்பப்பட்ட எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு வெளிநாடு செல்வோர் செயல்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர், தாங்கள் பணிபுரிய செல்லும் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் தொடர்பாக இந்திய தூதரகங்கள் மூலம் விசாரித்துக்கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேபோன்று போலி வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி லாவோஸ் சென்று அங்கு சைபர் மோசடி மையங்களில் பணியமர்த்தப்பட்ட 67 இந்தியர்களை, லாவோஸில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த ஜனவரி மாதம் மீட்டது. இதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாட்டில் இதுபோன்ற மோசடிகளில் இருந்து காப்பாற்றப்பட்ட மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 924 ஆக உயர்ந்துள்ளது.