No menu items!

கிரிக்கெட் யுத்தம் – இந்தியா நம்பும் வீரர்கள்

கிரிக்கெட் யுத்தம் – இந்தியா நம்பும் வீரர்கள்

மீண்டும் ஒரு கிரிக்கெட் யுத்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. ஆசிய கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடரில் செப்டம்பர் 2-ம் தேதி நடக்கும் லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. கிரிக்கெட், ஹாக்கி, கபடி என்று இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தப் போட்டியில் ஆடினாலும் அனல் பறப்பது வழக்கம். அதே அனல் இந்த போட்டியிலும் பறக்கும் என்பது நிச்சயம். கோப்பையை ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை பாகிஸ்தானிடம் மட்டும் தோற்கக்கூடாது என்ற மனநிலையில் இந்திய ரசிகர்கள் இருக்க, கிட்டத்தட்ட அதே மனநிலையுடன் பாகிஸ்தான் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இலங்கையில் சமீப காலமாக கிரிக்கெட் மைதானங்கள் நிறைந்ததில்லை. பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை மக்கள் பெரும் பணத்தைக் கொடுத்து கிரிக்கெட் போட்டிகளை காண வருவதில்லை. ஆனால் இதற்கு நேர் எதிராக இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்கள் முழுவதும் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்டது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற விவாதங்களில் கிரிக்கெட் பண்டிட்கள் இறங்கியுள்ள சூழலில் இந்த போட்டியில் இந்தியா நம்பியிருக்கும் 5 வீர்ர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

விராட் கோலி:

இந்தியாவின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த போட்டிகளில் 536 ரன்களைக் குவித்துள்ள விராட் கோலியின் சராசரி ரன்கள் 48.72. பாகிஸ்தானின் அதிவேக பந்துவீச்சாளர்களான ஹாரிஸ் ராஃபையும், ஷானின்ஷா அப்ரிடியையும் எப்படி சமாளிப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘அதைப்பற்றி கவலை இல்லை… எங்களிடம் விராட் கோலி இருக்கிறார்’ என்று பதிலளித்து இருக்கிறார் இந்திய தேர்வுக்குழுவின் தலைவர் அஜித் அகர்கர். அந்த அளவுக்கு விராட் கோலியை இந்தியா நம்பியிருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அடித்த அதிகபட்ச ஸ்கோர் 183. அந்த ஸ்கோரை பாகிஸ்தானுக்கு எதிராக 2012-ம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில்தான் கோலி அடித்திருக்கிறார் என்பது அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.

விராட் கோலியைப் பொறுத்தவரை தற்காலத்தின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற பெருமை அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில போட்டிகளில் ஆடாமல் கோலி ஒதுங்கி இருக்க, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசம் அந்த முதலிடத்தை பிடித்திருக்கிறார். இப்போது பாபர் ஆசமை விட தான்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி இருக்கிறார். அதை அவர் எந்த அளவுக்கு நிரூபிப்பார் என்பதில்தான் இந்தியாவின் வெற்றி அடங்கி இருக்கிறது.

ரோஹித் சர்மா:

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றிபெற வேண்டுமானால், அதற்கு சிறப்பான தொடக்கம் அவசியம். அந்த சிறப்பான தொடக்கத்துக்கு ரோஹித் சர்மாவைத்தான் மலைபோல நம்பியிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 16 போட்டிகளில் ஆடியுள்ள ரோஹித் சர்மா, அதில் 720 ரன்களை குவித்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக 2 சதங்களையும், 6 அரை சதங்களையும் குவித்த ரோஹித் சர்மா, கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 113 பந்துகளில் 140 ரன்களைக் குவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த போட்டிக்கு பிறகு இப்போதுதான் அவர் மீண்டும் பாகிஸ்தானை சந்திக்கிறார் என்பதால் அதே ஆட்டத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.

ஜஸ்பிரித் பும்ரா:

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பந்துவீசும் ஆற்றல் வாய்ந்த இந்தியாவின் ஒரே வீர்ர் என்று பும்ராவைச் சொல்லலாம். யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசும் அவர் அணிக்கு வந்த பிறகுதான், மற்றவர்களுக்கு இந்திய பந்துவீச்சின் மீது மரியாதை வந்திருக்கிறது. காயத்தால் நீண்டகாலம் ஓய்வில் இருந்த பும்ரா, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போட்டிக்கு பிறகு, இப்போதுதான் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் ஆடுகிறார். தனது பந்துவீச்சில் உள்ள வேகம் குறையவில்லை என்பதை இந்த போட்டியில் அவர் நிரூபிக்கவேண்டி உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில் அவர் இந்த தேர்வில் மீண்டுவருவது இந்திய அணிக்கும் கட்டாய தேவை.

சுப்மான் கில்:

இந்தியாவின் அடுத்த தலைமுறை ஹீரோ. கோலிக்கு அடுத்து இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேனாக வளர்ந்து வரும் வீரர் சுப்மான் கில். 27 ஒருநாள் போட்டிகளில் 1,437 ரன்களைக் குவித்துள்ள சுப்மான் கில்லின் சராசரி ரன்கள் 62.47. இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் இவரது கைவசம் இருக்கிறது. ஆனால் எத்தனை சாதனைகளை படைத்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியிலாவது ஹீரோயிசம் காட்டி, சதம் அடித்து, அணியை வெற்றிபெறச் செய்தால்தான் இந்திய ரசிகர்கள் ஒருவரை ஹீரோவாகப் பார்ப்பார்கள். அப்படி ஹீரோ ஆக அவருக்கு நாளை முதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் ஹீரோ ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...