கடந்த ஐபிஎல் சீசனில் தொடங்கிய ஆக்ரோஷமான பேட்டிங் என்பது இந்த ஐபிஎல் சீசனிலும் எடுத்த எடுப்பிலேயே உச்சம் தொட்டுள்ளது. இதில் சிஎஸ்கே பேட்டிங் மட்டும்தான் ஓய்வு பெற்ற டாடிஸ் அணி போன்று லொட லொட வென்று கழன்று போய் கிடக்கிறது. மற்ற அணிகளின் பேட்டிங் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு வருகின்றன.
காகிசோ ரபாடா இப்படி ஒரேயடியாக பேட்டிங்குக்காக மட்டுமே ஒரு தொடர் நடத்தப்படுவதை கிரிக்கெட் என்று அழைக்க வேண்டாம், ‘பேட்டிங்’ என்று அழையுங்கள் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். முதல் 5 போட்டிகள் முடிவடைந்த நிலையிலேயே கடந்த ஐபிஎல் சீசனில் இதே பகுதியில் 87 சிக்ஸர்களாக இருந்தது இப்போது 119 ஆக அதிகரித்துள்ளது பவுண்டரிகளின் எண்ணிக்கையும் 34% அதிகரித்துள்ளதாக கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பவுண்டரிகள் எல்லாம் சகட்டு மேனிக்கு வருகின்றன. எல்லைக்கோடுகள் குறுகிக்கொண்டே வருகின்றன, இப்படியே போனால் பவுலர் வீசும் போது பேட்டர் வெறும் வாயால் ‘ப்பூ’ என்று ஊதினால் பந்து பவுண்டரியோ சிக்ஸரோ சென்றாலும் செல்லும். எச்சில் துப்பினால் சிக்ஸரில் போய் விழும் போல் இருக்கிறது. அணிகளின் கள வியூகங்களும் பவுண்டரி அதிகம் செல்ல வேண்டும் என்பது போலவே அமைக்கப்படுகின்றன. ரபாடா கூறுவது போல் கிரிக்கெட் செத்து விட்டது. அஸ்வின் கூறுவது போல் ஐபிஎல் பவுலர்களுக்கு மனநல மருத்துவர்களின் உதவி தேவைப்படலாம் என்றே தெரிகிறது.
இந்நிலையில், ரபாடா கூறுவதாவது, “ஆட்டம் முன்னேறி வருகிறது. ஆனால், ஒருதலைபட்சமாக தட்டையாகச் சென்று கொண்டிருந்தால் ஆட்டத்தில் சுவாரஸ்யத்தையும் கேளிக்கைத் தன்மையையும் நீக்கி விடுகிறது. அதாவது இந்த விளையாட்டை இனி ‘பேட்டிங்’ என்று அழைக்கலாம். ஏனெனில், இது கிரிக்கெட் அல்ல. பல சாதனைகள் உடைபடலாம் அது எனக்கு பிரச்சினை இல்லை.
ஹை ஸ்கோரிங் போட்டிகள் எப்படி நல்லதோ அதே போல் குறைந்த ஸ்கோர் போட்டிகளும் நல்லதுதான். ஆனால், இங்கு பேலன்ஸ் ஆஃப் பவர் ஒரு பக்கமே சாய்ந்து வருகிறது. பந்து வீச்சுக்கும் பேட்டிங்கிற்கும் ஒரு சமச்சீரான வாய்ப்பு இருக்க வேண்டும் அதுதான் சுவாரஸ்யம்.