ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடர் மார்ச் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு இறுதியில் உலகக் கோப்பை போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் இந்திய அணியைவிட அதில் ஆடும் 4 வீரர்களுக்கு இந்த தொடர் do or die தொடராக இருக்கிறது.
கே.எல்.ராகுல்:
விராட் கோலி அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த காலத்தில் இந்தியாவின் புதிய நட்சத்திரமாக எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் கே.எல்.ராகுல். டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் வேகமாக முன்னேறிய கே.எல்.ராகுல் இந்தியாவின் எதிர்கால கேப்டனாகவும் எதிர்பார்க்கப்பட்டார். பேட்டிங்குடன் விக்கெட் கீப்பிங் திறமையும் இருந்ததால் அணியில் அவருக்கு ஸ்திரமான இடம் கிடைக்கும் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள்.
ஆனால் அவரது இந்த நட்சத்திர வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போல் சட்டென்று உடைத்துவிட்டது. கடந்த 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் ஒரே ஒரு அரைச் சதம்தான் எடுத்திருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் ராகுலின் ரன்கள் இளைத்துப் போக கிரிக்கெட் விமர்சகர்களுக்கு இவர்தான் அவல். சுப்மான் கில், இஷான் கிஷன் போன்ற தொடக்க ஆட்டக்காரர்கள் துடிப்பாக இருக்கும்போது இவரை இன்னும் தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்த வேண்டுமா என்பது தேர்வுக் குழுவின் முன் இப்போது பெரிதாக எழுந்திருக்கிறது. இருந்தாலும் பேட்டிங்குடன் கீப்பிங்கும் செய்வார் என்பதால் ராகுலை இந்த ஒருநால் தொடரில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், ஆஸ்திரேலிய தொடரில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கே.எல்.ராகுல்.
ரவீந்திர ஜடேஜா:
கே.எல்.ராகுலைப் போல் ஜடேஜாவின் ஃபார்ம் ஒன்றும் அத்தனை மோசமாக இல்லை. அவரைவிட சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டு இருக்கிறார். ஆனாலும் அவரது இடம் அணியில் ஆட்டம் கண்டிருக்கிறது. இதற்கு காரணம் அவரது உடல்நிலை. காயங்களால் அடுத்தடுத்து ஒருநாள் போட்டிகளில் ஆடாமல் இருந்துள்ளார் ஜடேஜா. கடந்த 2021-ம் ஆண்டுமுதல் இதுவரை அவர் ஆடியது மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகளில்தான்.
இந்த நேரத்தில் அவருக்கு பதிலாக களம் இறங்கிய அக்ஷர் படேல், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அணியில் ஆல்ரவுண்டர் இடத்தில் செம்மையாக ஒட்டிக்கொண்டார். அக்ஷர் படேல் போதாதென்று வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது ஆகியோரும் ஆல்ரவுண்டருக்கான 7-வது இடத்துக்கு வரிசைகட்டி நிற்பதால் ஜடேஜாவுக்கு இப்போது ஏக பிரஷர். அந்த பிரஷரைப் போக்க இந்த தொடர் அவருக்கு மிகவும் அவசியம்.
சூர்யகுமார் யாதவ்
டி20 போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய ரவுடி சூர்யகுமார் யாதவ். ஆனால் தனது டி20 ஃபார்மை ஒருநாள் போட்டிக்குள் இன்னும் சூர்யகுமார் யாதவால் கொண்டுவர முடியவில்லை. ஒருநாள் போட்டிகளில் இன்னும் அவரது சராசரி 28.86 ரன்களாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அவருக்கு பதில் பல போட்டிகளில் இஷான் கிஷனும், ஸ்ரேயஸ் ஐயரும் ஆடவைக்கப்பட்டனர்.
இப்போது ஸ்ரேயஸ் ஐயர் காயம்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும்போல் இருக்கிறது. டி20 போட்டியைப் போலவே ஒருநால் போட்டியிலும் அவர் தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வாரா என்பது இந்த தொடரில் தெரிந்துவிடும்.
ஷர்துல் தாக்குர்
இந்திய அணியின் 3வது வேகப்பந்து வீச்சாளராக யார் இருக்கப் போகிறார்கள் என்பதில் ஷர்துல் தாஅக்குருக்கும், உம்ரான் மாலிக்குக்கும் இடையேதான் கடும் போட்டி. இதில் பந்து வீசுவதுடன் கொஞ்சம் பேட்டிங்கும் செய்வார் என்பதால் இப்போதைக்கு ஷர்துல் தாக்குரின் கைதான் ஓங்கி இருக்கிறது. இது இப்படியே நீடிக்க, இந்த தொடரில் விக்கெட்களை எடுப்பதுடன் அவர் நிறைய ரன்களையும் குவிக்கவேண்டி இருக்கிறது.