சென்னையில் இது இருமல் காலம். சாதாரண கிளினிக்குகள் முதல் அரசு மருத்துவமனை வரை இருமல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, டாக்டரைப் பார்க்க வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக 4 வாரங்களுக்கு மேல் ஆவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொடர் இருமல் பிரச்சினையைப் பற்றி கூறும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பேராசிரியரும் டாக்டருமான பரந்தாமன், “இன்புளூயன்ஸா வைரஸ் மூச்சுப் பாதையை பாதிப்பதால் பலருக்கு ஜுரம், சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வாரங்களுக்கு மேல் இருமல் பிரச்சினை ஏற்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை நீண்ட நாட்கள் இருக்கும். அதேசமயம் ஒவ்வாமை பிரச்சினை இல்லாதவர்களை இந்த வைரஸ் தாக்கினாலும், சில நாட்களில் அவர்களின் இருமல் பிரச்சினை குணமாகி விடுகிறது” என்கிறார்.
மற்றொரு தனியார் மருத்துவமனையின் டாக்டர் இதுபற்றி கூறும்போது, “பொதுவாக மழைக்காலத்தில் ப்ளூ ஜுரம் பரவும். இன்புளூயன்ஸா வைரஸின் தாக்கம் இந்த காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வைரஸ் ஜுரம் குணமானாலும் 4 வாரங்கள் வரை பலருக்கும் இருமல் விடாமல் இருக்கிறது. அபூர்வமாக ஒரு சிலருக்கு ஒரு மாதத்தைக் கடந்தும் இருமல் நீடிக்கிறது. பேசினாலே இருமல் வருவதாக எங்களிடம் வரும் நோயாளிகள் சொல்கிறார்கள். இந்த தொடர் இருமலுக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.
இப்படி தொடர் இருமலால் பாதிக்கப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டி நெறிமுறைகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இதன்படி தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்…
ஜுரம் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.
டாக்டர்களிடம் சென்று தங்கள் இருமலுக்கான காரணம் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் பொது இடங்களுக்கு செல்லவேண்டி இருந்தால் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்றாமல் இருக்க முகக்கவசத்தை அணிய வேண்டும்.
குளிர் நிறைந்த சூழலில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
வெதுவெதுப்பான நீரை அடிக்கடி பருக வேண்டும்
தனி அறையில் ஓய்வு எடுக்க வேண்டும். முடிந்தவரை அதிகம் பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.