No menu items!

சிந்து சமவெளிக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு!

சிந்து சமவெளிக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு!

தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைக்கும் கிடைக்கும் குறியீடுகளுடன், சிந்து சமவெளி அகழாய்வில் கிடைத்த குறியீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இரண்டுக்கும் இடையே சுமார் 90 சதவீதம் அளவுக்கு ஒற்றுமை உள்ளது. இது சிந்து சமவெளிக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருப்பதை காட்டுவதாக புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது. அது என்ன ஆய்வு? அந்த ஆய்வு கூறுவது என்ன? விரிவாக பார்ப்போம்.

சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டு நூறாண்டு ஆகிறது. இந்த நூற்றாண்டு நிறைவு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சிந்துவெளிப் பண்பாட்டைக் கண்டுபிடித்து அறிவித்த பிரிட்டிஷ் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷலின் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘Indus Signs and Graffiti Marks of Tamilnadu: A morphological Study’ என்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கே. ராஜனும் ஆர். சிவானந்தமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வை வெளியிட்டார். இந்த ஆய்வு முடிவு பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.

இந்த ஆய்வு முடிவுகளில், “சிந்துவெளி நாகரீகத்தில் கிடைக்கும் எழுத்துகள், குறியீடுகளுக்கும் தமிழ்நாடு, தென்னிந்தியாவில் கிடைத்த பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் பெருமளவு ஒற்றுமை இருப்பது தெரிய வந்துள்ளது. சிந்து சமவெளியில் வளர்ச்சியடைந்த ஒரு எழுத்து முறை இருந்தது பல ஆதாரங்களின் மூலம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எழுத்துகள், முத்திரைகள், மட்பாண்ட ஓடுகள், உலோகப் பொருட்கள் ஆகியவற்றில் இருந்து கிடைத்தன. இம்மாதிரி கிடைத்த 4,000 பொருட்களில் இருந்து சுமார் 450 தரப்படுத்தப்பட்ட குறியீடுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக எழுத்து வடிவத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் சித்திர எழுத்துகள், பிறகு ஒரு கருத்தை வெளிப்படுத்துவதைப் போன்ற சித்திரங்கள், அதன் பின் ஒரு வார்த்தையை குறிக்கும் வகையிலான முத்திரைகள் இறுதியாக ஒரு ஒலியைக் குறிப்பிடும் எழுத்துகள் என வளர்ச்சியடைகின்றன. சிந்துவெளியில் கிடைத்த தரப்படுத்தப்பட்ட குறியீடுகளைப் பொறுத்தவரை, அவை சித்திரங்களை எழுத்தாகப் (Logo-syllabic) பயன்படுத்தும் எழுத்து முறையை சார்ந்தவை என்றே பலரும் கருதுகிறார்கள்.

சிந்து சமவெளியில் கிடைத்த வாக்கியங்கள் 4-5 குறியீடுகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. 50க்கும் மேற்பட்ட வாக்கியங்களில் பத்து குறியீடுகள் இருந்தன. தோலாவிராவில் கிடைத்த ஒரு பலகையில் 10 எழுத்துகள் இருந்தன. இதுவரை கிடைத்தவற்றிலேயே மிக நீளமான வாக்கியத்தில் 26 எழுத்துகள் இருந்தன.

சிந்துவெளி எழுத்துகள் பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகவில்லை என்பது சிந்துவெளி குறியீடுகளில் இருக்கும் மற்றொரு முக்கியமான அம்சம். அந்த பரிணாம வளர்ச்சிக் கட்டத்தை அடைவதற்கு முன்பாகவே அவை தரப்படுத்தப்பட்டுவிட்டன. மேலும், பிராந்திய ரீதியான வேறுபாடுகளும் அக்குறியீடுகளில் இல்லை.

கமில் ஸ்வலபில், அஸ்கோ பர்போலா, சுனிதி குமார் சாட்டர்ஜி ஆகியோர் சிந்துவெளி குறியீடுகள் தொல் திராவிட மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள். ஆனால், வேறு சில ஆய்வாளர்கள் அவை இந்தோ – ஐரோப்பிய மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள்.

மைக்கல் மிட்சல், ஸ்டீவ் ஃபார்மர் போன்றவர்கள் அவை எந்த மொழியையும் சார்ந்தவை அல்ல, வெறும் குறியீடுகள் மட்டுமே என்கிறார்கள். பகதா அன்சுமாலி முகோபத்யாய், இந்தக் குறியீடுகள் பொருளியல் சார்ந்த வடிவவியலைக் கொண்டவை என்றும் அவற்றுக்கு ஒலி கிடையாது என்றும் சொல்கிறார்கள்.

இங்ஙனம் சிந்துவெளி எழுத்துகளைப் புரிந்துகொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஐராவதம் மகாதேவன், பகதா அன்சுமாலி முகோபத்யாய் ஆகியோர் இதில் சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம், சிந்து சமவெளி நாகரீகத்தை திராவிட கலாசாரத்துடன் இணைத்து ஆராய்வதிலும் பல ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகவே சிந்துவெளி குறியீடுகளையும் தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த குறியீடுகளையும் இந்த ஆய்வு ஆராய்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 140 தொல்லியல் தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 15,184 பானை ஓடுகளில் இருந்து, 14,165 பானை ஓடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2,107 குறியீடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அதிலிருந்து 42 குறியீடுகள் அடிப்படைக் குறியீடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 544 குறியீடுகள் அவற்றின் வேறுபாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி தொகுத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் கிடைத்த பல குறியீடுகள் சிந்து வெளி எழுத்துகளுக்கு இணையாக விளங்குகின்றன என்கிறது. தமிழ்நாட்டில் வகைப்படுத்தப்பட்ட 42 குறியீடுகள், அவற்றை ஒத்த குறியீடுகளில் 60 சதவீத குறியீடுகளுக்கு இணை எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளில் கிடைத்துள்ளன. இவை தற்செயலாக நடந்திருக்க முடியாது.

மேலும், சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் எவ்வித தடயங்களும் இல்லாமல் மறைந்திருக்காது என்ற அடிப்படையில் அவை வெவ்வேறு வடிவங்களாக மாறியிருக்கும் அல்லது பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கும்.

தென்னிந்தியாவில் ஒரே வகையான குறியீடுகள் கிடைப்பது, தென்னிந்தியாவுக்கும் சிந்துவெளி நாகரீகத்துக்கும் இடையில் இருந்த ஒருவித பண்பாட்டுத் தொடர்பைக் குறிப்பதாக இருக்கிறது. ஆனால், இதை உறுதிசெய்யக் கூடுதல் ஆய்வுகள் தேவை.

சிந்துவெளி பண்பாடு செப்புக் காலத்தில் இருந்தபோது, தென்னிந்தியா இரும்புக் காலத்தில் இருந்தது. ஆகவே, இரு பகுதிகளுக்கும் இடையில் நேரடியாகவோ இடைநிலை மண்டலங்கள் வழியாகவோ பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம். தென்னிந்தியாவில் உள்ள இரும்புக் கால கல்லறைகளில் கிடைக்கும் சூது பவளம், அகேட் மணிகள், செப்பு, வெண்கலப் பொருட்கள் ஆகியவை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்திருக்கலாம்.

சிந்து சமவெளி நாகரீகம் முடிவுக்கு வந்ததற்கு காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தபோது, அவர்கள் தங்களுடன் தங்கள் மொழி, கலாசாரம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர்” என்கிறது இந்த ஆய்வு.

சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகள் அல்லது எழுத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழியைக் கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் டாலர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...