திபெத்தில் உள்ள புத்த மத மற்றும் இந்து மத புனித தலங்களை பார்வையிட இந்திய யாத்தீரிகர்கள் வரலாம் என சீன வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கரோனா தொற்று பரவியதாலும், எல்லையில் நடந்த மோதல் காரணமாக இந்தியா – சீனா இடையே உறவுகள் பாதித்ததாலும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்திய யாத்தீரிகள் சீன எல்லையை கடந்து திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரி போன்ற புனித தலங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசினர். இதையடுத்து இந்தியா – சீனா இடையேயான உறவுகள் சீரடையத் தொடங்கின. கடந்தாண்டு டிசம்பர் மாதம் இருதரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6-அம்ச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் இந்திய யாத்ரீகர்கள் மீண்டும் திபெத் வருவதை ஊக்குவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதன்பின் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சீனா சென்றார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் நிலவிய தடைகளை நீக்கவும், நேரடி விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.