சாதனைப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார் பிரக்ஞானந்தா. அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு அவர் முன்னேறி இருக்கிறார். நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை வென்று இந்த இடத்தை எட்டியுள்ளார். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இந்திய வீர்ர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா.
இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீர்ரான மாக்னஸ் கார்ல்சனை அவர் சந்திக்கவுள்ளார். இதிலும் வெற்றிபெற்றால், இந்தியாவுக்கு செஸ் உலகக் கோப்பையை பெற்றுத்தரும் இளம் வீர்ர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைப்பார்.
சென்னை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னையைச் சேர்ந்த இளைஞரான பிரக்ஞானந்தா சாதனைப் பயணத்தின் உச்சகட்டத்தில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
சென்னையில் உள்ள வேலம்மாள் பள்ளையில் படித்தவர்தான் பிரக்ஞானந்தா. அவரது அப்பா ரமேஷ் பாபு ஒரு வங்கி மேலாளர். பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலி, தேசிய அளவில் சிறந்த செஸ் வீர்ர். பிரக்ஞானந்தா குழந்தையாக இருந்தபோது, அவரது அக்கா போட்டிகளுக்காக வீட்டில் பயிற்சி எடுக்க, அதைப் பார்த்து பிரக்ஞானந்தாவுக்கும் செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதை உணர்ந்த அவரது அப்பா ரமேஷ் பாபுவும், அம்மா நாகலட்சுமியும் அவருக்கு செஸ் விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி அளிக்க தீர்மானித்துள்ளனர். 3 வயதிலேயே செஸ் விளையாடத் தொடங்கிய பிரக்ஞானந்தாவை ப்ளூம் செஸ் அகாடமியில் பயிற்சிக்காக சேர்த்துள்ளனர்.
ஆரம்பத்தில் சிறு போட்டிகளில் வென்ற பிரக்ஞானந்தா, வெகு விரைவில் தேசிய மற்றும் சர்வதேச செஸ் போட்டிகளில் பட்டங்களை வெல்லத் தொடங்கினார். ஆசிய அளவில் நடந்த போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களையும், உலக ஜூனியர் அளவில் நடந்த செஸ் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களையும் வென்ற பிரக்ஞானந்தா, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.
தனது செஸ் பயணத்தைப் பற்றி முன்னர் ஒரு பேட்டியில் கூறியுள்ள பிரக்ஞானந்தா, “நான் தினமும் 5 மணிநேரம் செஸ் ஆடி பயிற்சி பெறுவேன். அதே நேரத்தில் படிப்பிலும் கவனம் செலுத்துவேன். 5 மணிநேரம் செஸ் ஆடி பயிற்சி பெறும் நான், 1 மணிநேரம் படிப்புக்காக ஒதுக்குவேன். தேசிய அளவில் சிறந்த செஸ் வீராங்கனையான என் சகோதரியுடனும், கம்ப்யூட்டருடனும் செஸ் ஆடி பயிற்சி பெறுவது என் வழக்கம். பொதுவாக காலை நேரத்தைவிட மாலை மற்றும் இரவு நேரத்தில்தான் நான் அதிகமாக செஸ் பயிற்சிகளை மேற்கொள்வேன்” என்று சொல்லியிருக்கிறார்.
உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா ஆடும் ஒவ்வொரு போட்டியின்போதும் அரங்கத்துக்கு வந்து அவரை உற்சாகப்படுத்தி வருகிறார் அவரது அம்மா நாகலட்சுமி. சேலையில் மிக எளிமையாக வந்து அரங்கத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவர் பிரக்ஞானந்தாவை ஊக்குவிப்பது பலரையும் கவர்ந்துள்ளது. ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான காரி காஸ்பரோவ், பிரக்ஞானந்தாவின் அம்மாவைப் பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதே இதாற்கு உதாரணம்.