No menu items!

சென்னைக்கு புதிய கமிஷனர் அருண் ஐபிஎஸ் – முதல்வரின் நேரடி தேர்வு!

சென்னைக்கு புதிய கமிஷனர் அருண் ஐபிஎஸ் – முதல்வரின் நேரடி தேர்வு!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து சென்னையின் காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரித்து இருந்தும் போலீஸார் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்காதது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சென்னையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டு வைத்தன.

இந்த சூழலில் சென்னை கமிஷனரான சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியான அருண் புதிய கமிஷனாராக நியமிக்கப்பட்டார். சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவரின் சிறப்பு என்ன?

அருண் ஐபிஎஸ் வகித்த பல பதவிகள் சட்டம் ஒழுங்கு சார்ந்தவை. அதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அது மட்டுமல்ல கண்டிப்பான அதிகாரி என்ற பெயரும் அவருக்கு உண்டு. அவர் இதுவரை வகித்த இடங்களில் அவரது கண்டிப்பான அணுகுமுறை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு மட்டுமில்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பும் அரவணைப்பும் தந்துக் கொண்டிருந்த காவல்துறையினருக்கும் இனி கஷ்ட காலம் என்கிறார் அவரை நன்கு அறிந்தவர்கள்.

அருணை சென்னை மாநகர காவல்துறை ஆணையராக முதல்வர் ஸ்டாலினே நேரடியாக தேர்ந்தெடுத்தார் என்று கூறப்படுகிறது. பொதுவாய் உள்துறை செயலர், தலைமைச் செயலர், மூத்த அமைச்சர்கள் ஆலோசனைக்குப் பிறகுதான் முதல்வர் இது போன்ற முடிவுகளை எடுப்பார். ஆனால் இந்த முறை அவரே முடிவை எடுத்துவிட்டு மற்றவர்களுக்கு சொன்னார் என்றும் தகவல் இருக்கிறது.

அருண் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை:

சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண், அடிப்படையில் பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். பின்னர், 1998ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை அதிகாரி ஆனார். ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற பிறகு   நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றினார். பின்னர் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்ட அருண், அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார. மேலும் தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றினார் அருண்.

2016 ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் அருண். தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.

2021-ம் ஆண்டில்  மத்திய பகுதியான திருச்சி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.  பின்னர், சென்னை காவல்துறை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்ட அவர், 2021ம் ஆண்டு திருச்சி போலீஸ் கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டார். பின்னர், தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு 2022ம் ஆண்டு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து, ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்தாண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இப்போது  சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடைடையே தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...