பெருநகர சென்னை மாநகராட்சி, நகரின் இரு முக்கிய மேம்பாலங்களின் கீழ்ப்பகுதிகளைப் புனரமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. தி.நகர் மற்றும் ஆழ்வார்பேட்டைப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த மேம்பாலங்களின் அடியில், ₹7.5 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதசாரிகளின் வசதிக்கு ஏற்ப சாலைகளை ஒழுங்குபடுத்தவும் சென்னை மாநகராட்சி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தி.நகர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள பகுதிகளை புதுப்பிக்க தொடங்கியுள்ளது.
நகர்ப்புறப் பகுதிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள இடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காகப் பொதுச் சேவைகளை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட உஸ்மான் சாலை – மகாலிங்கபுரம் சாலை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை ₹3.75 கோடி செலவில் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், இருசக்கர மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் (டான்ஜெட்கோ) இணைந்து இச்சேவை உருவாக்கப்படும். மேலும், இருசக்கர வாகனங்களுக்கெனப் பிரத்யேகப் பார்க்கிங் வசதியும், உள்ளூர் வணிகங்களுக்கு ஐந்து வணிகக் கடைகளும் இங்கு அமையும்.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எட்டு பொதுக் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. இதில் மூன்று ஆண்களுக்கும், மூன்று பெண்களுக்கும், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும். பயணிகளின் வசதிக்காக ஆர்.ஓ. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படும். மேம்பாலத்தின் அடியில் உள்ள யூ-டர்ன், ஆட்டோ நிறுத்துமிடங்கள் அல்லது ஆம்புலன்ஸ் நிறுத்துமிடங்கள் போன்ற தற்போதுள்ள கட்டமைப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மறுசீரமைக்கப்பட்ட பகுதி மரங்கள், செடிகள், அலங்கார விளக்குகள் மற்றும் சாலை இருக்கைகளுடன் அழகுபடுத்தப்பட்டு, பாதசாரிகளுக்கு உகந்த சூழலை உருவாக்கும். பொது இருக்கைகள் மற்றும் பார்வையற்றோருக்கான தொடு உணர்வுத் தரைத்தளமும் நிறுவப்படும்.
இப்பகுதி உறுதியாகவும், தூய்மையாகவும் இருக்க, தரைத்தளமும், மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பு மற்றும் வழித்தட அடையாளங்களுக்காக சிசிடிவி கேமராக்களும் வழித்தடப் பலகைகளும் பொருத்தப்படும். இதேபோன்றதொரு ₹3.75 கோடி மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலை – சி.பி. ராமசாமி சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஆழ்வார்பேட்டைப் பகுதியில் மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் இடம்பெறாது. அதற்குப் பதிலாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட பார்க்கிங் வசதி, வணிகக் கடைகள், அழகுபடுத்தும் பணிகள், இருக்கை வசதிகள் மற்றும் அலங்கார விளக்குகள் வழங்கப்படும். சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிகால் உள்கட்டமைப்பும் செயல்படுத்தப்படும்.