பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் தங்கள் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்ததுதான் இன்றைய ஹாட் நியூஸ். காலையில் எழுந்து ட்விட்டர் பக்கத்தை பார்த்தவர்களுக்கு ‘என் ப்ளூ டிக்கை காணோம்’ என்ற பிரபலங்களின் புலம்பல்தான் ட்விட்டரில் கண்களில் பட்டிருக்கும்.
அது என்ன ப்ளூ டிக்?
சமூக வலைதளமான ட்விட்டரில் 2009-ம் ஆண்டில் ப்ளூ டிக் அறிமுகப்படுத்தப்பட்டது. ட்விட்டரின் இந்த நீலக் குறியீட்டை பலர் அங்கீகாரமாக அந்தஸ்த்தாக பார்த்தார்கள். புகழ்பெற்ற ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஊடக பிரபலங்கள் என பலருக்கு ட்விட்டர் தளம் நீலக் குறியீட்டை கொடுத்து சிறப்பு அங்கீகாரம் வழங்கியது. இதற்காக அவர்கள் தனியாக கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் மோடி, விராட் கோலி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றவர்கள்.
இப்போது அவர்கள் அனைவரது ப்ளூ டிக்கையும் பிடுங்கிவிட்டார் எலன் மஸ்க். காலையிலிருந்து ட்விட்டரில் புலம்பல் சத்தம்தான் அதிகமாக இருக்கிறது.
கடந்த வருடம் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார். மிக முக்கியமான மாற்றமாக ப்ளூ டிக் கொடுக்கப்பட்ட பயனாளிகளிடம் இருந்து அதற்காக சந்தா பெற தீர்மானிக்கப்பட்டது. இந்த புது விதிபடி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் பணத்தைக் கொடுத்து பந்தாவாக ப்ளூ டிக் வாங்கிக் கொள்ளலாம். இதற்கான கட்டணமாக மாதம் 8 டாலர்கள் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
இப்படி சந்தா செலுத்தி ப்ளூ டிக்கை வாங்குபவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. ட்விட்டரில் ஒருவர் அதிகபட்சமாக 140 எழுத்துக்கள் கொண்ட பதிவைத்தான் எழுத முடியும். ஆனால் ப்ளூ டிக் வாங்கியவர்கள் 140 எழுத்துக்களுக்கும் அதிகமான வார்த்தைகளைக் கொண்டு ட்விட்டரில் எழுத முடியும். அத்துடன் ட்விட்டரில் பதிந்த செய்திகளில் சில வரிகளை மாற்றுவது, சில வார்த்தைகளுக்கு மட்டும் அதி அழுத்தம் கொடுத்து (Bold) அதை கவனிக்க வைப்பது போன்ற விஷயங்களைச் செய்ய முடியும்.
இதை சிலர் ரசித்தாலும், ட்விட்டரின் சிறப்பம்சமே குறைந்த வார்த்தைகளில் தகவல்களை பதிவிடுவதுதான். நீண்ட வரிகளில் பதிவிடுவதால் அதன் தனித்தன்மையே மாறிவிட்டது என்று சிலர் விமர்சிக்கவும் செய்தனர்.
கட்டணம் செலுத்தி ப்ளூ டிக்கை தக்கவைக்க ஏப்ரல் மாதம் வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின்னர் சந்தா செலுத்தப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்றுடன் அந்த காலக்கெடு முடிந்த நிலையில் சந்தா செலுத்தாத பல பிரபலங்களின் ப்ளூ டிக் அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளது.
எலன் மஸ்கின் காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று காலையில் பல பிரபலங்கள் ட்விட்டரில் தங்கள் ப்ளூ டிக்கை இழந்திருந்தனர். போப் பிரான்ஸிஸ், பில் கேட்ஸ் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் முதல், சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி, ஷாரூக் கான், ரோஹித் சர்மா, முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய், எஸ்டிஆர், குஷ்பு உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் தங்கள் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்திருக்கிறார்கள்.
கட்டணம் செலுத்தாத பலரது ப்ளூ டிக்கை ட்விட்டர் அகற்றிய நிலையில், தனக்கு பிடித்த ஒரு சில பிரபலங்களுக்கு மட்டும் எலான் மஸ்கே கட்டணம் செலுத்தி அவர்களுக்கு ப்ளூ டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டு நடிகர் வில்லியம் ஷட்னர் (William Shatner), அமெரிக்க பேஸ் பால் ஆட்டக்காரர் லீப்ரான் ஜேம்ஸ் (LeBron James), எழுத்தாளர் ஸ்டீபன் கிங் (Stephen King) ஆகிய மூன்று பிரபலங்களுக்கு எலன் மஸ்க்கே பணம் செலுத்தி ட்விட்டர் ப்ளூ டிக்கை தக்க வைத்துக் கொடுத்திருக்கிறார்.