‘கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்’ என்பார்கள். இங்கே கேரளாவில் ஒருவருக்கு உண்டியலை உடைத்துக்கொண்டு கொட்டியிருக்கிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு நடத்திய லாட்டரி குலுக்கலில் கேரளாவில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனூப்புக்கு 25 கோடி ரூபாய் பம்பர் அடித்திருக்கிறது. கடன் தொல்லை தாங்காமல் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த லாட்டரி மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார் அனூப்.
சரி… இதற்கும் உண்டியலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?… அவர் லாட்டரி வாங்கிய கதையைக் கேட்டால் இரண்டுக்குமான சம்பந்தம் புரியும்.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவரான அனூப், முன்பு சாலையோர ஓட்டல் ஒன்றில் சமையல்காரராக இருந்துள்ளார். திருமணமான அனூப்புக்கு மாயா என்ற மனைவியும், அத்வைத் என்ற மகனும் உள்ளனர்.
சமையல் வேலை செய்து குடும்பத்தை நடத்த முடியாததால், அதை விட்டு ஆட்டோ ஓட்டத் தொடங்கியுள்ளார் அனூப். அதிலும் போதிய வருமானம் இல்லாததால், மலேசியா சென்று அங்கு அங்கு ஒரு உணவு விடுதியில் சமையல்காரராக சேர திட்டமிட்டு விசாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
இவர் மலேசியா செல்வதற்காக, கூட்டுறவு வங்கியில் 3 லட்சம் கடனுக்கும் விண்ணப்பித்திருந்தார். அனூப்புக்கும் மாயாவுக்கும் லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர்கள் இம்முறை, ஓணம் பம்பர் லாட்டரி வாங்க திட்டமிட்டிருந்தனர். அதன் விலை 500 ரூபாய். ஆனால் அனூப்பிடம் அவ்வளவு பணம் இல்லை. இதனால் தங்கள் மகனுக்காக ஆசை ஆசையாய் பணம் போட்டுவந்த உண்டியலை உடைத்துள்ளனர்.
அந்த பணத்தில் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்குத்தான் 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்துள்ளது. அனைத்து வரிகளையும் கழித்து அவர் வென்றிருப்பது 15.75 கோடி. சாதாரண வாழ்க்கையில் இருந்து அனூப் குடும்பத்தினரை ஒரு லாட்டரி கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது.
இதுகுறித்து கூறும் அனூப், “நான் 22 வயதிலிருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறேன். இதுவரை பல முறை பரிசு அடித்துள்ளது ஆனால் 2,000 ருபாய்க்கு மேல் ஜெயித்ததில்லை. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த முறை முதலில் ஒரு சீட்டை எடுத்தேன். ஆனால் அதன் நம்பர் எனக்கு பிடிக்கவில்லை. பின்னர் மற்றொரு நம்பர் பேன்சி நம்பராக தோன்றியதால் அந்த லாட்டரிச் சீட்டை எடுத்தேன்” என்கிறார்.
நல்லகாலம் வரும்போது எல்லாம் கூடிவரும் என்பார்கள். அனூப் விஷயத்தில் அது உண்மையாக இருக்கிறது. அனூப்புக்கு லாட்டரி அடித்த அதேநேரத்தில் வங்கியில் அவர் கேட்டிருந்த 3 லட்ச ரூபாய் கடனும் அப்ரூவ் ஆகியுள்ளது. பம்பர் அடித்ததால், இப்போது அந்த கடனை நிராகரித்துள்ளார் அனூப்.