சுதந்திர தினத்தை முன்னிட்டு குஜராத் அரசு 11 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்துள்ளது. அதனையடுத்து இணையத்தில் கடந்த இரண்டு தினங்களாக டிரண்டிங்கில் இருக்கும் பெயர் பில்கிஸ் பானு (Bilkis Bano).
யார் இந்த பில்கிஸ் பானு?
11 பேர் விடுதலைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
பில்கிஸ் யாகூப் ரசூல் பானு, குஜராத்தில் வாழ்ந்து வந்த சாதாரண முஸ்லிம் பெண். 2002 குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நடந்த கலவரத்தில் 11 கலவரக்காரர்களால் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டவர். அந்த சமயத்தில் அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருடன் இவரது 3 வயது குழந்தையையும் கலவரக்காரர்கள் கொன்றனர். இவரைக் கொன்றவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்தார்கள். இப்போது 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குஜராத அரசால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் இப்போதைய சர்சைக்கு காரணம்
2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி குஜராத் கலவரம் தீவிரம் அடைந்தபோது தனது 3 வயது குழந்தை, குடும்பத்தார் 15 பேருடன், அவர் வாழ்ந்த ராதிக்பூர் கிராமத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற முயற்சி செய்திருக்கிறார் பில்கிஸ். மறைவிடங்களில் ஒளிந்து ஒளிந்து கலவரக்காரர்களுக்கு பயந்து சென்றிருக்கிறார்கள் பில்கிஸ் குழுவினர். ஆனால் மார்ச் 3ஆம் தேதி கலவரக்காரர்களிடம் சிக்கிவிட்டார்கள்.
பில்கிஸ் பானு ஒளிந்திருந்த இடத்தில் நுழைந்த கலவரக்காரர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கி கொன்றிருக்கிறார்கள். பில்கிஸ் பானுவின் மூன்று மாத குழந்தையையும் அவர் கையிலிருந்து பிடுங்கி, பாறை ஒன்றின் மேல் வீசி கொடூரமாக கொலை செய்தனர். இந்தக் கொடூரங்களை செய்த பிறகு 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை 11 பேர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அப்போது பில்கிஸ் பானுவுக்கு வயது 21.
பில்கிஸ் பானு இறந்துவிட்டார் என்று நினைத்து அங்கிருந்து சென்றனர் அந்தக் கொடூரர்கள். ஆனால் பில்கிஸ்ஸும் இன்னொருவரும் குழந்தை ஒன்றும் தப்பி பிழைத்திருக்கிறார்கள்.
அங்கிருந்து தப்பிய பில்கிஸ்க்கு ஒரு ஆதிவாசிப் பெண் உதவியிருக்கிறார். ஆடைகளை கொடுத்திருக்கிறார். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பில்கிஸ்.
பல சட்டப் போராட்டங்களுக்கு பிறகு 2002இல் நடந்த இச்சம்பவத்திற்கு 2008இல் தீர்ப்பு கிடைத்தது. 19 பேர் மீது பாலியல் வன்கொடுமைக்காகவும், அதனை மறைக்க முயன்றதாக 6 காவலர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
2019ஆம் ஆண்டில், மும்பை உச்ச நீதிமன்றம் பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக 50 லட்சம் பணமும், அவர் விரும்பிய வேலை மற்றும் தங்குமிடத்தையும் வழங்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. இது, இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தில் இருந்து மீண்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச இழப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு துவக்கத்தில் 11 கைதிகளும் தாங்கள் 14 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டோம் எங்களை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். உச்ச நீதிமன்றம் மாநில அரசு முடிவு செய்யலாம் என்று கை காட்டியது.
அதனைத் தொடர்ந்து சிறையில் 14 வருடங்களை கழித்துவிட்டார்கள் என்று அவர்களை விடுவிக்க குஜராத் பாஜக அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட ஒரு கமிட்டி ஒருமனதாக முடிவு செய்து சிறையிலிருந்து விடுவித்திருக்கிறது. சிறையில் நன்நடத்தை, 14 ஆண்டுகள் சிறையில் பூர்த்தி செய்தது என பல காரணங்களை காட்டுகிறது குஜராத் அரசு தரப்பு.
மிகக் கொடூரமாக நடந்துக் கொண்ட இவர்களை விடுவிப்பதா என்று இந்தியா முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன.