கிரிக்கெட்டில் ஞானக் குழந்தை என்று சச்சின் டெண்டுல்கரை சொல்வார்கள். 16 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் ஆட வந்ததால் அவர் கிரிக்கெட்டின் ஞானக் குழந்தையாக பார்க்கப்பட்டார். இப்போது அவரையும் விஞ்சி ஒரு ஞானக் குழந்தை கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைந்திருக்கிறது. அந்த குழந்தையின் பெயர் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலத்தில் 1.10 கோடி ரூபாய் கொடுத்து வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
வைபவ் சூர்யவன்ஷி பீஹார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூரில் 2011-ம் ஆண்டில் பிறந்தவர். சிறு வயது முதலே வைபவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். இதைப் பார்த்த அவரது தந்தை, 5 வயதாக இருக்கும்போதே வைபவை கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்திருக்கிறார். அன்றிலிருந்து வைபவுக்கு எல்லாமே கிரிக்கெட் என்று ஆகிவிட்டது.
கடகடவென கிரிக்கெட்டில் வளர்ந்த வைபவ், 2023-ம் ஆண்டிலேயே தனது 12-வது வயதில் கூச் பிஹார் கோப்பைக்கான போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆடியிருக்கிறார். அதன் பிறகு அந்த ஆண்டிலேயே 6 மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் மூத்த வீர்ர்களுடன் ஆடி எல்லோரையும் கவனிக்க வைத்திருக்கிறார்.
கவாஸ்கர், சச்சின் என்று இந்திய கிரிக்கெட் வீர்ர்கள் பலருக்கும் சாதனைத் தலமாக விளங்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம்தான் வைபவையும் இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 58 பந்துகளில் சதம் அடித்து பலரையும் கவர்ந்தார். அந்த கவர்ச்சிதான் இன்று ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு 1.10 கோடி ரூபாய் கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது.
வைபவின் கிரிக்கெட் பயணத்தைப் பற்றி சொல்லும் அவரது அப்பா சஞ்சீவ், “அவன் இந்த பீஹார் மண்ணின் மகன். அவனது கிரிக்கெட் பயிற்சிக்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். அவனுக்கு சிறந்த பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எனது வயலை விற்று பயிற்சி மையத்தில் சேர்த்தேன். பல இடங்களில் கடன் வாங்கினேன். வேலைக்குக்கூட போகாமல் அவன்கூடவே பயிற்சி மையங்களுக்கு அலைந்தேன். அந்த வகையில் எனக்கு இன்னும் பொருளாதார பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் என் மகன் தனது கிரிக்கெட் ஆற்றலால் அந்த சிரமங்களுக்கு பரிகாரம் தேடித் தந்துள்ளான். தனது 8 வயதில் இருந்தே அவன் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறான். இன்று மிகப்பெரிய வீர்ர்களுடன் அவன் ஐபிஎல் தொடரில் ஆடப் போவதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது” என்கிறார்.
வைபவை பற்றிச் சொல்லும் பிஹார் அணியின் கிரிக்கெட் பயிற்சியாளரான பிரமோத் குமார், “வைபவ் கிரிக்கெட் ஆடுவதற்காகவே இந்த உலகில் பிறந்தவன். அவனுக்கு கிரிக்கெட்டை தவிர வேறு எந்த விஷயமும் தெரியாது. மற்ற வீர்ர்கள் எல்லாம், இடைவேளைகளின்போது ஓய்வு எடுப்பார்கள். ஆனால் வைபவ், அந்த நேரத்தில்கூட கிரிக்கெட்டைப் பற்றி என்னிடம் விவாதித்துக்கொண்டு இருப்பான். ஃபீல்டிங் பயிற்சிகளில் ஈடுபடுவான். இல்லாவிட்டால் வலைப்பயிற்சியில் ஈடுபடுவான். அந்த முயற்சியின் பலனாகத்தான் இன்று அவனுக்கு ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகை கிடைத்துள்ளது. அவனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது” என்கிறார்.