செய்தி தொலைக்காட்சிகளைப் பார்த்தால் பகீர் என்றிருக்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கடும் மழை. வரலாறு காணாத மழை இருக்கும் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
உண்மையில் தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன? கடுமையான மழை இருக்குமா? அல்லது சலசல மழை மட்டும்தானா?
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று மதியம் செய்தியாளர்களிடம் சொல்லியதைப் பார்ப்போம். “தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.” இதுதான் பாலசந்திரன் சொன்னது. இங்கே கவனிக்க வேண்டியது லேசானது முதல் மிதமான மழை என்றுதான் குறிப்பிடுகிறார். ஆனால் கன மழை பெய்யும் இடங்களையும் குறிப்பிடுகிறார்.
”அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று குறிப்பிடுகிறார்.
சரி, சென்னைக்கு மழை எப்படியிருக்கும்?
”சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 26 ஆம் தேதி அந்தமான் கடற்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக கூடும். இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்”
இதுதான் வானிலை மண்டல இயக்குநர் சொன்னது.
இன்று சென்னையில் பெய்த மழையின் காரணமாக 22 விமானங்கள் தாமதமாக புறப்பட்டிருக்கின்றன. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருக்கிறது. இதைத் தாண்டி நவம்பர் மழை சென்னையை அதிகம் பாதிக்கவில்லை.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21ல் துவங்கியது. அன்றிலிருந்து இன்று வரை மழை சதவீதம் இயல்பைவிட குறைவு என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இந்த வருட மழை சுமார் 15 சதவீதம் குறைவாம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை 24 செ.மீ பெய்திருக்கிறது. இக்காலகட்டத்தில் இயல்பு அளவு 31 செ.மீ. என இயல்பை விட 15% குறைவாக பருவமழை பெய்திருக்கிறது.