பொதுவாக பல காலமாகவே தென்னிந்திய சினிமாவுக்கும் பாலிவுட் சினிமாவுக்கும் எப்போதுமே பனிப்போராக சில சம்பவங்கள நடந்து கொண்டிருக்கும். இது பல காலங்களாகவே இருந்து வருகிறது. சமீப சில ஆண்டுகளாக தென்னிந்திய திரைபப்டங்கள் தொடர்ந்து பாலிவுட்டில் வெளியாகி நல்ல வசூலை எட்டி வருகின்றன. இதனால் தென்னிந்திய சினிமாவுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு உருவாகியிருக்கிறது.
பாலிவுட்டில் உருவாகும் பெரும்பான்மையான திரைப்படங்கள் வணிக ரீதியான நோக்கத்தொடு எடுக்கப்படுகின்றன. இதற்கிடையில் அனுராக் காஷ்யப் போன்ற இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் விருதுக்குரிய படங்களாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அனுராக் காஷ்யப் பாலிவுட் திரைப்படங்கள் குறித்தும் நடிகர்கள் குறித்தும் பேசியிருக்கும் கருத்து பரபரப்பை எற்டுத்தியிருக்கிறது.
அனுராக் காஷ்யப் தான் சார்ந்திருக்கும் இந்தி திரையுலகை கடுமையாக சாடியுள்ளார். “பாலிவுட் திரையுலகை நினைத்து அருவருப்பாக உணர்கிறேன்” என அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய தயாரிப்பாளர் லாபத்தின் அளவுகோலில் குறியாக இருக்கும்போது, அதிக பொருட்செலவிலான பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வது எனக்கு கடினமாக இருக்கிறது. படம் தொடங்கும் முன்பே அதனை எப்படி வியாபாரம் செய்வது என்பது குறித்து யோசிக்கிறார்கள். அதனால் திரைப்படங்களை இயக்குவதில் இருக்கும் மகிழ்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால் நான் மும்பையிலிருந்து வெளியேறலாம் என முடிவு செய்திருக்கிறேன். தென்னிந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன். எங்கே எனக்கு உத்வேகம் எங்கு கிடைக்குமோ அங்கு செல்ல உள்ளேன்.
முதல் தலைமுறை நடிகர்கள் மற்றும் உண்மையில் உச்ச நடிகர்களை சமாளிப்பது மிகவும் வேதனையானது. அவர்கள் யாரும் நடிக்க விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் நட்சத்திரங்களாகவே இருக்க விரும்புகிறார்கள். நிறுவனம் யாரையும் ஸ்டார் ஆக்காது, ஆனால் ஒருவர் நட்சத்திரமாக மாறிய தருணத்தில், நிறுவனம் அவர்களிடமிருந்து பணம் சம்பாதிக்கிறது. திறமையைக் கண்டறியும் பொறுப்பு நம்முடையது. நாம் ரிஸ்க் எடுத்து 50 பேருடன் போராட வேண்டும்.
மேலும் படம் தயாரிக்கப்படும்போது, நிறுவனம் அவர்களைப் பிடித்து ஒரு ஸ்டார் ஆக மாற்றுகிறது. அவர்களை மூளைச் சலவை செய்து ஸ்டார் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அவர்கள் அவர்களை நடிப்பு பயிற்சிக்கு அனுப்ப மாட்டார்கள், ஆனால் ஜிம்முக்கு அனுப்புவார்கள். இவை அனைத்துமே கவர்சிக்காக மட்டுமே, ஏனென்றால் அவர்கள் மிகப் பெரிய ஸ்டார்களாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.