இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அஞ்சுமன் கெய்க்வாட், புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 71.
1975 முதல் 1987-க்கு உட்பட்ட காலத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர் அஞ்சுமன் கெய்க்வாட். இந்த காலகட்டத்தில் 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கெய்க்வாட், 1985 ரன்களை எடுத்துள்ளார். 15 ஒருநாள் போட்டிகளில் 269 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஹெல்மெட் இல்லாத, பவுன்சருக்கு கட்டுப்பாடுகள் இல்லாத காலகட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் அவர் 81 ரன்களை எடுத்தது அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அக்காலகட்டத்தில் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து அவரது காதில் பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கும் கெய்க்வாட் தள்ளப்பட்டார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும் சுமார் 2 ஆண்டுகள் இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட் இருந்தார்.
இந்திய அணிக்காக பல ஆண்டுகள் ஆடியபோதிலும், பயிற்சியாளராக பணியாற்றி இருந்தாலும், இப்போதைய கிரிக்கெட் வீர்ர்களைப் போல அவரால் அதிக அளவில் பணம் சம்பாதிக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ரத்த புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில் லண்டனில் அதற்காக சிகிச்சை மேற்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாமல் தவித்தார்.
கெய்க்வாட்டின் இந்த நிலையை கேள்விப்பட்ட முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ், தனது பென்ஷன் பணத்தில் இருந்து ஒரு பங்கை கெய்க்வாட்டின் சிகிச்சைக்காக கொடுக்க முன்வந்தார். உயிருக்கும் போராடும் ஒரு முன்னாள் வீரருக்கு உதவாத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் கடுமையாக விமர்சித்தார்.